தமிழ் குரல் / AI Voice
திமுக மீண்டும் ஆட்சிக்கு மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் கருணாநிதி கூறியுள்ளார்.இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் தற்போது மதுவிலக்கு இல்லாத காரணத்தால் ஏழை எளிய விவசாயப் பெருங்குடி மக்கள், தொழிலாளத் தோழர்கள், ஏன், மாணவர்களும் கூட தொடர்ந்து , மனம் போன போக்கில் மதுவை அருந்தி, நூற்றுக்கணக்கில் உயிர்ப்பலி ஆகிறார்கள். இந்தக் கொடுமைக்கும், கொடூரப் பழக்கத்திற்கும் ஆண்கள் மட்டுமன்றி தாய்மார்களும், பச்சிளம் குழந்தைகளும் பலி ஆகிறார்கள் என்ற செய்திகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.மீண்டும் மதுவிலக்கு சட்டத்தை நடைமுறைப் படுத்தினால் என்ன என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. எனவே திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமுதாய மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வழி வகுக்கும் வகையில் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழகத்தில் மது விலக்கும், ரத்தும்.! ஒரு பிளாஷ்பேக் ரிப்போர்ட்
இந்தியாவில் தமிழ்நாட்டிலும், குஜராத் மாநிலத்திலும் மது விலக்கு அமலில் இருந்தது. தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான ஆந்திரா, பாண்டி, கர்நாடகம் உள்பட பிற மாநிலங்களில் மது விலக்கு அமலில் இல்லாமல் இருந்தது. புதிதாக மது விலக்கை அமல் படுத்தும் மாநிலங்களுக்கு உதவிப்பணம் (மானியம்) வழங்கப்படும் என்று அன்றைய மத்திய அரசு அறிவித்தது.
”எங்களுக்கும் மானியம் வழங்குங்கள்” என்று, அன்றைக்கு தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி கோரினார். ”ஏற்கனவே மது விலக்கை அமுல் நடத்தி வரும் மாநிலங்களுக்கு மானியம் கிடையாது” என்று மத்திய அரசு கூறியது.
ஏற்கனவே மது விலக்கை அமல் நடத்தும் மாநிலங்களுக்கு இப்படி தண்டனை அளிப்பதா? எங்களுக்கும் மானியம் கொடுங்கள் என்று கருணாநிதி கோரியும், அவருடைய கோரிக்கை ஏற்கப்படவில்லை.
இதனால் மது விலக்கை ரத்து செய்துவிட்டு, பிறகு (மத்திய அரசு மானியம் கிடைக்கும்போது) மீண்டும் அமலுக்குக் கொண்டுவர முடிவு செய்தார் கருணாநிதி . மதுவிலக்கை ரத்துசெய்ய கருணாநிதி திட்டமிட்டுள்ளத் தகவல் ராஜாஜிக்கு கிடைத்தது. உடனே ராஜாஜி, கொட்டும் மழையில் குடைபிடித்தபடி கருணாநிதி வீட்டுக்குச் சென்று, “மதுவிலக்கை ரத்துச் செய்யக்கூடாது” என்று கேட்டுக் கொண்டார். ஆனால், அதற்கு கருணாநிதி செவிசாய்க்கவில்லை. அப்போது, “மதுவிலக்கை இந்தியா முழுவதும் விரிவாக்க வேண்டும் என்று காந்தியடிகள் விரும்பினார். ஆனால் அவருடைய தானைத் தளபதிகளாக விளங்கும் முதல் அமைச்சர்களாலும், மத்திய அரசை நடத்தும் மகாத்மாவின் வாரிசுகளாலும் மதுவிலக்குக் கொள்கை புறக்கணிக்கப்பட்டது வேதனை தரும் செய்தியாகும். கொழுந்து விட்டெரியும் நெருப்பு வளையத்திற்குள், கொளுத்தப்படாத கற்பூரமாக தமிழகம் எத்தனை நாளுக்குத்தான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்?” என்று அவருக்கே உரித்தான கவிதை நடையில் அழகு தமிழில் கூறி நியாயப்படுத்தினார் கருணாநிதி.
