32°C
விளம்பரம்
Advertisement

டாக்ஸிக் -விமர்சனம்:பிரம்மாண்டம்…ஆனால் சுவாரஸ்யமின்மை!

admin Published: August 27, 2026 3 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


கே.ஜி.எஃப் படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ராக்கிங் ஸ்டார் யஷ் நடிப்பிலும், மலையாளத்தின் குறிப்பிடத்தகுந்த பெண் இயக்குநரான கீது மோகன்தாஸ் இயக்கத்திலும் உருவாகியுள்ள திரைப்படம் டாக்ஸிக். போதைப்பொருள் கடத்தல், அதிகார மோதல், குடும்பப் பாசம் மற்றும் கேங்ஸ்டர் வன்முறை பின்னணியில் உருவான இத்திரைப்படம் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா என்று கேட்டால் ஊஹூம் என்று உரத்தக் குரலில் சொல்லி விடலாம். இத்தனைக்கும் கேங்ஸ்டர் ஒருவனின் தொழிலில் அடையும் வளர்ச்சியும், தனிப்பட்ட வாழ்க்கையில் அவனின் வீழ்ச்சியும் தான் படத்தின் களம். ஆனால் அதில் எந்த உணர்வு ரீதியான ஆழமும் இல்லாமல் கதையாடல் செல்கிறது. குறிப்பாக படத்தின் வசனங்கள் எல்லாம் மிக மட்டமாக இருப்பது ஒருபுறம், அதனை தமிழில் மொழி பெயர்த்திருப்பது இன்னும் மோசம். தேவையே இல்லாமல் எல்லாவற்றுக்கும் ஒரு தத்துவம் சொல்வது, எதுகை மோனையாக பேசுவது என கடுப்பேற்றுகிறார்கள்.

கதைக்களம்

சுதந்திரத்திற்குப் பிந்தைய 1940-50களின் கோவா பகுதியை மையமாகக் கொண்டு கதை விரிவடைகிறது. அங்கு போதைப்பொருள் மற்றும் சட்டவிரோதக் கடத்தல் பேரரசைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சால்வடோர் என்பவனின் நிழல் உலகத்தில் நுழைகிறார்கள் ராயா (யஷ்) மற்றும் அவரது அக்கா கங்கா (நயன்தாரா). சால்வடாரின் பேரரசைச் சிதைத்து, அந்த போதை உலகத்தின் முடிசூடா மன்னனாக ராயா மெல்ல மெல்ல அவதாரம் எடுக்கிறான்.

இதனிடையே, சர்க்கஸ் கலைக் குழுவில் இருக்கும் நாடியா (கியாரா அத்வானி) மீது ராயாவிற்கு காதல் மலர்கிறது. ஆனால், ராயாவின் கடந்த கால இருண்ட பக்கங்களும், அவனது நிழல் உலகப் பேரரசை வீழ்த்தத் துடிக்கும் எதிரிகளின் சதிகளும் அவனது வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றுகின்றன. எதிரிகளின் சதியால் அக்கா கங்கா, காதல், வாரிசு எனத் தன் குடும்பத்தின் நிம்மதியை இழந்து தவிக்கும் ராயா, தனக்கு எதிராகச் சுழலும் வன்முறைச் சுழலில் இருந்து எவ்வாறு மீழ்கிறான், தன் எதிரிகளை எவ்வாறு பழிவாங்கிப் பேரரசைக் காப்பாற்றுகிறான் என்பதே இப்படத்தின் கதை.

நடிப்பு மற்றும் கதாபாத்திரங்கள்

படம் முழுக்க யஷ் தனது மாஸ் அவதாரத்தாலும், மிரட்டலான ஸ்கிரீன் பிரசன்ஸாலும் திரையை ஆக்கிரமிக்கிறார். ஆனால் இன்னும் ராக்கி பாய் ஹேங்ஓவர் தெளியவில்லை என்பது போல அதே டயலாக் மாடுலேஷனில் பேசுகிறார். டிக்கெட் என்ற இன்னொரு பாத்திரத்தில் மாறுபட்ட நடிப்பை காட்ட முயற்சிக்கிறார், ஆனால் அது அத்தனை ரசிக்கும் படி இல்லை. பல காட்சிகளில் நாடகத்தனம் மிகையாகவே எட்டிப் பார்க்கிறது.

