காடழிப்பும் காட்டுத்தீயும்: உலக மழைக்காடுகள் தினம் சொல்லும் இறுதி எச்சரிக்கை!
மனிதகுலம் இயற்கையிலிருந்து பிரிந்து வாழும் ஒரு தனித்துவமான இனம் அல்ல; நாம் இயற்கையின் ஒரு பிரிக்க முடியாத அங்கம் என்பதை நமக்கு நினைவூட்டும் உன்னதமான நாள் இன்று. ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 22ஆம் தேதி ‘உலக மழைக்காடுகள் தினம்’ (World Rainforest Day) உலகளாவிய ரீதியில் விழிப்புணர்வுடன் சிறப்பிக்கப்படுகின்றது. நம் வருங்காலத் தலைமுறைக்கு இந்த இயற்கை அதிசயங்களைப் பாதுகாத்து, சிதையாமல் வழங்குவது குறித்த அவசர விழிப்புணர்வைத் தருவதே இந்நாளின் முதன்மை நோக்கமாகும்.
இந்த ஆண்டு 2026-ல், ‘Rainforest Partnership’ அமைப்பு ஒருங்கிணைக்கும் இந்த சர்வதேச தினம் தனது 10-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. நடப்பு ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ மையக்கருத்து (Theme) — “The Forest Within You” (உங்களுக்குள் இருக்கும் காடு அல்லது உன்னுள் இருக்கும் மழைக்காடு) என்பதாகும். மழைக்காடுகள் நம் உடலின் சுவாசத்தோடும், அன்றாட வாழ்வோடும் எவ்வளவு ஆழமாக இணைந்துள்ளன என்பதை இந்தத் தலைப்பு மிக நுட்பமாக உணர்த்துகிறது.

உலகின் நுரையீரல்: மழைக்காடுகளின் அசாத்திய முக்கியத்துவம்
மழைக்காடுகள், பெயர் குறிப்பிடுவது போலவே, ஆண்டின் பெரும்பாலான நாட்களில் ஏராளமான மழையைப் பெறும் அடர்ந்த காடுகள் ஆகும். சாதாரண நிலப்பரப்புகளை விட சதுர மீட்டருக்கு இக்காடுகள் பெறும் மழைப்பொழிவு மிக அதிகம். அண்டார்டிகாவைத் தவிர உலகின் அனைத்துக் கண்டங்களிலும், குறிப்பாக இந்தியா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கப் பகுதிகளில் இவை செழித்து வளர்கின்றன.
-
ஆக்ஸிஜன் வங்கி: பூமியின் வளிமண்டலத்திற்குத் தேவையான ஆக்ஸிஜனில் 20 விழுக்காட்டை இந்த மழைக்காடுகளே உற்பத்தி செய்வதால், இவை ‘உலகின் நுரையீரல்’ என்று அழைக்கப்படுகின்றன.
-
நீர் சேமிப்பு வங்கிகள்: சாதாரண நிலப்பரப்பில் மழை பெய்யும்போது வெறும் 3 விழுக்காடு நீரே பூமிக்குள் உறிஞ்சப்படுகிறது; மீதி 97 விழுக்காடு வீணாக வெளியேறுகிறது. ஆனால், மழைக்காடுகளின் அடர்ந்த தாவர அமைப்பானது பெய்யும் மழையில் 33 விழுக்காட்டு நீரை உள்ளிழுத்து, நிலத்தடி நீராகப் பாதுகாக்கிறது.
-
உணவு மற்றும் மருந்துக் கிடங்கு: உலகெங்கும் இன்று புழக்கத்தில் இருக்கும் நவீன மருந்துகளில் 25 விழுக்காடு இந்த காடுகளின் தாவரங்களில் இருந்தே பெறப்படுகின்றன. அதுமட்டுமின்றி, நாம் அன்றாடம் பயன்படுத்தும் காப்பி, வாழை, கொட்டைகள், அன்னாசி, கோகோ, மூங்கில், இரப்பர், தேங்காய், வென்னிலா, மஞ்சள் மற்றும் இஞ்சி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இக்காடுகளின் கொடையே ஆகும்.
