ஏஐ மாநாட்டில் இணையமே இல்லை’! டெல்லியில் அம்பலமான மோடி அரசின் கையாலாகத்தனம்!
“எதிர்காலமே இதுதான்!” என்று எக்காளமிட்டுத் தொடங்கப்பட்ட டெல்லி ஏஐ இம்பாக்ட் சமிட் 2026, இன்று சமூக வலைதளங்களில் கேலிப் பொருளாகி நிற்பது வேதனையிலும் வேதனை. எங்கும் ஏஐ, எதிலும் ஏஐ என்று பறைசாற்றிய மத்திய அரசின் ‘ஹை-டெக்’ கனவு, பாரத் மண்டபத்தின் வாசலிலேயே மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறது. செயற்கை நுண்ணறிவை உலகிற்குக் காட்டப்போவதாகச் சொன்னவர்கள், இயற்கை உபாதைகளுக்கும், அடிப்படைத் தேவைகளுக்கும் கூட வழிசெய்யாமல் கோட்டை விட்டிருப்பதுதான் இன்றைய ‘நிதர்சனமான’ செய்தி.
தண்ணீரும் இல்லை… தெளிவும் இல்லை!
“நோ வாட்டர், நோ கிளாரிட்டி” (No water, no clarity) – இது ஏதோ எதிர்க்கட்சிகளின் கோஷம் அல்ல; மாநாட்டிற்கு வந்தவர்களின் குமுறல். பல மணி நேரம் வெயிலில் காக்க வைக்கப்பட்ட பிரதிநிதிகளுக்குக் குடிக்கத் தண்ணீர் கூட வழங்காதது, ‘வளர்ந்த இந்தியா’வின் இலட்சணமா? செய்திகளில் மட்டும் கொண்டாட்டமாகக் காட்டப்படும் இந்த நிகழ்வின் தரைமட்ட யதார்த்தம் (Ground Reality) மகா கேவலம் என எக்ஸ் (X) தளத்தில் பதிவுகள் தெறிக்கின்றன.

ஏஐ மாநாட்டிலேயே இணையம் ‘கட்’!
ஒரு தொழில்நுட்ப மாநாட்டின் முதுகெலும்பே இணையத் தொடர்புதான். ஆனால், டெல்லி மாநாட்டு வளாகத்திலோ மொபைல் இன்டர்நெட் என்பது ‘கானல் நீர்’ ஆகிவிட்டது. ஏஐ பற்றிப் பேச வந்தவர்கள், ஒரு ட்வீட் போடக்கூட சிக்னல் தேடி அலைந்த கொடுமையை என்னவென்று சொல்ல? “இணையமே இல்லாத இடத்தில் ஏஐ புரட்சி செய்யப்போகிறார்களாம்” எனப் பங்கேற்பாளர்கள் கிண்டல் செய்கின்றனர்.
மார்க்கெட்டிங் அதிகம்… மேட்டர் கம்மி!
840-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப்கள் எனப் பட்டியல் நீளமாக இருந்தாலும், அங்கே ‘ஏஐ’ (AI) என்பதை விட ‘சுவரொட்டிகள்’ (Posters) தான் அதிகம் என்கிறார்கள் நேரில் பார்த்தவர்கள்.
-
பாதுகாப்பு கெடுபிடி: பிரதமர் மோடியின் வருகைக்காக பகல் 12 மணிக்கே பகுதிகள் சீல் வைக்கப்பட்டன. பல ஸ்டார்ட்-அப் நிறுவனர்களின் உபகரணங்கள் திருடு போனதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
-
மறைக்கப்பட்ட ஏஐ: பொதுமக்களுக்கான அனுபவப் பகுதியில் ஏஐ-ன் பயன்பாடு துளியும் இல்லை. இது ஒரு தொழில்நுட்ப மாநாடா அல்லது வெறும் விளம்பரக் கண்காட்சியா? என்ற கேள்வி பலமாக எழுகிறது.
ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களின் கையாலாகத்தனம்
ஒரு சர்வதேச மாநாட்டை எப்படி நடத்த வேண்டும் என்ற குறைந்தபட்சத் திட்டமிடல் கூட இல்லாமல், வெறும் ‘ஆப்டிக்ஸ்’ (Optics) எனப்படும் விளம்பரத்திற்காக மட்டும் இவ்வளவு பெரிய பொருட்செலவில் மாநாடு நடத்துவது யாருக்காக? குப்பை மேடுகள், சாலைப் பள்ளங்கள் என டெல்லியின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்க்க வழியில்லாதவர்கள், ஏஐ மூலம் உலகை ஆளப்போவதாகச் சொல்வது ‘விஞ்ஞான’ நகைச்சுவை.
கடைசித் துளி:
“கோடி கோடியாய் கொட்டி விளம்பரம் செய்தால் மட்டும் போதாது; ஒரு சாதாரணக் குடிமகனுக்குத் தேவையான தண்ணீரையும், முறையான வழிகாட்டுதலையும் வழங்கத் துப்பில்லாத எந்தத் தொழில்நுட்பமும் வெற்று காகிதமே!”
தமிழ் செல்வி


