32°C
விளம்பரம்
Advertisement

தேசிய விளையாட்டு தினம்:ஹாக்கி மந்திரவாதி தயான் சந்தின் வரலாற்றுச் சாதனை!

admin Published: August 29, 2026 3 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


ந்திய விளையாட்டு வரலாற்றில் தனக்கென முத்திரை பதித்து, உலக அரங்கில் தாய்நாட்டின் கொடியைப் பறக்கச் செய்த மகத்தான ஆளுமை “ஹாக்கி மந்திரவாதி” மேஜர் தயான் சந்த். ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவைத் தங்கப் பதக்கங்களின் உச்சத்தில் நிறுத்திய அவரது இணையற்ற சாதனைகளையும், விளையாட்டுத் துறைக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி இந்தியாவில் ‘தேசிய விளையாட்டு தினமாக’ (National Sports Day) மிக விமரிசையாகக் கொண்டாப்படுக்கிறது. உடற்பயிற்சி, ஒழுக்கம் மற்றும் குழு உணர்வை மக்களிடையே பரப்பி, வளரும் இளைய தலைமுறையினரிடையே விளையாட்டு ஆர்வத்தை ஊட்டுவதே இந்நாளின் முதன்மை நோக்கமாகும்.

ஹாக்கி களத்தின் மந்திரவாதி மேஜர் தயான் சந்த்

1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி பிறந்த தயான் சந்த், இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றியபடியே தனது ஹாக்கி பயணத்தைத் தொடங்கினார். பந்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும், களத்தில் எதிரணிகளின் வியூகங்களைத் தகர்த்து இலக்கை நோக்கிப் பந்தை எடுத்துச் செல்லும் வேகமும் அவரைக் உலக ஹாக்கி வரலாற்றின் ஒப்பற்ற வீரராக உயர்த்தியது. 1928 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம், 1932 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் 1936 ஆம் ஆண்டு பெர்லின் ஆகிய மூன்று தொடர்ச்சியான ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி தங்கப் பதக்கம் வென்று உலகைச் சுருட்டிப் போட்டதற்கு தயான் சந்தின் மாயாஜால விளையாட்டுதான் முதன்மைக் காரணமாகும். பெர்லின் ஒலிம்பிக்கில் அவரது விளையாட்டைப் பார்த்து வியந்த ஜெர்மனியின் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர், தயான் சந்திற்குத் தனது நாட்டின் உயரிய ராணுவப் பதவியை தருவதாக ஆசைவார்த்தை கூறியபோதும், அதைத் தன் தாய்நாட்டின் மீதான பற்றினால் நிராகரித்த பெருமை அவருக்கு உண்டு.

தேசிய விளையாட்டு தினத்தின் தொடக்கமும் அதன் முக்கியத்துவமும்

இந்திய விளையாட்டுத் துறைக்கு மேஜர் தயான் சந்த் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சேவைகளை கௌரவிக்கும் விதமாக, 2012 ஆம் ஆண்டு இந்திய அரசு அவரது பிறந்த தினமான ஆகஸ்ட் 29 ஆம் தேதியை ‘தேசிய விளையாட்டு தினமாக’ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அன்றிலிருந்து இந்நாள் நாடு முழுவதும் விளையாட்டு விழிப்புணர்வு நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உடற்பயிற்சியின் அவசியம், மன உறுதி, ஒழுக்கம் மற்றும் கூட்டு முயற்சி ஆகியவற்றை வளர்ப்பதில் விளையாட்டுகள் எந்த அளவுக்கு முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதைப் பொதுமக்களுக்கு உணர்த்துவதே இத்தினத்தின் முதன்மை இலக்காகும். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் விளையாட்டு அமைப்புகளில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு இளைஞர்களின் திறமைகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

குடியரசுத் தலைவர் மாளிகையில் உயரிய தேசிய விளையாட்டு விருதுகள் விழா

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் மிகச் சிறப்பான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா நடத்தப்படுகிறது. நாட்டின் குடியரசுத் தலைவர், விளையாட்டுத் துறையில் சர்வதேச மற்றும் தேசிய அளவில் சிறந்த சாதனைகளைப் படைத்த விளையாட்டு வீரர்களுக்கும், அவர்களுக்குப் பயிற்சியளித்த சிறந்த பயிற்சியாளர்களுக்கும் உயரிய விருதுகளை வழங்கி கௌரவிக்கிறார்.

இந்திய விளையாட்டின் மிக உயரிய விருதான ‘மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா’ விருது (முன்னர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா என அழைக்கப்பட்டது), தொடர்ந்து சர்வதேச அளவில் மிகச் சிறந்த திறமையை வெளிப்படுத்திய வீரர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், சர்வதேசப் போட்டிகளில் தொடர்ச்சியாகச் சாதனை படைக்கும் வீரர்களுக்கு ‘அர்ஜுனா விருதும்’, திறமையான வீரர்களை உருவாக்கி வழிநடத்தும் பயிற்சியாளர்களுக்கு ‘துரோணாச்சார்யா விருதும்’, விளையாட்டு வளர்ச்சிக்கு வாழ்நாள் பங்களிப்பு அளித்தவர்களுக்கு ‘தயான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருதும்’ வழங்கி மதிப்பளிக்கப்படுகிறது.

விளையாட்டுத் துறையின் எதிர்காலமும் இளைஞர்களின் பங்களிப்பும்

இன்றைய நவீன காலத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் விளையாட்டின் பங்களிப்பு இன்றியமையாததாக மாறியுள்ளது. கேலோ இந்தியா (Khelo India) போன்ற திட்டங்கள் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்களின் விளையாட்டுத் திறமைகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. சர்வதேச அளவில் இந்தியா ஒலிம்பிக், ஆசியப் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்களை வாரிக் குவிப்பதற்கு இத்தகைய விழிப்புணர்வுகளும் அரசு ஊக்கத்தொகைகளுமே அடித்தளமாக அமைகின்றன.

மேஜர் தயான் சந்தின் பிறந்தநாளில் அனுசரிக்கப்படும் இந்த தேசிய விளையாட்டு தினம், வெறும் விழாவாக மட்டுமில்லாமல், நாட்டின் ஒவ்வொரு இளைஞரும் ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபட்டுத் தன் உடல்நலத்தையும், நாட்டின் பெருமையையும் உயர்த்த உறுதிபூள்ளும் உன்னத நாளாகத் திகழ்கிறது.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

உடனடி செய்திகள்