-
உயிரினங்களின் புகலிடம்: புவியின் மொத்த நிலப்பரப்பில் வெறும் 6 விழுக்காட்டை மட்டுமே கொண்டுள்ள இந்த வெப்பமண்டல மழைக்காடுகளில், 30 மில்லியனுக்கும் அதிகமான தாவர மற்றும் விலங்கு இனங்கள் வாழ்கின்றன. 1999 முதல் 2015 வரையிலான குறுகிய காலத்தில் மட்டும் 2000க்கும் மேற்பட்ட புதிய உயிரினங்கள் இங்கு கண்டறியப்பட்டுள்ளன என்பது இதன் பல்லுயிர்ப் பெருக்கத்திற்குச் சான்றாகும்.
உலகை ஆளும் டாப் 10 மழைக்காடுகள்: ஒரு பிரம்மாண்டப் பார்வை
பூமியின் தட்பவெப்ப நிலையைச் சமன்படுத்தும் உலகின் மிக முக்கியமான பத்து மழைக்காடுகளின் தற்போதைய நிலவரமும் அதன் பரப்பளவும் இதோ:
-
அமேசான் மழைக்காடு (55,00,000 சதுர கி.மீ): தென் அமெரிக்காவின் பிரேசில், பெரு, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில் பரந்து விரிந்துள்ள இக்காடு, உலகப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதன் 60% பிரேசிலில் உள்ளது. இங்கு 390 பில்லியன் மரங்களும், 2.5 மில்லியன் பூச்சியினங்களும், பல்லாயிரக்கணக்கான அரிய தாவரங்களும் வாழ்கின்றன.
-
காங்கோ மழைக்காடு (17,80,000 சதுர கி.மீ): ஆப்பிரிக்காவின் ஆறு நாடுகளில் பரவியுள்ள இக்காடு உலக அளவில் இரண்டாவது பெரியதாகும். 10,000-க்கும் மேற்பட்ட விலங்கினங்களைக் கொண்ட இக்காட்டை நம்பி 4 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர்.
-
நியூகினியா மழைக்காடு (2,88,000 சதுர கி.மீ): ஆசிய-பசிபிக் பகுதியில் இந்தோனேசியா மற்றும் பாப்பு நியூகினியா நாடுகளில் அமைந்துள்ள மிக முக்கியமான வெப்பமண்டலக் காடு இதுவாகும்.
-
வால்டிவியன் மிதவெப்பமண்டல மழைக்காடு (2,48,100 சதுர கி.மீ): தென் அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியான சிலே மற்றும் அர்ஜென்டினா எல்லைகளில் அமைந்துள்ள தனித்துவமான காடு.
-
கிழக்கு ஆஸ்திரேலிய மிதவெப்ப மண்டல மழைக்காடுகள் (2,22,100 சதுர கி.மீ): ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரையில் நீண்டுள்ள இக்காட்டுப் பகுதியில், யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட ‘நீலமலைகள் தேசியப்பூங்கா’ அமைந்துள்ளது.
-
போர்னியோ மழைக்காடு (2,20,000 சதுர கி.மீ): மலே தீவுகள் மற்றும் இந்தோனேசியாவிற்கு இடையில் அமைந்துள்ள இது, 140 மில்லியன் ஆண்டுகள் பழமையான, ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் உலகின் மிகப்பழைமையான மழைக்காடாகும்.
-
பசிபிக் மிதவெப்ப மண்டல மழைக்காடு (60,346 சதுர கி.மீ): கனடா மற்றும் அமெரிக்கப் பகுதிகளை உள்ளடக்கிய இது, கடலோரமாக சுமார் 4000 கி.மீ நீளத்திற்குப் பரவியுள்ள உலகின் முதன்மை கடலோர மிதவெப்பக் காடாகும்.
