இரா.முத்தரசன் நடித்த ‘அரிசி ‘ படத்தின் இசை & முன்னோட்ட வெளியிட்டு விழாத் துளிகள்!

இரா.முத்தரசன் நடித்த ‘அரிசி ‘ படத்தின் இசை & முன்னோட்ட வெளியிட்டு விழாத் துளிகள்!

ந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.முத்தரசன் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில், அறிமுக இயக்குநர் எஸ்.ஏ. விஜயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அரிசி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த விழாவில் தலைவர்கள் ஆற்றிய உரையின் முக்கியத் தொகுப்பு இதோ:

உதயநிதி ஸ்டாலின்: ‘அரிசி’ உரிமையின் அடையாளம்!

“வழக்கமாகச் சினிமா நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்பதில்லை, ஆனால் அண்ணன் முத்தரசன் கேட்டபோது என்னால் மறுக்க முடியவில்லை. 2006-ல் கலைஞர் கொண்டு வந்த ‘2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி’ திட்டம், பல ஏழைக் குடும்பங்களின் பசியைப் போக்கிய புரட்சி. அரிசிக்காக மக்கள் பண்ணையார்களிடம் அடிமையாக இருந்த காலத்தை மாற்றி, அதை அடிப்படை உரிமையாக்கியவர் கலைஞர். அந்த வகையில், விவசாயிகளின் வாழ்வியலைப் பேசும் இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறும். மக்கள் பணியில் இருக்கும் முத்தரசன் அண்ணன், திரைத்துறைக்கு வந்திருந்தாலும் அவர் எப்போதும் மக்களோடுதான் இருப்பார்.”

வைகோ: இயற்கையான நடிப்பு, இதயத்தைத் தொடும் இசை!

“முத்தரசன் அண்ணன் இந்தப் படத்தில் விவசாயியாகவே மாறிவிட்டார். அவர் கட்டியிருக்கும் தலைப்பாகையும், வயலில் நெற்கதிர்களை வீசும் லாவகமும் அவர் ஒரு தேர்ந்த உழவர் என்பதை நிரூபிக்கிறது. இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை இதயத்தைக் கவர்கிறது. இதுவரை நான் எந்த மேடையிலும் ‘படம் பாருங்கள்’ என்று சொன்னதில்லை, ஆனால் முதல்முறையாக விவசாயப் பெருமக்களுக்காக இந்தப் படத்தைப் பார்க்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.”

தொல். திருமாவளவன்: இடதுசாரி அரசியலின் திரைப் பதிவு!

“அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் சூழலில், இந்தப் படம் மிகச் சரியான நேரத்தில் வருகிறது. ஒரு விவசாயி தான் உற்பத்தி செய்யும் பொருளுக்குத் தானே விலை நிர்ணயம் செய்ய முடியாத அவலத்தை இந்தப் படம் பேசுகிறது. திரையில் தோன்றி முதலமைச்சராகத் துடிக்கும் பிம்ப அரசியலுக்கு மத்தியில், இடதுசாரி சித்தாந்தத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு அரசியல் கருவியாகவே முத்தரசன் அண்ணனின் இந்தப் பங்களிப்பைப் பார்க்கிறேன்.”

செல்வப் பெருந்தகை & சமுத்திரக்கனி: காலத்தின் தேவை!

  • செல்வப் பெருந்தகை: “மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் ஒருபுறம் இருக்க, இந்தியாவில் அரிசி உற்பத்தி குறைந்து வருவது கவலைக்குரியது. இந்தப் படத்தை ஒரு பாடமாக அனைவரும் பார்க்க வேண்டும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இந்தப் படத்தை வெளியிடுவதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்கும்.”

  • சமுத்திரக்கனி: “சமூகத்திற்குத் தேவையான படைப்புகளைத் தருபவரே உண்மையான படைப்பாளி. இரா.முத்தரசன் அவர்களை நான் அப்பாவாகவே பார்க்கிறேன். அவர் அணிந்திருக்கும் ‘சிவப்புத் துண்டு’ என்பது வெறும் நிறமல்ல; அது பேரன்பு மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளம். வரும் காலங்களில் காசு பணத்திற்காக அல்ல, உணவுக்காகத்தான் சண்டை வரும். அதைச் சொல்லும் ஆவணம் இது.”

இரா. முத்தரசன்: இது ஒரு தற்செயலான விபத்து!

“முதலில் ஆவணப்படம் என்று சொல்லி இரண்டு நாள் நடிக்க அழைத்தார்கள், அப்படியே 40 நாட்கள் ஆகிவிட்டது. இது ஒரு தற்செயலான விபத்து போன்றதுதான். சினிமாவில் நடித்தாலும் என்னுடைய முழுநேரப் பணி எப்போதும் அரசியல்தான் என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். விவசாயிகளின் வலியையும் வாழ்வாதாரத்தையும் பேசும் இந்தப் படத்தை மக்கள் முடிவுக்கு விட்டுவிடுகிறேன்.”

error: Content is protected !!