ஆதார் கார்ட் திட்டத்திற்கு ஆப்பு வைத்தது சுப்ரீம் கோர்ட்!

ஆதார் கார்ட் திட்டத்திற்கு ஆப்பு வைத்தது சுப்ரீம் கோர்ட்!

அரசு சலுகைகளைப் பெற ஆதார் அட்டை சமர்ப்பிப்பது கட்டாயம் அல்ல என்று சுப்ரீம் கோர்ட் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே சமயம் சமையல் எரிவாயு சிலிண்டர், மண்ணெண்ணெய் மற்றும் பொது விநியோக திட்டத்தின் மூலம் சலுகைகளை பெறுவதற்கு மட்டும் ஆதார் அட்டையை அதுவும் ஒரு கட்டாயமற்ற அத்தாட்சியாக பயன்படுத்தலாம் என கோர்ட் தெரிவித்துள்ளது. எனவே, ஆதார் அட்டை அரசின் பிற நலத் திட்டங்களை பெற கட்டாயம் இல்லை என்பதை மத்திய அரசு அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் வாயிலாக பரவலாக விளம்பரப்படுத்த வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
aadhar aug 11
ஆதார் தொடர்பான அனைத்து வழக்குகளையும், அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றக் கோரிய மத்திய அரசின் மனு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜே.செலமேஸ்வர்,எஸ்.ஏ.பாப்டே, சி.நாகப்பன் ஆகியோர் அடங்கிய மூவர் அமர்வு முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் பல்வேறு கேள்விகள் முன் வைக்கப்பட்டன. அப்போது அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றுவது தொடர்பாக 11ம் தேதி (இன்று) முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று ஆதார் வழக்கு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது ஆதார் அட்டை விவகாரத்தில் மத்திய அரசு வரையறை செய்துள்ள தனி நபர் சுதந்திரத்திற்கான எல்லை என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இது தொடர்பாக அரசியல் சாசன பெஞ்ச் அமைப்பது குறித்து தலைமை நீதிபதி தத்து முடிவு செய்வார். எனவே இந்த வழக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் அரசியல் சாசன பெஞ்ச் அமைப்பது குறித்து முடிவு செய்யப்படும்.

இதனிடையே ஆதார் குறித்து இடைக்கால உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள், மத்திய அரசுக்கு சில வழி காட்டுதல் களை தெரிவித்தனர். “சமையல் எரிவாயு சிலிண்டர், மண்ணெண்ணெய் மற்றும் மற்றும் பொது விநியோக திட்டத்தின் மூலம் சலுகைகளை பெறுவதற்கு மட்டுமே ஆதார் அட்டையை பயன்படுத்தலாம். அதுவும் கூட கட்டாயமற்ற அத்தாட்சியாக பயன்படுத்தலாம். அரசின் மற்ற சலுகைகளை, நலத்திட்டங்களின் பயன்களைப் பெற ஆதார் அட்டை வைத்திருப்பது அவசியம் அல்ல. ஆனால், ஆதார் அட்டை பணிக்கு இப்போதைக்கு இந்த நீதிமன்றம் இடைக்கால தடை ஏதும் விதிக்கவில்லை” என நீதிபதிகள் கூறினர்.

அத்துடன் கைரேகை, கண்ணின் மணியின் தகவல்கள் ஆகியனவற்றை ஆதார் அட்டை திட்டத்துக்காக அரசு பதிவு செய்வதால் தனிநபர் உரிமை மீறப்படுகிறது என்ற புகார் தொடர்பாக கருத்து தெரிவித்த சுப்ரீம் கோர்ட், “ஆதார் அட்டைக்காக திரட்டப்படும் எந்த ஒரு தனிநபர் தகவலையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தவறாக பயன்படுத்தக் கூடாது” எனவும் உத்தரவிட்டுள்ளது.