32°C
விளம்பரம்
Advertisement

ஹை (Hi)-திரை விமர்சனம்!

admin Published: August 28, 2026 3 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


90களின் பிளாக்பஸ்டர் ஹீரோ கருப்பு வைரம் என்றழைக்கப்பட்ட இதயம் முரளி வெளிப்படுத்திய அந்த அமைதியான, சொல்லப்படாத காதலை இன்றும் நினைவில் வைத்திருக்கும் சினிமா ரசிகரா நீங்கள்? பார்த்தவுடன் வரும் காதலை விட, மனதிற்குள் மட்டுமே பூட்டி வைக்கப்படும் காதலை ரசிக்கும் தலைமுறை என்றால், இந்த ஹை திரைப்படம் உங்களை ஓரளவு கவரக்கூடும். மற்றவர்கள் இது ஓடிடி அல்லது சின்னத்திரையில் வரும் போது நேரம் கிடைக்கும் போது பார்க்கலாம் என்ற வரிசையில் தாராளமாக சேர்க்கலாம்.

கதையின் மையம் மற்றும் நகர்வு

சொந்த அத்தை மகளின் நிராகரிப்பால் காதலில் தோற்று, திருமண பயத்தில் வீட்டை விட்டு ஓடும் நாயகன் கவின். மறுபுறம், குடும்ப அழுத்தத்தால் திருமண பந்தத்தை விரும்பாமல், சொந்தக் காலில் நிற்க சென்னைக்கு தப்பித்து வரும் நாயகி நயன்தாரா. எதிர்பாராத சூழலில் சந்திக்கும் இருவரும் நண்பர்களாகி ஒரே வீட்டில் தங்க நேரிடுகிறது. நயன்தாராவின் மீதான காதல் கவினுக்குள் மீண்டும் மலர்ந்தாலும், திருமணத்தில் நம்பிக்கையற்ற அவரின் லட்சியத்திற்கு குறுக்கே நிற்கக் கூடாது என தன் உணர்வுகளை மனதுக்குள்ளேயே பூட்டி வைக்கிறார்.

திடீரென தேடி வரும் குடும்பத்தினரின் பிடியில் இருந்து தப்பிக்க, நயன்தாரா தன் காதலில் என்றும் அவர் மூன்று மாத கர்ப்பமாக இருப்பதாக கவின் ஒரு பொய்யை அவிழ்த்து விடுகிறார். இதை நம்பி கவினின் பெற்றோர் நயன்தாராவை அன்போடு தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கே அவர்கள் காட்டும் பாசத்தில் குற்ற உணர்ச்சி தாங்க முடியாமல், தாங்கள் சொன்னது பொய் என்ற உண்மையை உடைக்கிறார் நயன்தாரா. இதன்பின் குழப்பமும் கோபமும் சூழ்ந்த சூழலில், காதல் நிறைவேறியது எப்படி? நயன்தாராவின் லட்சியம் என்னவாயிற்று என்பதே திரைக்கதையின் மைய இழையாகும்.

நடிகர்களின் பங்களிப்பு

மயில்சாமி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கவின் தனது இயல்பான நடிப்பின் மூலம் நகைச்சுவையை அழகாகக் கொண்டு வந்திருக்கிறார். மனதுக்குள்ளேயே காதலை பூட்டி வைத்துக்கொண்டு தவிக்கும் காதலனாக பல இடங்களில் பரிதாபத்தை ஏற்படுத்துகிறார்.

நயன்தாராவை காதலிப்பதை சொல்ல முடியாமலும், அவர் பேச்சை தட்ட முடியாமலும் இரண்டு பக்கமும் அல்லல்படும் காட்சிகளில் சிரிப்பையும் பரிதாபத்தையும் ஒருசேர வரவழைக்கிறார். குறிப்பாக பத்து நாட்களில் கல்யாணம் என்ற விஷயத்தை தள்ளிப் போடுவதற்காக மாற்றி மாற்றி பேசி குழப்பத்தை உண்டு பண்ணும் காட்சிகளில் கவினின் நடிப்பு சிறப்பம்சமாக அமைகிறது.

முன்னொரு காலத்தில் கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என்று வர்ணிக்கப்பட்ட நயன்தாரா, இதில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பெண்ணாக நடிக்க முயற்சித்துள்ளார். பஸ் ஸ்டாப்பில் ஆட்டோ டிரைவரிடம் ஆவேசமாவது முதல், மாமியார் ராதிகா காட்டும் பாசத்தில் கட்டுண்டு உண்மையைச் சொல்லி அழுவது வரை ரசிக்க முயன்றாலும், அவரது தோற்ற அதிர்வு மற்றும் வயது முதிர்ச்சி சில காட்சிகளில் கதாபாத்திரத்தோடு ஒன்ற விடாமல் அந்நியப்படுத்தி விடுகிறது.

கவினின் முறைப்பெண்ணாக நடித்திருக்கும் காவ்யா அறிவுமணி சில காட்சிகளே வந்தாலும், கவினின் காதலை மறுக்கும் விதத்தில் கவனத்தை ஈர்க்கிறார். கவினின் அம்மாவாக ராதிகா, அப்பாவாக கே. பாக்யராஜ், நயன்தாராவின் தந்தையாக பிரபு, சிறப்பு தோற்றத்தில் சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் தங்களுக்கே உரித்தான அனுபவ நடிப்பை வழங்கியுள்ளனர். சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி ஆகியோரது காட்சிகள் திரையரங்கில் நல்ல சிரிப்பலைகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக சத்யனின் மைண்ட் வாய்ஸ் வசனங்கள் சிறப்பாக வேலை செய்துள்ளன.

தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு நேர்த்தி

ராஜேஷ் சுக்லாவின் கேமரா பார்வை ஒவ்வொரு பிரேமையும் பளிச்சின வண்ணங்களால் நிரப்பி காட்சிகளுக்கு புத்துயிர் அளிக்கிறது. இருப்பினும், கவின் – நயன்தாரா இடையிலான சில முக்கியக் காட்சிகளில் இருவருக்குமான தோற்ற இடைவெளி காதலர்களைப் போலன்றி அக்கா-தம்பி உணர்வை ஏற்படுத்துவது பின்னடைவு.

இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் பின்னணி இசையிலும் பாடல்களிலும் நேர்த்தியான பங்களிப்பை வழங்கியுள்ளார். காட்சியமைப்பிற்கு ஏற்றவாறு நகரும் மெல்லிசைப் பாடல்கள் காதுகளுக்கு இதம் தருகின்றன. வரிகளின் தெளிவும், எளிமையான இசைக் கோர்ப்பும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன.

நிறைவாக

பெரிய புதுமையான காதல் கதையைச் சொல்லும் திரைப்படம் இதுவல்ல. ஒரு எளிமையான கதையை கவின் மற்றும் நயன்தாராவின் கெமிஸ்ட்ரி, நகைச்சுவை, குடும்ப செண்டிமெண்ட் மற்றும் நட்சத்திர நடிகர்களின் பங்களிப்புடன் கொடுக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால் அது முழுமையான ஒரு நல்ல அனுபவமாக மாறாமல் பாதியிலேயே நின்றுவிடுகிறது.

ரேட்டிங்: 2.25 / 5

உடனடி செய்திகள்