செம்மரக்கட்டை காட்டில் 20 கொலை…பின்னணி !

செம்மரக்கட்டை காட்டில் 20 கொலை…பின்னணி !

ஆந்திராவின் சேஷாச்சலம் வனப்பகுதியில் விளையும் செம்மரம் உலகிலேயே மிகவும் தரமானது, அங்கு மட்டுமே அதிக அளவு விளையக்கூடியது. இது ஆயுர்வேதப் பயன்பாடு, அழகான மரவேலைப்பாடுகள் செய்வதற்காக சீனாவில் பெருமளவும் பல்வேறு நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இது ஆந்திர அரசால் முறையாக வெட்டப்பட்டு ஏலத்தில் விடப்படும்.
wood apr 26
ஆந்திர அரசு சுமார் ஆயிரம் கிலோவை ஏலத்தில் விடுகிறது என்றால் அதனால் வேறு எவருக்கும் எந்த ஒரு வருமானமும் கிடைக்காது. இப்படிப்பட்ட நிலையில் ஆந்திர அரசு அது போக்கிற்கு ஏலம் விடட்டும்..அதுவரை நாம் ஏன் காத்திருக்கவேண்டும் என்று ‘ஆந்திராவின் அரசியல் புள்ளிகள் ‘ செம்மரக்காட்டில் கால் வைத்தனர்.

ஆனால் மரத்தை வெட்டத் திறமையான ஆட்கள் தேவை, மேலும் உள்ளுர் ஆட்கள் எவரும் வரமாட்டார்கள்..என்ன செய்யலாம் என்று யோசித்தபோது அவர்கள் தமிழ் நாட்டுப் புள்ளிகள் சிலரோடு பேசுகின்றனர். சரி எல்லையோர கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளுக்கு மரம் வெட்டுதலே தொழில் அவர்களை அனுப்புவது எங்கள் பொறுப்பு, மரத்தை வெட்டி அனுப்புங்கள், கன்டெய்னர் வரை எடுத்துச் செல்வது எங்கள் பொறுப்பு என தமிழ்நாட்டு புள்ளிகள் சிலர் ஒப்புக்கொண்டு பண பேரம் பேசியபின் மரம் வெட்டப்பட்டு கடத்தப்படுதல் தொடர்ந்தது.

இப்படித் தொடங்கிய செம்மரக்கட்டை கடத்தல் ஆந்திர அரசுகள் மாறுவதற்கு ஏற்றார்போல ஏற்றமும் இறக்குமாக நடைபெற்றே வந்தது. இதற்கு ஆந்திர வனத்துறை, சோதனைச்சாவடி என பலதரப்பிலும் கடத்தலுக்கு ஆதரவான ஆட்கள் இருப்பார்கள். எல்லையோர சோதனைச்சாவடியில்கூட இதற்கேற்றார்போல ஆட்கள் அரசியல் பின்புலத்துடன் டிரான்ஸ்பர்கூட பெறாமல் பல ஆண்டுகள் ஒரே இடத்தில் பணி புரிவார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் செம்மரக்கட்டை கடத்தலைத் தடுக்கிறோம் என வெளி உலகிற்குக் காண்பிக்க, தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவிற்கு வேலை தேடிச்செல்லும் வறுமையின் பிடியில் இருக்கக்கூடியவர்களை அழைத்துச் சென்று செம்மரக்கட்டை கடத்தியவர் என்று முத்திரை குத்தி சிறையில் அடைத்துவிடும் ஆந்திர வனத்துறை. அதே போல 50 கடத்தலுக்கு ஒரு கடத்தல் வாகனத்தை மடக்கி கேஸ் எழுதி பறிமுதல் செய்ததாகக் கணக்கு காண்பித்துவிடுவார்கள்.

இவர்களுக்குக் கணக்குக் காண்பிக்க ஆட்கள் தேவை..அதுவும் தமிழ்நாட்டு கூலித்தொழிலாளர்கள் தேவை. இதற்கு இவர்களை அழைத்து வரும் ஏஜென்டுகள் யார் என்பது ஆந்திர வனத்துறைக்கு நன்கு தெரியும்..அவர்களிடம் குறிப்பிட்ட காலகட்டத்தில் எங்களுக்கு கேஸ் போட ஆட்கள் தேவை என்று சொல்லி விடுவார்கள்.

அவர்களே சோற்றுக்கு வழியில்லாத சிலரை அழைத்துச் செல்வார்கள்..அல்லது பேருந்தில் அனுப்பிவிட்டுவிட்டு வனத்துறைக்கு தகவல் கொடுத்துவிடுவார்கள். ஆனால் கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ள நெட்வொர்க்கின் ஆசிர்வாதம் பெற்ற மரம் வெட்டும் எவரும் பெரும்பாலும் இதில் சிக்கவே மாட்டார்கள். அப்புறம் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் வனத்துறை, காவல்துறை அதிகாரிகளுக்கு வருவாய் எங்கிருந்து வரும் ?

இதுதான் கைதுகளின், சிறைக்குள் இருப்பவர் பெரும்பாலனவர்களின் பின்னணி. இப்படி இருக்க காங்கிரசின் பிரமுகர்களே செம்மர ‘பிசினெசில்’ பல ஆண்டுகளாக கோலோச்சிக் கொண்டு இருப்பவர்கள். தெலுகு தேசம் கட்சிக்காரர்கள் காங்கிரசின் செம்மர சாம்ராஜ்யத்துக்குள் கால் வைக்கக்கூட முடியவில்லை. அதற்கு ஏற்றார்போல செம்மரம் வளரும் பகுதிகளில் தெலுகு தேசம் கட்சியும்கூட பெரியதாக கால் ஊன்ற முடியவில்லை. இந்த அழுத்தம் நாயுடு காரு வரைக்கும் செல்லவே செம்மர தாதாக்களை அடித்து ஒடுக்க முடிவு செய்கிறார்கள்.

இதற்கென தனிப்படை உருவாக்கப்படுகிறது. அந்தப்படையும் களத்தில் இறங்கி எவ்வளவோ முயற்சி செய்கிறது…ம்ஹூம்..அடுத்த அதிரடியாக மாஸ் அதிரடி ஒன்றுக்கு ஏற்பாடு செய்கிறது. அவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டு, கொடூரமான ஒரு ஆப்பரேசனை நிகழ்த்தி செம்மர விவகாரத்தை பெரிய அளவில் வெளி உலகிற்குத் தெரியப்படுத்துவதும், கடத்தலைக் கட்டுப்படுத்தக் கடுமையான நடவடிக்கையை இந்த அரசு மேற்கொள்கிறது என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது நாயுடுகாருவின் தெலுகு தேசம். இதுதான், 20 பேர் கொல்லப்பட்டதற்கு பிறகு “இது ஆரம்பம்தான்..இன்னும் தொடரும் “னு வனத்துறை அமைச்சர் கோபாலகிருஷ்ணன் திரும்பத் திரும்ப சொன்னதன் பின்னணி.

இதற்கிடையில் எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரசின் முக்கியப்புள்ளியும், செம்மரக்கடத்தலின் தந்தையுமான கெங்கிரெட்டியை மொரிஷியஸ் தீவில் வைத்து கைது செய்கிறது சர்வதேச போலிஸ்.

செம்மரக்காடு சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றும் மிகப்பெரிய அரசியல் சதுரங்கத்தில் இறந்து போன 20 பேரும், சிறையில் வாடும் சுமார் 3000 தமிழ்நாட்டு அப்பாவிகளும் வெறும் சிப்பாய் காய்களே…..!

– TNTV SBNN செய்திப்பிரிவு