-
சுமத்திரன் மழைக்காடு (25,000 சதுர கி.மீ): இந்தோனேசியாவின் மூன்று முக்கிய தேசியப் பூங்காக்களைத் தன்னுள் கொண்டுள்ள அரிய வெப்பமண்டலக் காடு.
-
போசாவாஸ் பாதுகாக்கப்பட்ட மழைக்காடு (20,000 சதுர கி.மீ): மத்திய அமெரிக்காவின் நிகரகுவா நாட்டின் 15% பரப்பளவை ஆக்கிரமித்துள்ள இக்காட்டில் 2,00,000-க்கும் மேற்பட்ட பூச்சியினங்கள் வாழ்கின்றன.
-
வெஸ்ட்லேண்ட் மிதவெப்ப மண்டல மழைக்காடு (11,880 சதுர கி.மீ): நியூசிலாந்தின் தெற்குத் தீவின் மத்திய மேற்கு கடற்கரையோரம் அமைந்துள்ள எழில் கொஞ்சும் மழைக்காடு.
மனித ஆக்கிரமிப்பும் காட்டுத்தீயும்: அச்சுறுத்தும் தற்போதைய பாதிப்புகள்
தொழில்புரட்சிக்கு முந்தைய காலத்தோடு ஒப்பிடும்போது, பூமியின் ஐந்தில் ஒரு பங்கு மழைக்காடுகள் ஏற்கனவே மனிதப் பேராசையால் அழிக்கப்பட்டுவிட்டன. தற்போதைய தீவிர காலநிலை மாற்றமும், விவசாய விரிவாக்கமும் இக்காடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன.
குறிப்பாக, அமேசான் மற்றும் தென்கிழக்கு ஆசியக் காடுகளில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாகக் காட்டுத்தீ ஏற்படுவது பன்மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும், நிமிடத்திற்கு 18 கால்பந்துத் திடல்களுக்கு நிகரான பரப்பளவு கொண்ட மழைக்காடுகள் தீக்கிரையாகின என்பது நடுக்கமூட்டும் உண்மை. இந்தத் தீ விபத்துகளால் அழிந்த காடுகளில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமானவை பிரேசில் மற்றும் பொலிவியா நாடுகளுக்குச் சொந்தமானவை ஆகும். மேலும், காங்கோ காடுகள் 85 விழுக்காடு வரை அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், வரும் 2050-ல் இதயம் உறையும் அளவிலான காடழிப்பு நடக்கும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
நம் பிழைப்புக்கான வழிகள்: நாம் செய்ய வேண்டியது என்ன?
மழைக்காடுகளைக் காப்பது என்பது ஏதோ ஏட்டளவிலான சுற்றுச்சூழல் பாடம் அல்ல; அது நமது அடுத்த தலைமுறையின் பிழைப்புக்கான இறுதிப் போராட்டம். நுகர்வோராகிய நாம், அன்றாடம் உருவாக்கும் கழிவுகளின் அளவைக் குறைக்க வேண்டும். மறுசுழற்சிக்கு உகந்த, சுற்றுச்சூழலுக்குத் தீங்கிழைக்காத இயற்கை சார்ந்த பொருட்களையே பயன்படுத்த பழக வேண்டும்.
மழைக்காடுகளை நாம் இழந்தால், அங்குள்ள கோடிக்கணக்கான தாவர, விலங்கினங்கள் அழிவதோடு மட்டுமல்லாமல், உலகளாவிய பருவமழைப் பொழிவும் நதி நீர் ஆதாரங்களும் முற்றிலுமாக வறண்டு போகும். “உன்னுள் இருக்கும் காட்டை” உணர்ந்து, காடுகளைக் காப்பதே நம் உயிரைக் காப்பதற்கான ஒரே வழி என்பதை உலக மக்கள் ஒவ்வொருவரும் தங்களின் கடமையாகக் கருத வேண்டிய தருணமிது.
நிலவளம் ரெங்கராஜன்


