பூமியின் மூத்த குடிகள்: உலக ஆமைகள் தினம் சிறப்புப் பார்வை
ஆமை என்றாலே நம் நினைவுக்கு வருவது அதன் மெதுவான நடையும், ஆபத்து காலத்தில் உடலை ஓட்டுக்குள் சுருக்கிக் கொள்ளும் குணமும்தான். ஆனால், நாம் நினைப்பதை விட இந்த உயிரினம் மிகவும் சுவாரசியமானது; பூமியின் சமநிலைக்கு இன்றியமையாதது. ஆண்டுதோறும் மே 23 அன்று கொண்டாடப்படும் உலக ஆமைகள் தினம் (World Turtle Day), இந்த அமைதியான ஊர்வன இனத்தைப் போற்றவும், அவற்றைப் பாதுகாக்கவும் நமக்கு நினைவூட்டுகிறது.
உலக ஆமைகள் தினம் உருவான பின்னணி
உலக ஆமைகள் தினம் கொண்டாடுவதற்குப் பின்னால் ஒரு தம்பதியரின் அர்ப்பணிப்பு கலந்த கதை இருக்கிறது.

-
தொடக்கப்புள்ளி: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சூசன் டெல்லம் (Susan Tellem) மற்றும் அவரது கணவர் மார்ஷல் தாம்சன் (Marshall Thompson) ஆகியோரால் 1990-ல் தொடங்கப்பட்ட “அமெரிக்க ஆமைகள் மீட்பு” (American Tortoise Rescue) என்ற லாப நோக்கற்ற அமைப்பே இதற்கு அடித்தளமிட்டது.
-
அசுர சாதனை: இந்த அமைப்பு இதுவரை நீர் மற்றும் நிலத்தில் வாழும் 4,000-க்கும் மேற்பட்ட ஆமைகளை மீட்டு மறுவாழ்வு அளித்துள்ளது.
-
கொண்டாட்டம்: இவர்களின் முயற்சியால், 2000-ஆம் ஆண்டிலிருந்து உலக ஆமைகள் தினம் அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 2026-ஆம் ஆண்டான நடப்பு ஆண்டில், இந்த தினம் தனது 26-வது ஆண்டை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சுராசிக் காலம் முதல் வாழும் பழங்குடிகள்
ஆமைகள் இன்று நேற்று உருவானவை அல்ல. அவை மனிதர்களுக்கும், ஏன் பாம்புகளுக்கும் முதலைகளுக்கும் கூட மூத்தவை!
-
தொன்மை வரலாறு: ஆமைகளின் சில இனங்கள் சுராசிக் (Jurassic) இடைக்காலம் முதலே பூமியில் வாழ்ந்து வருவதாக அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன.
-
உடல் அமைப்பு: ஊர்வன வகுப்பைச் சேர்ந்த ஆமைகளின் முதுகுப்புறத்தில் உள்ள தனித்துவமான குருத்தெலும்பு ஓடு, ஒரு இயற்கை கவசமாகச் செயல்படுகிறது.
-
சுவாசத் திறன்: இவை குளிர் இரத்த விலங்குகள் என்பதால் சூழலுக்கு ஏற்ப உடல் வெப்பத்தை மாற்றிக் கொள்ளும். இவை ‘அம்னியோடிக்கு’ வகையைச் சேர்ந்தவை என்பதால், பாலூட்டிகளைப் போல காற்றையே சுவாசிக்கின்றன. எனவே, எவ்வளவு நேரம் நீருக்கடியில் இருந்தாலும், மூச்சு விடுவதற்காக அவ்வப்போது நீரின் மேற்பரப்பிற்கு வந்தே தீர வேண்டும்.
-
வியப்பூட்டும் உடலமைப்பு (Cloaca): சில ஆமையினங்களின் பின்துளையில் (Cloaca) ‘பாப்பில்லே’ என்ற உறுப்பு உள்ளது. இது மீன்களின் செவுள்களைப் போல, நீரில் கரைந்துள்ள ஆக்சிசனை நேரடியாக உறிஞ்சிக் கொள்ள உதவுகிறது!
இனப்பெருக்கமும் பாலினத்தை தீர்மானிக்கும் வெப்பமும்
ஆமைகளின் வாழ்க்கைச் சுழற்சி மிகவும் தனித்துவமானது மற்றும் இயற்கையின் விந்தையாகும்.
வெப்பநிலைதான் பாலினம்: சில ஆமையினங்களின் முட்டைகள் பொரியும் போது, சுற்றுப்புற விநோத சுற்றுச்சூழல் வெப்பநிலையே அதன் பாலினத்தை முடிவு செய்கிறது. முட்டையிடப்பட்ட மணல் பரப்பில் வெப்பம் அதிகமாக இருந்தால் பெண் ஆமைகளும், வெப்பம் குறைவாக இருந்தால் ஆண் ஆமைகளும் பிறக்கின்றன.
