எளிமையின் சிகரம்…மக்கள் போராளி தோழர் நல்லகண்ணு ஐயாவுக்கு வீரவணக்கம்!
தமிழக அரசியலில் ‘தூய்மை’ என்ற சொல்லுக்கு உருவம் கொடுத்தால் அது ஐயா நல்லகண்ணுவாகத்தான் இருக்கும். ஒரு நூற்றாண்டு கால வரலாற்றைத் தன் தோள்களில் சுமந்தபடி, எளிய மக்களுக்காகத் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த அந்த மாபெரும் போராளியின் பயணம் இன்று ஓய்ந்திருக்கிறது.
சிறைவாசம் தந்த சுதந்திரப் போராளி
1925-ல் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த நல்லகண்ணு, வெறும் 15 வயதிலேயே ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் குதித்தவர். 18 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த அவர், ஒரு பத்திரிகையாளராகவும் தன் போராட்டத்தைத் தொடங்கினார். பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2000 மூட்டை நெல்லைக் கண்டுபிடித்து அவர் எழுதிய கட்டுரை, அதிகார வர்க்கத்தையே அதிரவைத்தது. அன்றே வீட்டை விட்டு வெளியேறி முழுநேர மக்கள் பணியில் இறங்கியவர், நெல்லைச் சதி வழக்கில் சிக்கி 7 ஆண்டுகள் இருட்டறையில் சிறை தண்டனை அனுபவித்தார். அவர் விடுதலையானபோதுதான் நாடும் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கியது.

அனைவருக்குமானவர்…
கட்சியில் உறுப்பினராகத் தொடங்கி, விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளராக நீண்ட காலமும்; கட்சியின் மாநிலச் செயலாளராக நான்கு முறை தேர்வு செய்யப்பட்டு 12 ஆண்டுகளும்; கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினராகவும், தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் (ஒழுங்கு நடவடிக்கைக் குழு) தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் மிக்கவர்.
நல்லதையே செய்தவர்:
இவரது தியாகத்தைப் பலரும் பல கோணங்களில் பாராட்டி மகிழ்ந்தது உண்டு. திமுக தலைவர் கருணாநிதி தோழர் நல்லகண்ணுவின் எண்பதாம் ஆண்டு விழாவில் பேசியபோது, “இன்றைக்கு நான் ஒரு உண்மையைச் சொல்கிறேன், எனது இரண்டு கண்களில் ஒன்று பழுதாகிவிட்டது, ஒரு கண் பார்வைதான் உண்டு, மற்றொரு கண் நல்லகண்ணு” என்றும்; “என்னைவிட இரண்டு வயது இளையவர் என்றாலும், தியாகத்தால் என்னைவிட மூத்தவர்” என்றும் பெருமிதம் பொங்கக் கூறினார்.
பாஜக அணியில் திமுக இருந்தபோது திருச்சியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நிருபர்கள் கருணாநிதியிடம், “நீங்கள் பாஜக அணியில் இருந்து விலகி வர வேண்டுமெனத் தொடர்ந்து நல்லகண்ணு பேசிவருகிறார், அது குறித்து உங்கள் பதில் என்ன?” என்று வினவியபோது, கருணாநிதி சற்றும் தயக்கமின்றி, “நல்லகண்ணு எப்போதும் நல்லதைத்தான் சொல்வார்” என்றார்.

தன் வாழ்நாள் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்காக, உழைக்கும் மக்களுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவர். தியாகத்தால் புடம்போட்ட தங்கமென ஜொலித்துக்கொண்டுள்ளார். கட்சித் தலைவராக மட்டுமின்றி, நல்ல வாசிப்பாளராக மட்டுமின்றி, சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் குறித்தும், விவசாயிகளின் விடிவெள்ளியாகத் திகழ்ந்த விடுதலைப் போராட்ட வீரர் தோழர் பி.சீனிவாச ராவ் வாழ்க்கை வரலாறு, கவிஞர் தமிழ்ஒளி குறித்த வரலாறு, விவசாயிகள் சங்க வரலாறு, விவசாயத் தொழிலாளர் சங்க வரலாறு எனப் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். அநீதிகள் எங்கே நடைபெற்றாலும், அதனைக் கண்டு பொங்கி எழும் தோழராகத் திகழ்ர்.
பணத்தை மதிக்காத பண்பாளர்
இன்றைய காலகட்டத்தில் அதிகாரமும் பணமுமே அரசியலைத் தீர்மானிக்கும் நிலையில், நல்லகண்ணு ஐயா அதற்கு நேர்மாறாக வாழ்ந்தவர். அவரது 80-வது பிறந்தநாளில் கட்சித் தொண்டர்கள் கஷ்டப்பட்டு வசூலித்துக் கொடுத்த ஒரு கோடி ரூபாயை, அதே மேடையிலேயே கட்சிக்கே திருப்பித் தந்து அனைவரையும் நெகிழ வைத்தார். தமிழக அரசு வழங்கிய அம்பேத்கர் விருதுத் தொகையையும் தனக்கென வைத்துக் கொள்ளாமல், கட்சிக்கும் விவசாயச் சங்கத்திற்குமே பிரித்துக் கொடுத்தவர் அவர்.
மண்ணுக்காகவும் மக்களுக்காகவும்…
தாமிரபரணி ஆற்று மணல் கொள்ளைக்கு எதிராகத் தனி மனிதனாக நின்று அவர் நடத்திய சட்டப் போராட்டங்கள் காலத்தால் அழியாதவை. தீண்டாமை ஒழிப்பு, நிலவுடைமை எதிர்ப்பு எனச் சமூக அநீதி எங்கு நடந்தாலும் அந்த இடத்திற்கு முதல் ஆளாக ஓடிச் செல்பவர் அவர். துக்ளக் சோ அவர்களே பாராட்டியது போல, பெயருக்கேற்றவாறு நிஜ வாழ்க்கையிலும் ‘நல்ல கண்ணு’ வாகவே வாழ்ந்து காட்டியவர்.
சிறைக்கொட்டடிகள், தலைமறைவு வாழ்க்கை எனத் தன் வாழ்நாளில் பெரும் பகுதியைத் துன்பங்களுக்கு இடையே கழித்தாலும், ஒருபோதும் அவர் தனது கொள்கையிலிருந்து பின்வாங்கியதில்லை. 100 வயது வரை ஒரு அப்பழுக்கற்ற அரசியல்வாதியாகத் திகழ்ந்த ஐயாவின் மறைவு, தமிழகத்திற்கு ஒரு பேரிழப்பு. அந்த மகத்தான மனிதருக்கு வீரவணக்கம் செலுத்துவோம்!
தென்காசி தேவா