அக்கா கங்காவாக வரும் நயன்தாரா, தம்பியின் வெற்றிக்காகப் போராடும் அதே வேளையில், தாதா உலகத்துக்கே உரிய கம்பீரத்தையும் உணர்வுப்பூர்வமான நடிப்பையும் வெளிப்படுத்த முயன்று பாஸ் மார்க் வாங்கியுள்ளார். நாடியாவாக வரும் கியாரா அத்வானி, சர்க்கஸ் கலைஞருக்கே உரிய சுறுசுறுப்புடனும், கதையின் உணர்ச்சிப்பூர்வமான தருணங்களில் அழகிய நடிப்பையும் தந்துள்ளார். ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், தாரா சுதாரியா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் இடம்பெற்றிருந்தாலும், அவர்கள் ஏனோ கதையோடு ஒட்டவே இல்லை.

தொழில்நுட்பப் பலம்

ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். 1940-களின் கோவாவையும், கடலோரப் பகுதிகளையும், இருண்ட நிழல் உலகத்தையும் தன் கேமரா லென்ஸ் வழியே மிகவும் அழகாகவும் பிரம்மாண்டமாகவும் திரையில் கொண்டு வந்துள்ளார். ரவி பஸ்ரூரின் பின்னணி இசை அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்கு உயிரூட்டுகிறது. தயாரிப்பு வடிவமைப்பு (Art Direction) மற்றும் ஆடை வடிவமைப்பு ஆகியவையும் அக்காலகட்டத்தை அப்படியே கண்முன் நிறுத்துகின்றன.

திரைக்கதை மற்றும் இயக்கத்தின் பலவீனங்கள்

படத்தின் முதன்மையான பலவீனம் அதன் குழப்பமான திரைக்கதையும், சுவாரஸ்யமற்ற கதை நகர்வும்தான். இயக்குநர் கீது மோகன்தாஸின் வழக்கமான கலைப்பூர்வமான உணர்வுப்பூர்வ அணுகுமுறையும், யஷின் வணிகப்பூர்வமான மாஸ் அம்சங்களும் ஒன்றாகக் கலக்காமல் தனித்தனியாக நிற்கின்றன.

முதல் பாதியில் இருக்கும் கொஞ்சநஞ்ச விறுவிறுப்பும் இரண்டாம் பாதியில் முற்றிலும் மறைந்துவிடுகிறது. 3 மணி நேரத்திற்கும் அதிகமான நீளம் மற்றும் மெதுவாக நகரும் காட்சிகள் பார்வையாளர்களின் பொறுமையைச் சோதிக்கின்றன. எடிட்டர் இன்னும் விழிப்புடன் செயல்பட்டு பல தேவையில்லாத காட்சிகளைக் கத்தரித்திருக்கலாம். தமிழ் டப்பிங் உரையாடல்கள் பல இடங்களில் ஒட்டாமல் அந்நியமாக இருப்பதுடன், அளவுக்கு அதிகமான வன்முறைக் காட்சிகளும் கதையின் உணர்வுப்பூர்வமான பிணைப்பைக் கெடுக்கின்றன.

இறுதித் தீர்ப்பு

பிரம்மாண்டமான மேக்கிங் மற்றும் ஒளிப்பதிவு ஆகியவை படத்தைக் காட்சிப் பூர்வமாக உயர்த்தியிருந்தாலும், யஷின் ஒட்டாத நடிப்பும், திணறும் திரைக்கதை, மெதுவான நகர்வு மற்றும் உணர்வுப்பூர்வமான ஒட்டலின்மை காரணமாக டாக்ஸிக் கொஞ்சமும் திருப்தியைத் தரத் தவறிவிட்டது.

ரேட்டிங்: 2 / 5

உடனடி செய்திகள்