-
தாய்மையின் கடமை: ஆமைகள் தங்களின் மென்மையான முட்டைகளை நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள உலர்ந்த மணலில் புதைத்து வைக்கின்றன. முட்டைகள் தாமாகவே பொரிந்து குஞ்சுகள் வெளிவந்து கடலை நோக்கி நகர்கின்றன. இதில் ஆச்சரியம் என்னவென்றால், தாய் ஆமைகள் குஞ்சுகளைப் பராமரிப்பதில்லை.
-
கால இடைவெளி: ஆமைகள் பருவம் அடைய பல ஆண்டுகள் ஆகும். மேலும், இவை மனிதர்களைப் போலவோ, மற்ற விலங்குகளைப் போலவோ ஆண்டுதோறும் முட்டையிடுவதில்லை; சில ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் முட்டையிடுகின்றன.
வாழ்விடமும் உணவுப் பழக்கமும்
உலகில் மொத்தம் 356 ஆமை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. நிலத்திலும், நன்னீரிலும், கடலிலும் வாழும் ஆமைகளின் உணவுப் பழக்கம் அவை வாழும் இடத்தை பொறுத்து மாறுபடும்:
மரணத்தை வெல்லும் மரபணுக்கள்: 300 ஆண்டுகள் வாழும் ரகசியம்
ஆமைகளின் ஆயுட்காலம் மனிதர்களை வியப்பில் ஆழ்த்தக்கூடியது. அவை குறைந்தபட்சம் 40 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 300 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை. இவற்றின் சராசரி ஆயுட்காலம் 150 ஆண்டுகள் ஆகும்.
அறிவியல் வியப்பு: நூறு ஆண்டுகளைக் கடந்த ஆமைகளின் ஈரல், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவற்றை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தபோது, அவை இளம் ஆமைகளின் உறுப்புகளைப் போலவே ஆரோக்கியமாக இருந்தது கண்டறியப்பட்டது. ஆமையின் உடல் உறுப்புகள் அவ்வளவு எளிதில் பழுதாவது இல்லை என்பதால், மனிதனின் நீண்ட ஆயுளுக்கான ரகசியத்தைக் கண்டறிய மரபணு ஆய்வாளர்கள் ஆமைகளின் மரபணுக்களை (DNA) தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
மனிதர்களால் நேரும் அச்சுறுத்தல்களும் பாதுகாப்புத் தேவையும்
பூமியின் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதில் ஆமைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. ஆனால், இன்று அவை பேராசை பிடித்த மனிதர்களால் பெரும் அச்சுறுத்தலைச் சந்தித்து வருகின்றன.
-
சட்டவிரோத வேட்டை: ஆமைகளின் இறைச்சி, ஓடு மற்றும் தோலுக்காக அவை சர்வதேச சந்தையில் சட்டவிரோதமாகக் கடத்தப்படுகின்றன. சில நாடுகளில் இவை உணவாகவும், பாரம்பரிய மருந்துகளாகவும் பயன்படுத்தப்படுவது பெரும் சாபக்கேடு.
-
சுற்றுப்புற மாசுபாடு: கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை ஜெல்லி மீன் என நினைத்து கடலாமைகள் உண்பதால் அவை மூச்சுத்திணறி இறக்கின்றன. கடற்கரை வாழ்விடங்கள் அழிக்கப்படுவதால் அவை முட்டையிடும் இடங்களை இழக்கின்றன.
நமது கடமை: விழிப்புணர்வை நோக்கி…
இந்த உலக ஆமைகள் தினத்தில் நாம் செய்ய வேண்டிய கடமைகள் மூன்று:
-
அழிவிலிருந்து பாதுகாத்தல்: ஆமைகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவற்றின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
-
கடற்கரையைத் தூய்மைப்படுத்துதல்: பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து, ஆமைகள் முட்டையிடும் கடற்கரைப் பகுதிகளைத் தூய்மையாக வைத்திருக்க சமூகமாக ஒன்றிணைய வேண்டும்.
-
பங்களிப்பை ஊக்குவித்தல்: ஆமை பாதுகாப்பு அமைப்புகளுக்கு நம்மால் இயன்ற ஆதரவை வழங்குவதோடு, சட்டவிரோத ஆமை விற்பனையைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
மெதுவாக நகர்ந்தாலும், பல கோடி ஆண்டுகளாகப் பூமியைக் காத்து வரும் இந்த அமைதியான, அழகான உயிரினங்களை வருங்கால சந்ததியினருக்கும் விட்டுச் செல்வது நம் ஒவ்வொருவரின் வரலாற்றுப் பொறுப்பாகும்!
நிலவளம் ரெங்கராஜன்