1971 ஆகஸ்டு 30 ந்தேதி முதல் மது விலக்கு தள்ளி வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அன்று முதல் மதுக்கடைகளைத் திறப்பதற்கு வகை செய்யும் அவசர சட்டம் ஒன்றை அன்றைய தமிழக கவர்னர் கே.கே.ஷா பிறப்பித்தார். அந்த அவசரசட்டத்தில், இப்போது தமிழக சட்டசபை கூட்டம் நடைபெறாததால், இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்படுகிறது. இந்த அவசர சட்டம் ஆகஸ்டு 30 ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. என்றும் கூறப்பட்டு இருந்தது.
இந்த அவசர சட்டப்படி, மது விலக்கு சட்டம் அமல் படுத்தப்படுவது தமிழகத்தில் அடியோடு நிறுத்தி வைக்கப்படுகிறது. அரசியல் சட்டத்தில் உள்ள அதிகாரத்தின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறது. மேற்கண்டவாறு அவசர சட்டத்தில் கூறப்பட்டு இருந்தது.இந்த அவசர சட்டத்தின் காரணமாக, மது விலக்கு அமலில் இருந்தபோது மது குடித்த குற்றம், மது வாங்கிய குற்றம் போன்றவைகளுக்காக தண்டனை அடைந்தவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 700 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மீண்டும், சாராயக்கடைகள் திட்டமிட்டபடி திறக்கப்படும். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
மதுக்கடைகள் திறப்பதை எதிர்த்து, ”மது விலக்கு சட்டத்தை நிர்வாக உத்தரவு மூலம் ஒத்தி வைக்க முடியாது. எனவே, தமிழ்நாட்டில் மதுக்கடைகளை திறப்பது சட்ட விரோதமான செயல். இதற்கு தடை விதிக்கவேண்டும்” என்று, சுதந்திரா கட்சி எம்.எல்.ஏ. டாக்டர் ஹண்டே, வி.எஸ்.ஸ்ரீகுமார், வெங்கடசாமி நாயுடு ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள்.
ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வீராசாமி, நீதிபதிகள் பி.எஸ்.கைலாசம், ஆர். சதாசிவம், டி.ராமபிரசாத் ராவ், வி.வி.ராகவன் ஆகிய 5 நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்தார்கள். ”மதுக்கடைகளை திறக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு விட்டதால் இந்த மனு செயலற்றதாகி விடுகிறது” என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தார்கள். திட்டமிட்டபடி கள்ளுக்கடைகள், சாராயக்கடைகள் திறக்கப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் 7,395 கள்ளுக்கடைகளும், 3,512 சாராயக் கடைகளும் திறக்கப்பட்டன. சென்னை நகரில் 120 ஒயின், பிராந்தி கடைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. மற்ற மாவட்டங்களில் 60 முதல் 100 கடைகள் வரை திறக்கப்பட்டன.
கள் ஒரு லிட்டர் ஒரு ரூபாய்க்கும், சாராயம் ஒரு லிட்டர் 10 ரூபாய்க்கும் விற்க விலை நிர்ணயம் செய்யப்பட்டது. பீர் 5 ரூபாய்க்கும், மற்ற மது வகைகள் ரூ.26 முதல் ரூ.55 வரை விலை நிர்ணயிக்கப்பட்டது. கடைகளை இரவு 10 மணிக்கு மூடிவிடவேண்டும் என்று நிபந்தனையும் விதிக்கப்பட்டது.ராஜாஜி, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவத்சலம், அண்ணாதுரை ஆகிய ஆறு முதல்வர்கள், மதுவாசனையை அரசாங்கம் மூலம் தமிழக இளைஞர்களுக்குக் காட்டாமல் இருந்தார்கள். தமிழ்நாட்டில் சுமார் 23 ஆண்டு காலம் அமலில் இருந்த மது விலக்கு 1971 ஆகஸ்டு மாதம் தி.