அறிவியலின் தியாகி கியோர்டானோ புரூணோ: உண்மையைச் சொன்னதற்காக எரிக்கப்பட்ட ஒரு தீர்க்கதரிசி!

அறிவியலின் தியாகி கியோர்டானோ புரூணோ: உண்மையைச் சொன்னதற்காக எரிக்கப்பட்ட ஒரு தீர்க்கதரிசி!

தினாறாம் நூற்றாண்டில் உலகம் மதப் பழமைவாதத்தின் பிடியில் இருந்தபோது, “பூமி பிரபஞ்சத்தின் மையம் அல்ல; சூரியன் ஒரு நட்சத்திரமே!” என்று உரக்கச் சொன்ன ஒரு குரல், அதிகார வர்க்கத்தின் சிம்மாசனங்களை உலுக்கியது. அந்தத் தீர்க்கதரிசனக் குரலுக்குச் சொந்தக்காரரான கியோர்டானோ புரூணோ (Giordano Bruno), மதவெறியர்களால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட தினம் இன்று (பிப்ரவரி 17, 1600).

மடாலயத்தில் துளிர்விட்ட அறிவியல் தேடல்

இத்தாலியின் நோலா நகரில் 1548-ல் பிறந்த புரூணோ, இளம் வயதிலேயே துறவியாகும் நோக்கில் மடத்திற்கு அனுப்பப்பட்டார். 24 வயதில் பாதிரியாராகவும் பொறுப்பேற்றார். ஆனால், அவரது தேடல் விவிலிய வசனங்களையும் தாண்டி விண்வெளி வரை விரிந்தது. புரூணோ மதத்தை விட அறிவியலே உண்மை என நம்பினார். திருச்சபையின் நடைமுறைக்கு மாறான பழக்கவழக்கங்களைக் கேள்வி கேட்கத் தொடங்கியதால், அதிகார வர்க்கத்தின் கோபத்திற்கு ஆளானார்.

“சூரியன் ஒரு நட்சத்திரம்”: அன்றே சொன்ன விந்தை

தொலைநோக்கிகள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே, புரூணோ தனது அறிவாற்றலால் பிரபஞ்சத்தின் ரகசியங்களை உடைத்தார்:

  • பிரபஞ்சம் எல்லையற்றது; அதற்கு முடிவே இல்லை.

  • சூரியன் என்பது இரவு வானில் நாம் காணும் எண்ணற்ற விண்மீன்களில் ஒன்றுதான்.

  • பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதால்தான் இரவு – பகல் உண்டாகிறது.

  • விண்மீன்களுக்கும் கோள்கள் இருக்கலாம்; அங்கும் உயிரினங்கள் வாழ வாய்ப்புள்ளது.

இந்தக் கருத்துக்கள் அன்றைய போதனைக்கு மாறாக இருந்ததால் “மதத்துரோகி” என முத்திரை குத்தப்பட்ட புரூணோ, உயிருக்கு அஞ்சி ஐரோப்பா முழுவதும் பல நாடுகளுக்கு நாடோடியாகச் சுற்றித் திரிந்தார்.

சிறைவாசம் மற்றும் இறுதித் தியாகம்

1592-ல் கைது செய்யப்பட்ட புரூணோ, சுமார் 7 ஆண்டுகள் ரோம் நகரின் இருண்ட சிறையில் அடைக்கப்பட்டார். கடுமையான சித்திரவதைகளுக்குப் பிறகும், “நான் சொன்னது உண்மை, அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்” என்பதில் உறுதியாக இருந்தார். இறுதியில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

“தீர்ப்பைக் கேட்டு நான் பயப்படுவதை விட, இந்தத் தீர்ப்பை வழங்குவதில் நீங்கள் தான் அதிகம் பயப்படுகிறீர்கள்” என்று தீர்ப்பளித்தவர்களின் முகத்தைப் பார்த்து முழங்கிய மாவீரன் அவர். 1600-ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ல், ரோம் நகரின் பொதுச்சதுக்கத்தில் அவர் உயிருடன் எரிக்கப்பட்டார்.

காலம் செய்த பரிகாரம்

புரூணோ கொல்லப்பட்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு, உலகம் அவரது மேதமையை உணர்ந்தது. 19-ஆம் நூற்றாண்டில் அவர் எரிக்கப்பட்ட அதே இடத்தில் அவருக்குச் சிலை எழுப்பப்பட்டது. இன்று நிலவின் ஒரு பள்ளத்திற்கு (Crater) அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. 20-ஆம் நூற்றாண்டின் நவீன வானியல் கண்டுபிடிப்புகளுக்கு புரூணோ அன்று விதைத்த சிந்தனைகளே அடிப்படை.

அறிவியல் உண்மையை உரக்கச் சொன்னதற்காகத் தன்னைத் தீயிற்குத் தாரை வார்த்த புரூணோவை இந்த நாளில் நினைவு கூர்வோம்!

தனுஜா

Related Posts