அதிசய மருந்தா? ஆபத்தான மோகமா?-‘ஓசெம்பிக்’ தரும் எடைக் குறைப்பும், பறிபோகும் மன அமைதியும்!

அதிசய மருந்தா? ஆபத்தான மோகமா?-‘ஓசெம்பிக்’ தரும் எடைக் குறைப்பும், பறிபோகும் மன அமைதியும்!

ருத்துவ உலகில் ஒரு ‘அதிசய மருந்தாக’ கொண்டாடப்படும் ஓசெம்பிக் (Ozempic), இன்று உலகையே வியப்பில் ஆழ்த்தி வருகிறது. உடல் எடையைக் குறைப்பதிலும், உடல் பருமனை (Obesity) ஒழிப்பதிலும் இது காட்டும் வேகம் அபரிமிதமானது. ஆனால், அந்த வேகத்திற்குப் பின்னால் ஒரு பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருக்கிறதோ என்ற அச்சம் இப்போது எழுந்துள்ளது. எவன் கார்ட்னர் (Evan Gardner) வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கை, இந்த மருந்து உடல் பசியை மட்டுமல்ல, வாழ்க்கையின் மீதான ஆர்வத்தையுமே தின்றுவிடுவதாக எச்சரிக்கிறது.

அதிசய மருந்தின் ஆச்சரியமூட்டும் பலன்கள்

ஆரம்பத்தில் நீரிழிவு நோய்க்காகக் கண்டறியப்பட்ட ஓசெம்பிக், இன்று பசியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உடல் எடையை வியக்கத்தக்க வகையில் குறைக்கிறது. அதுமட்டுமின்றி, மது அருந்துதல் மற்றும் புகைபிடிக்கும் பழக்கத்தை அடியோடு நிறுத்துவதற்கும் இது உதவுகிறது. போதைப்பொருள் பழக்கம் மற்றும் ‘ஷாப்பிங்’ செய்ய வேண்டும் என்ற கட்டாய மன உந்துதல் (Compulsive shopping) போன்றவற்றைக் குணப்படுத்தவும் இந்த மருந்து ஒரு வரப்பிரசாதமாகப் பார்க்கப்படுகிறது.

இருண்ட பக்கம்: வாழ்க்கையின் மீதான பசியும் குறைகிறதா?

இந்த ‘அதிசயப் பலன்களுக்கு’ பின்னால் சில கசப்பான பக்கவிளைவுகளும் ஒளிந்துள்ளன. ஓசெம்பிக் பயன்படுத்துபவர்களில் சிலர், சொல்லொணாச் சோர்வு மற்றும் மனச்சோர்வுக்கு (Depression) உள்ளாவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இந்த மருந்தை எடுத்துக் கொண்ட ஒரு பெண்மணி, “நான் ஒன்றுக்கும் உதவாதவள் என்ற உணர்வு எனக்குள் மேலோங்கிவிட்டது. மனரீதியாகப் பாதிப்பைத் தாங்க முடியவில்லை,” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். இது ஒரு தனிப்பட்ட உதாரணம் மட்டுமல்ல, பல பயனாளர்கள் கீழ்க்கண்ட பாதிப்புகளைப் பட்டியலிடுகின்றனர்:

  • பாலியல் ஆர்வம் குறைதல்: உறவுகளில் நாட்டம் இல்லாத நிலை.

  • சமூக விலகல்: மற்றவர்களுடன் பழக வேண்டும் என்ற ஆசை முற்றிலும் அற்றுப்போவது.

  • பணித்திறன் முடக்கம்: எப்போதும் இருந்த உத்வேகம் மற்றும் சுறுசுறுப்பு காணாமல் போதல்.

உயிரா? உணர்வா? – நோயாளிகளின் தர்மசங்கடம்

ஓசெம்பிக் பயன்படுத்துபவர்கள் இப்போது ஒரு மிகக் கடினமான முடிவை எடுக்க வேண்டிய சூழலில் உள்ளனர். உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இந்த மருந்தை தொடர்ந்து எடுக்கலாமா? அல்லது மன நலனையும், வாழ்வின் மீதான பிடிப்பையும் மீட்டெடுக்க இதிலிருந்து வெளியேறலாமா? என்ற கேள்வி அவர்களைத் துரத்துகிறது.

பசியைக் கொல்வதற்காக உருவாக்கப்பட்ட இந்த மருந்து, ஒரு கட்டத்தில் வாழ்வின் மீதான ‘ருசியையும்’ சேர்த்து அழித்துவிடுவது மருத்துவ உலகிற்குப் புதிய சவாலாக உருவெடுத்துள்ளது. எவன் கார்ட்னர் குறிப்பிடுவது போல, பயனாளர்கள் இப்போது தங்களது பசியை மட்டுமல்ல, எல்லாவற்றின் மீதான தங்களது ‘தாகத்தையும்’ இழந்து நிற்கிறார்கள்.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Related Posts