மு.க. ஆட்சியின்போதுதான் ரத்து செய்யப்பட்டது. 1971–74, 1983–87, 1990–91 ஆகிய சிறு கால இடைவெளிகளைத் தவிர பெரும்பாலான காலங்களில் தமிழகத்தில் மது விற்பனை தடை செய்யப்பட்டிருந்தது. அதாவது 2001 வரையிலான சுமார் 68 ஆண்டுகளில் 11 ஆண்டுகள் மட்டுமே மதுவிற்பனை தமிழகத்தில் தாராளமாக இருந்திருக்கிறது. இந்நிலைக்கு சாவுமணி அடித்தது, எம்.ஜி.ராமசந்திரன் முதல்வராக இருந்தபோது 1983-ல் டாஸ்மாக் நிறுவனம் துவங்கியபோது தான்.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) 1983-ல் எம்.ஜி.ராமசந்திரன் தலைமையிலான அதிமுக அரசால் தமிழகத்தில் மதுவகைகளின் மொத்த விற்பனைக்காக தொடங்கப்பட்டது. இந்திய நிறுவனச் சட்டம் -1956 இன்படி இந்நிறுவனம் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழியங்கும் அமைப்பாக நிறுவப்பட்டது. ஆளும்கட்சிக்கு வற்றாத வளம் தரும் காமதேனுவாக டாஸ்மாக் உணரப்பட்டது அக்காலத்தில் தான். ‘பாக்கெட் சாராயம்’ எனப்படும் மிக மோசமான வஸ்து தமிழகத்தில் ஆறாக ஓடியதும் அக்காலத்தில் தான். எனினும் 1987- மீண்டும் மதுவிலக்கு வந்து- தமிழகப் பெண்களின் நெஞ்சில் பால் வார்த்தது.
2001-ல் அதிமுக ஆட்சியின்போது மீண்டும் மதுவிலக்கு கொள்கை தூக்கி எறியப்பட்டது. மதுவிலக்கால் கள்ளச் சாராயம் பெருகுவதாகக் கூறி அன்றைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா மதுவிலக்கைத் தளர்த்தினார். அது இன்று பூதாகரமாகி அரசையே இயக்கும் அளவுக்கு பிரமாண்டமாகி இருக்கிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால் டாஸ்மாக் துவங்கியபோது (1983), கள்ளச்சாராயத்தைத் தடுத்து மது விற்பனையை முறைப்படுத்துவதே அதன் இலக்காக இருந்தது. அதுவே 2003-ல் மாநிலத்தின் ஒரே அதிகாரப்பூர்வ மது விற்பனை நிறுவனமாக மாற்றப்பட்டது. 2001-ல் மதுவிற்பனையை முறைப்படுத்த டாஸ்மாக் முயன்றபோது மது வர்த்தகத்தில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் நடத்திய கூட்டணி ஏலமுறையால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. அபோதுதான் டாஸ்மாக் நிறுவனமே நேரடியாக மது விற்பனையில் இறங்குவது என்று அரசு முடிவெடுத்தது. அக்டோபர் 2003- இல் ‘தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம்- 1937’இல் திருத்தம் செய்ததன் மூலம், டாஸ்மாக்கிற்கு மது விற்பனையில் மாநிலம் முழுவதும் ஏகபோக தனியுரிமை அளிக்கப்பட்டது.
அப்போது இதனை கடுமையாக எதிர்த்த திமுக, 2006-ல் தான் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, டாஸ்மாக் வருவாயைக் கருத்தில் கொண்டு முந்தைய அரசின் கொள்கையையே தொடரத் தீர்மானித்தது. மது வியாபாரத்தில் மட்டுமே இவ்விரு கட்சிகளிடையே நல்லிணக்கம் காணப்படுகிறது.
2013-14 நிதியாண்டில் டாஸ்மாக் நிறுவனம் வாயிலாக அரசுக்கு கிடைத்துள்ள வருவாய் ரூ. 23,401 கோடி. இது முந்தைய ஆண்டைவிட ரூ. 1,721 கோடி அதிகம். மதுப் பயன்பாடு அதிகரிப்பு, மதுவகைகளின் விலையேற்றம் ஆகிய காரணங்களால் வருமாண்டில் இது மேலும் அதிகரிக்கும் என்று சொல்லத் தேவையில்லை.
தகவல் உதவி : கட்டிங் கண்ணையா
கார்டூன் உதவி : பாலா
