தமிழ் குரல் / AI Voice
தற்கால தொழில்நுட்ப உலகில் செய்யறிவு என்றும் அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத் துறையின் அசுர வளர்ச்சி மனிதகுலத்திற்குப் பல புதிய வசதிகளை வழங்கினாலும், மறுபுறம் அது எழுப்பும் தார்மீக மற்றும் சட்டப் சிக்கல்கள் விஸ்வரூபமெடுத்து வருகின்றன. குறிப்பாக, உலகப் புகழ்பெற்ற ஊடக நிறுவனமான நியூயார்க் டைம்ஸ் மற்றும் தொழில்நுட்ப ஜாம்பவான்களான ஓபன்ஏஐ மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களுக்கு இடையேயான காப்புரிமைப் போர் தற்போது புதிய கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் நீதிமன்றத்தில் பொதுவெளியில் பகிரப்பட்ட புதிய ஆவணங்கள், உலகளாவிய ஊடகத்துறையை உலுக்கியுள்ளன. ஏஐ பயிற்சித் தரவுகள் மற்றும் மனித உழைப்பின் திருட்டுத்தனம் குறித்த பல மறைக்கப்பட்ட உண்மைகளை இந்த ஆவணங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.
மனித உழைப்பின் மிகப்பெரிய திருட்டு
நியூயார்க் டைம்ஸ் நிறுவனம் தாக்கல் செய்துள்ள வழக்கின் புதிய விவரங்களின்படி, தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் ஏஐ மாடல்களுக்குப் பயிற்சி அளிக்க ஊடகங்களின் செய்திகள், கட்டுரைகள் மற்றும் பிரத்யேக எழுத்துருக்களை முறையான அனுமதியின்றி அல்லது உரிமம் பெறாமல் பெருமளவில் சுவீகரித்துள்ளன. பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களின் பல ஆண்டு உழைப்பை மூலப்பொருளாகப் பயன்படுத்தி ஏஐ தொழில்நுட்பம் கட்டமைக்கப்பட்டுள்ளதை இந்நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதைக் குறிக்கும் வகையில்தான் இது வரலாற்றின் மிகப்பரந்த உழைப்புத் திருட்டு என்று சட்ட நிபுணர்கள் வர்ணித்துள்ளனர்.

செய்தி தளங்களை முற்றிலுமாக மாற்றிமைக்கும் ஏஐ ஆபத்து
இந்தக் காப்புரிமைப் போரின் மற்றொரு முக்கியமான பரிமாணம், ஏஐ சாட்பாட்கள் மற்றும் தேடுபொறிகள் வாசகர்களின் வாசிப்புப் பழக்கத்தை எப்படித் திசை திருப்புகின்றன என்பது பற்றியது ஆகும். ஏஐ தயாரிப்புகள் எதிர்காலத்தில் வாசகர்கள் நேரடியாக செய்தி வலைத்தளங்களுக்குச் செல்வதைத் தடுத்து நிறுத்திவிடும் என்று ஓபன்ஏஐ மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களுக்குள்ளேயே ஆரம்பத்தில் இருந்தே தீவிர விவாதங்கள் நடந்துள்ளதை நீதிமன்ற ஆவணங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. வாசகர்கள் நேரடியாக செய்தி ஊடகங்களின் இணையதளப் பக்கங்களுக்குச் சென்று படிக்காமல், ஏஐ கருவிகளே பதில்களை வழங்குவதன் மூலம் ஊடகங்களின் வருவாய் மற்றும் வாசகர் தொடர்பு முற்றிலுமாகச் சிதைக்கப்படும் அபாயம் குறித்து நிறுவனங்களின் உள் விவாதங்களில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிம ஒப்பந்தங்களின் இருண்ட முகம்
ஒருபுறம் சில முன்னணி ஊடக நிறுவனங்களுடன் ஓபன்ஏஐ போன்ற நிறுவனங்கள் கோடிக்கணக்கான டாலர்களுக்கு முறையான காப்புரிமை ஒப்பந்தங்களை மேற்கொண்டு வரும் அதேவேளையில், மறுபுறம் சிறிய மற்றும் நடுத்தர ஊடகங்களின் படைப்புகள் தடையின்றி உறிஞ்சப்படுவது தொடர்கிறது. முறையான அனுமதியின்றி அல்லது ஊடக நிறுவனங்களின் வணிக நலன்களைப் பற்றிக் கவலைப்படாமல் உருவாக்கப்பட்ட இந்த ஏஐ அல்காரிதம்கள், பத்திரிகைத் துறையின் பொருளாதார அடிப்படையையே அசைத்துப் பார்ப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
எதிர்காலத்திற்கான முன்னுதாரணம்
இந்த வழக்கு வெறும் நியூயார்க் டைம்ஸ் மற்றும் ஓபன்ஏஐ இடையேயான சட்டப் போராட்டம் மட்டுமல்ல. உலகளாவிய படைப்பாளிகள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஏஐ தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையேயான எதிர்கால வரம்புகளைத் தீர்மானிக்கப் போகும் ஒரு மைல்கல்லாக இது பார்க்கப்படுகிறது. தரவுப் பயன்பாட்டிற்கான எல்லைகள் என்ன, படைப்பாளிக்கான உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கேள்விகளுக்கு இந்த வழக்கு விரைவில் ஒரு தெளிவான தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாத்தீ அகஸ்தீஸ்வரன்
