ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘டெக்ஸ்லா’ படப்பிடிப்புத் தொடக்க!

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘டெக்ஸ்லா’ படப்பிடிப்புத் தொடக்க!

ண்ணன் ரவி குழுமம் சார்பில்  தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் ‘டெக்ஸ்லா’ (Tesla). இப்படத்தின் அதிகாரப்பூர்வ பூஜை மற்றும் தொடக்க விழா சென்னையில் உள்ள முன்னணி நட்சத்திர ஹோட்டலில் திரைத்துலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

நட்சத்திரப் பட்டாளம் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்:

‘டெக்ஸ்லா’ திரைப்படத்தில் கதாநாயகனாக ஜெய் நடிக்க, முக்கிய வேடத்தில் மலையாளத்தின் முன்னணி நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு நடிக்கிறார். மேலும் ஆனந்தராஜ், ஜி.எம். சுந்தர், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இபடத்திற்கு ‘இசை யுவன்’ யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கண்ணன் ரவி குழுமம் சார்பில் கண்ணன் ரவி தயாரிக்க, தீபக் ரவி இணை தயாரிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக வெளியான இப்படத்தின் அறிமுக வீடியோ (Intro Video) இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு விருந்தினர்கள்:

இவ்விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், திருமதி லதா ரஜினிகாந்த், தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி, இயக்குநர் பாலா, இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர்கள் சுஜாதா விஜயகுமார், ஜி.கே.எம். தமிழ் குமரன், அம்மா கிரியேஷன் சிவா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இவர்களுடன் தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

விழாவில் பிரபலங்கள் பேசியதாவது:

தயாரிப்பாளர் கண்ணன் ரவி: ”மேடையில் பேசுவது எனக்கு எப்போதும் சிறிது தயக்கத்தைத் தரும். இங்கு எனக்கு முன்னால் திரைத்துறையின் சிற்பிகளும், பிரம்மாக்களும் அமர்ந்திருக்கிறார்கள். பிசினஸில் நான் பெரியவனாக இருக்கலாம், ஆனால் சினிமாவைப் பொறுத்தவரை நான் இன்னும் எல்கேஜி (LKG) மாணவன் தான். துறை சார்ந்தவர்கள், ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவை.

தமிழகத்தின் ‘சூப்பர் ஸ்டார்’ குடும்பத்துடன் இணைந்து பணியாற்றுவதை ஒரு பாக்கியமாகக் கருதுகிறேன். இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மிகவும் திறமையானவர், அன்பானவர். அவருக்குச் சிறப்பான எதிர்காலம் உள்ளது. என் சகோதரர் போன்ற நடிகர் சுராஜ் அவர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு இப்போது அமைந்திருக்கிறது. நடிகர் ஜெய், அனிருத் மற்றும் இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி.”

செந்தமிழன் சீமான் (தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி): ”ஒரு நல்ல தொடக்கம் பாதி வெற்றிக்குச் சமம். டெக்ஸ்லா படத்தின் தொடக்கம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. ஒரு படம் தயாரிப்பதே கடினமான சூழலில், தயாரிப்பாளர் கண்ணன் ரவி ஒரே நேரத்தில் 16 படங்களைத் தயாரித்து வருகிறார். இது சினிமா மீது அவர் வைத்திருக்கும் பேரன்பைக் காட்டுகிறது. அவரது தயாரிப்பில் வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் பெரிய வெற்றி பெற்றது. அதேபோல், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் இந்தப் படமும், இதில் பணியாற்றும் ஜெய், சுராஜ் உள்ளிட்ட கலைஞர்களின் உழைப்பால் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.”

இயக்குநர் பாலா: ”என் முதல் வாழ்த்து தங்கை ஐஸ்வர்யாவிற்கு. அடுத்து, அவருக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் கண்ணன் ரவி-க்கு. 16 படங்களைத் தயாரிப்பதன் மூலம் அவர் பல குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கியிருக்கிறார். ஜெய், யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.”

நடிகர்/இயக்குநர் சமுத்திரக்கனி: ”நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் திரையுலகமே திரண்டு வந்திருக்கும் ஒரு பூஜை இது. தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் நல்ல மனதிற்காகவே அவர் இன்னும் நூற்றுக்கணக்கான படங்களைத் தயாரிக்க வேண்டும். ‘சம்பாதிப்பதில் ஒரு பகுதியை மற்றவர்களுக்குக் கொடுப்பதற்காகவே எடுத்து வைத்துவிடுவேன்’ என்று அவர் என்னிடம் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. வாழ்த்துகள்.”

நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு: ”இந்தப் படத்தின் கதையும், என் கதாபாத்திரமும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் பணியாற்றுவது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் கண்ணன் ரவி ஒரு உண்மையான மனிதர். அவரது விருந்தோம்பல் பண்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.”

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: ”இங்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி. நல்லதொரு தொடக்கம். என் மீதும், என் குழுவினர் மீதும் நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் கண்ணன் ரவி-க்கு நன்றி. இப்படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் வாழ்த்துகள். இந்தப் படத்தின் வெற்றிக்காக நாங்கள் அனைவரும் நம்பிக்கையுடன் உழைப்போம்.”

நடிகர் ஜெய்: ”என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்க்கு நன்றி. தயாரிப்பாளர் கண்ணன் ரவி  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே என்னிடம் இணைந்து பணியாற்றக் கேட்டார். நான் வளர்ந்த பிறகு உங்களுடன் பணிபுரிகிறேன் எனச் சொல்ல நினைத்தேன். ஆனால், ‘உனக்கான வளர்ச்சி என் படத்தின் மூலம் கிடைக்கட்டும்’ என்று நம்பிக்கையுடன் இந்த வாய்ப்பை அளித்தார். அவருக்காக என் முழு உழைப்பையும் இப்படத்திற்கு வழங்குவேன். ‘எண்ணம் போல் வாழ்க்கை’ என்பார்கள், தயாரிப்பாளரின் பெரிய உள்ளத்தைப் பார்த்தால் வாழ்க்கை சிறியது போல் தோன்றுகிறது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்.”