ஜூன் 25ல் ரிலீஸாகும் பிரஜினின் ‘அந்தரன்’ பிரஸ்மீட் ஹைலைட்ஸ்!
தமிழ் சினிமாவில் எப்போதுமே க்ரைம் த்ரில்லர் கதைகளுக்கும், சஸ்பென்ஸ் நிறைந்த திரைக்கதைகளுக்கும் ரசிகர்களிடம் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில், முற்றிலும் புதியதொரு களத்தில், நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் ஒரு நிஜ வழக்கைத் தழுவி உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அந்தரன்’. ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் மு. கி. சாம்பசிவம் தயாரிப்பில், சந்தோஷ் ராவணன் இயக்கத்தில், நடிகர் பிரஜின் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இத்திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

‘அந்தரன்’ திரைப்படத்தில் பிரஜினுடன் இணைந்து இவானா வருண், அனுபமா குமார், ஆதிரன் பத்மன், ‘அருவி’ பாலா, தயாரிப்பாளர் மு.கி. சாம்பசிவம், ரமேஷ் பாபு, அர்ஜுன் தேவ், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன், வி ஜே ராஜூ உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஹரி எஸ் ஆர் இசையமைத்துள்ளார். ஜூன் 25-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த விழாவில், படக்குழுவினருடன் தயாரிப்பாளர் சி. வி. குமார், நடிகை சாண்ட்ரா, பிக் பாஸ் சபரி, ‘விக்கல்ஸ்’ விக்ரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
அந்தரன்: மறைந்திருந்து தாக்கும் வேடன்!
திரைப்படத்தின் தலைப்பு மற்றும் கதைக்களம் குறித்து இயக்குநர் சந்தோஷ் ராவணன் பேசுகையில், “‘அந்தரன்’ என்றால் ‘ஹண்டர்’ (Hunter), அதாவது மறைந்திருந்து தாக்குபவன் என்று பொருள். நாம் அன்றாட வாழ்க்கையில் பல விஷயங்களைச் சாதாரணமாகக் கடந்து செல்கிறோம். ஆனால், அதன் விளைவு மோசமாக மாறும்போதுதான் அதன் தீவிரத்தை உணர்கிறோம். அப்படிப்பட்ட ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினையைத்தான் இதில் பேசியிருக்கிறோம்.
இது தற்போது நீதிமன்றத்தில் நடந்து வரும் ஒரு நிஜ வழக்கின் பின்னணியைக் கொண்டது. ‘ராட்சசன்’, ‘போர் தொழில்’, ‘தெகிடி’ போன்ற படங்களில் இருப்பது போல, இதன் கிளைமாக்ஸிலும் ஒரு தனித்துவமான ட்விஸ்ட் இருக்கிறது. படம் க்ரைம் த்ரில்லராக இருந்தாலும், இதில் ரொமான்ஸுக்கும் முக்கியத்துவம் தந்துள்ளோம். அதற்கான காரணம் படத்தின் உச்சக்கட்ட காட்சியில் புரியும்” என்றார். மேலும், படத்தின் நாயகிக்கு இந்தி மட்டுமே தெரியும் என்பதால், தனக்கு தெரிந்த ஆங்கிலம் அவருக்கு புரியாமல், ஒரு மொழிபெயர்ப்பாளர் உதவியோடு காட்சிகளை இயக்கிய சுவாரசியத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
ஆன்மீக வழியில் அமைந்த ‘அந்தரன்’ டைட்டில்!
படத்தின் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றிய தயாரிப்பாளர் சி.வி. குமார் பேசுகையில், “இயக்குநர் சந்தோஷ் எனது அலுவலகத்தில் பணியாற்றியவர். தயாரிப்பாளர் சாம்பசிவம் எனது நெருங்கிய நண்பர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் காட்டியபோது ‘அந்தரன்’ என்று தலைப்பு இருந்தது. புரியும்படி வேறு தலைப்பு வைக்கலாமே என்று நான் சாம்பசிவத்திடம் கேட்டேன். அதற்கு அவர், ‘குடும்பத்தோடு கோயிலுக்குச் சென்று விருப்பச் சீட்டு (பூ போட்டுப் பார்த்தல்) போட்டுப் பார்த்தோம். என் மனைவி எடுத்த சீட்டில் ‘அந்தரன்’ என்றுதான் வந்தது. அதனால் மாற்ற முடியாது’ என்றார். படத்தை நான் பார்த்துவிட்டேன், இறுதிவரை கதையின் போக்கைக் கணிக்க முடியாத அளவுக்குச் சுவாரசியமாக வந்துள்ளது” எனப் பாராட்டினார்.
20 ஆண்டு கால ஓட்டமும் பிரஜினின் நம்பிக்கையும்!
படத்தின் நாயகன் பிரஜின் நெகிழ்ச்சியுடன் பேசுகையில், “கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை என் வாழ்க்கையை மாற்றிவிடாதா என்ற எதிர்பார்ப்புடன் இந்தத் திரையுலகில் ஓடிக்கொண்டிருக்கிறேன். அந்தரன் எனக்குள் பெரிய நம்பிக்கையைத் தந்துள்ளது. ரசிகர்கள் கொடுக்கும் காசுக்கும், அவர்கள் செலவிடும் நேரத்திற்கும் தகுதியான தரமான படைப்பாக இது இருக்கும்” என்றார். பிக் பாஸ் வீட்டில் தனக்கு நண்பர்களான விக்ரம் மற்றும் சபரி விழாவிற்கு வந்ததற்கு நன்றி தெரிவித்தார். ‘விக்கல்ஸ்’ விக்ரம் பேசுகையில், “பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னால், பின்னால் எனப் பலருக்கு வரலாறு மாறுவது போல, பிரஜினின் திரைப்பயணம் ‘அந்தரனுக்கு முன், அந்தரனுக்கு பின்’ எனப் பெரிய உயரத்தைத் தொடும்” என வாழ்த்தினார்.
புதுமுகப் படங்களைப் புறக்கணிக்க வேண்டாம்!
தயாரிப்பாளர் மு.கி. சாம்பசிவம் பேசுகையில், “‘அடவி’, ‘மனிதர்கள்’ படங்களைத் தொடர்ந்து இது எனது மூன்றாவது தயாரிப்பு. இப்படத்தின் கதை சமூகத்திற்கு மிகவும் தேவையானது. ‘நட்சத்திரங்கள் இல்லை’ என்பதற்காக விநியோகஸ்தர்களோ, ஓடிடி நிறுவனங்களோ புதியவர்களின் படங்களைப் புறக்கணிக்கக் கூடாது. இன்றைய முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் ஒருகாலத்தில் புதுமுகங்களாக வந்தவர்கள்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். ஜூன் 25 அன்று த்ரில்லர் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தரக் காத்திருக்கிறது ‘அந்தரன்’.


