32°C
விளம்பரம்
Advertisement

கவின்-நயன்தாரா கூட்டணியில் உருவான ‘ஹாய்’ படத்தின் வெற்றி விழாத் துளிகள்!

admin Published: September 3, 2026 3 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பெரும் பாராட்டுகளைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின், நயன்தாரா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இத்திரைப்படத்திற்கு கிடைத்து வரும் அமோக வரவேற்புக்கு நன்றி செலுத்தும் வகையில் படக்குழுவினர் பத்திரிகையாளர் மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

பள்ளிக் காலக் கனவும் 20 ஆண்டுகால நட்பும்

இந்த வெற்றி விழாவில் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான தருணமாக அமைந்தது இயக்குநர் விஷ்ணு எடவன் மற்றும் இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இடையேயான நட்புதான். பள்ளிப் பருவத்தில் ஒன்றாகப் படித்த காலத்தில், “நான் ஒரு நாள் சினிமா இயக்குநராவேன், நீ எனக்கு இசையமைப்பாளராக வர வேண்டும்” என்று பேசி மகிழ்ந்த தங்களது கனவு, இன்று ‘ஹாய்’ படத்தின் வெற்றி மூலம் நனவாகியிருப்பதாக இருவரும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர். மேலும், நடிகர் கவினுக்கும் ஜென் மார்ட்டினுடன் இது நான்காவது திரைப்படமாகும். பள்ளித் தோழர்கள் மூவரும் இணைந்து திரையில் படைத்த இந்த மேஜிக், ரசிகர்களிடையேயும் பெரிய அளவில் சேர்ந்திருப்பது படக்குழுவிற்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

படப்பிடிப்பு தளத்தில் பிரபுவின் பிரம்மாண்ட விருந்தோம்பல்

தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் பேசுகையில், படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். தூத்துக்குடியில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது, மூத்த நடிகர் பிரபு காட்டிய அன்பும் பாசமும் அனைவரையும் நெகிழ வைத்ததாகக் கூறினார். தூத்துக்குடிக்குச் செல்லும் முன்பே லலித்குமாரைத் தொடர்புகொண்ட பிரபு, “தம்பி, நீ வெளியில் எதுவும் சாப்பிடக் கூடாது. என் வீட்டில் இருந்து உனக்கு உணவு வரும், என்னோடுதான் சாப்பிட வேண்டும்” என்று கூறி உபசரித்துள்ளார். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர் காட்டிய இந்த மனிதநேயமும், படப்பிடிப்பு தளத்தை ஒரு சொந்தக் குடும்ப விழா போல மாற்றியதும் மறக்க முடியாத நினைவுகள் என்று தயாரிப்பாளர் சுட்டிக்காட்டினார்.

திருமண ஏற்பாடுகளுக்கு நடுவே சவாலான படப்பிடிப்பு

ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது வெறும் திரையரங்க வசூல் மட்டுமல்ல, அதை உருவாக்கிய பயணமும் தான் என்பதை இயக்குநர் விஷ்ணு எடவனின் உழைப்பு உணர்த்துகிறது. இப்படத்தின் படப்பிடிப்புத் தொடக்கம் முதல் வெளியீடு வரை பல கட்ட சவால்கள் குறுக்கிட்டன. ஒருபுறம் மழை, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களை எதிர்கொண்டு படப்பிடிப்பை நடத்த வேண்டிய சூழல் நிலவ, மறுபுறம் இயக்குநரின் தனிப்பட்ட வாழ்க்கையில் திருமண ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து கொண்டிருந்தன. ஒரே நேரத்தில் இரண்டு மிகப்பெரிய பொறுப்புகளைச் சுமந்து, தயாரிப்பாளர்கள் விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் லலித்குமார் ஆகியோரின் பூரண நம்பிக்கையோடு இந்தப் படத்தை விஷ்ணு சிறப்பாகச் செதுக்கியுள்ளார்.

நயன்தாராவின் இரும்பு மனம் மற்றும் நட்சத்திரப் பட்டாளம்

நடிகை ராதிகா சரத்குமார் பேசுகையில், தயாரிப்பாளராகவும் கதாநாயகியாகவும் களமிறங்கிய நயன்தாராவைப் வெகுவாகப் பாராட்டினார். “வெளிப்பார்வைக்கு நயன்தாரா மிகவும் மென்மையானவராகத் தோன்றினாலும், மனதளவிலும் உடல்ரீதியாகவும் அவர் ஒரு இரும்பு மனிதர். சினிமா மீதான அவரது அர்ப்பணிப்பும் வலிமையும்தான் இந்த வெற்றிக்குக் காரணம்” என்றார். மேலும் பிரபு, பாக்யராஜ், சுஹாசினி போன்ற மூத்த நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய தூணாக அமைந்துள்ளது.

மாதத்தின் இறுதியில் அமைந்த சவாலான வெற்றி

பொதுவாக ஒரு மாதத்தின் கடைசி வாரத்தில் படங்கள் வெளியாகும் போது, குடும்பங்களின் பட்ஜெட் காரணமாகக் கூட்டத்தை எதிர்பார்ப்பது கடினம். ஆனால் ‘ஹாய்’ திரைப்படம் அந்தத் தடையைத் தகர்த்தெறிந்துள்ளது. இது குறித்துப் பேசிய நடிகர் கவின், “மாதத்தின் இறுதியில் வெளியானதால் சிறிய பதற்றம் இருந்தது உண்மைதான். ஆனால், குடும்பச் செலவுகளுக்கு நடுவிலும் மக்கள் தங்களின் பொழுதுபோக்கிற்காக ஒதுக்கும் பணத்தையும் நேரத்தையும் ‘ஹாய்’ படத்திற்காகச் செலவிட்டு, திரையரங்கில் சிரித்து மகிழ்வதைப் பார்க்கும்போது மிகப்பெரிய மனநிறைவு கிடைக்கிறது” என்றார்.

குடும்பங்கள் கொண்டாடும் ஃபீல்-குட் வெற்றி

தமிழ் சினிமாவில் வழக்கமான க்ரைம், ஆக்ஷன் படங்களுக்கு மத்தியில், குடும்பத்தோடு வந்து கவலைகளை மறந்து நிம்மதியாகச் சிரித்து மகிழும் ஒரு முழுமையான ‘ஃபேமிலி என்டர்டெய்னராக’ உருவாக்கப்பட்டதுதான் ‘ஹாய்’ படத்தின் வெற்றிச் சூட்சுமம். ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவான இத்திரைப்படம், வரும் வாரங்களிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடனடி செய்திகள்