நாக்குளறிய குறள்…கைநழுவும் அதிகாரம்: எடப்பாடியைச் சோதிக்கும் இலக்கியமும் அரசியலும்!
நேற்று மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிரம்மாண்டப் பொதுக்கூட்டம், தமிழக அரசியலில் ஒரு புதிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 45 நிமிடங்கள் ஆவேசமாகப் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தனது உரையில் ஒருமுறை கூட ‘அதிமுக’ என்ற பெயரையோ அல்லது ‘எடப்பாடி பழனிசாமி தான் அடுத்த முதல்வர்’ என்றோ சொல்லாமல் தவிர்த்தது பலரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது.
இரட்டை இன்ஜின் சர்க்காரும் எடப்பாடியின் கனவும்
பிரதமர் மோடி தனது உரையில், தமிழகத்தில் அமையவிருப்பது ‘இரட்டை இன்ஜின் சர்க்கார்’ (Double Engine Government) கொண்ட என்டிஏ ஆட்சிதான் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டார். அதாவது, மத்தியில் பாஜாவும் மாநிலத்தில் என்டிஏ கூட்டணியும் ஆட்சி செய்யும் என்பதே அதன் மறைமுகப் பொருள். ஆனால், எடப்பாடியாரோ “தமிழகத்தில் அதிமுக ஆட்சிதான் அமையும்; பாஜகவோடு கூட்டணி இருந்தாலும் அதிமுக தனி மெஜாரிட்டி பெறும்” என்று நம்புகிறார்.

அவர் நம்புவதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு. ஆனால், ‘தில்லி மேலிடம்’ இதற்கு அனுமதிக்குமா? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. புதுதில்லியில் அடகு வைக்கப்பட்ட எந்தப் பொருளும் மீட்கப்பட்டதாகச் சரித்திரமே கிடையாது; அது மூழ்கிப் போனதுதான் வரலாறு. அந்த வகையில், சக்கர வியூகத்தில் மாட்டிக் கொண்ட அபிமன்யுவின் நிலைதான் இன்றைய எடப்பாடியின் நிலையும் கூட.
வள்ளுவரின் எழுத்தாணியும் எடப்பாடியின் குளறலும்
சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்பவர்களுக்கு இலக்கியங்கள் கூட இளைப்பாறுதல் கொடுப்பதில்லை என்பது எடப்பாடியாரின் விஷயத்தில் உண்மையாகிவிட்டது. இதற்கு முன்பு கம்பராமாயணத்தில் சேக்கிழார் வந்து அவருக்குச் சிக்கல் கொடுத்தார். இப்போது திருவள்ளுவரும் அவரை எழுத்தாணியால் குத்திவிட்டாரோ என்றே தோன்றுகிறது.
மதுராந்தகம் மேடையில் அவர் சொன்ன குறள்:
‘எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்’ (திருக்குறள் – 666)
திண்ணியராக (மன உறுதி உடையவராக) இருந்தால் எண்ணியதை எண்ணியபடியே அடையலாம் என்பது இதன் பொருள். ஆனால், மேடையில் எடப்பாடியார் இந்தக் குறளைச் சொல்லும்போது, ‘எண்ணிய எண்ணியாங்கு இனிது எண்ணியார் திண்ணியராம் பெறின்’ என்று நா குளறிக் காலை வாரிவிட்டுவிட்டார்.
மழலையும் முதிர்ச்சியும்: ஒரு ஒப்பீடு
எடப்பாடி சார், பிரதமருக்குப் போட்டியாக நீங்களும் மேடையில் திருக்குறள் சொல்வதில் தவறில்லை. ஆனால், பிரதமர் மோடி குறளை எப்படிச் சொன்னாலும், அதை மக்கள் ஒரு ‘மழலை மொழியாக’ ரசித்துவிட்டு மறந்துவிடுவர். ஆனால், நீங்கள் மண்ணின் மைந்தர்; மொழியின் ஆளுமை உடையவர். நீங்கள் தவறாகச் சொன்னால் அது விமர்சனமாக மாறும்.
தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான திட்டங்களை 24 மணி நேரமும் யோசித்துக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி. இருப்பினும், அவ்வப்போது சிறிது நேரமாவது ஒதுக்கி இலக்கிய நிழலில் இளைப்பாறுங்கள்; அப்போதுதான் இத்தகைய குளறல்களைத் தவிர்க்க முடியும்.


