சிறை விமர்சனம்!

சிறை  விமர்சனம்!

திரையில் காட்சிகள் விரியத் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயே பார்வையாளர்களின் மனங்களைச் சிறைபிடிக்கத் தொடங்கி விடுகிறது இந்தத் திரைப்படம்தமிழ் உள்பட பல மொழிகளில் கணக்கில் அடங்காத அளவில் காவல் துறை சம்பந்தப்பட்ட சினிமாக்கள் வந்திருக்கின்றன. அதில் பெரும்பாலும் நாயகனாக நடித்தவர் மினிமம் சப் இன்ஸ்பெக்டராகவோ, அசிஸ்டன்ட் கமிஷனராகவோ வந்திருக்கிறார்கள். ஆனால் இதில்தான் முதல்முறையாக ஏட்டு என்று அழைக்கக் கூடிய ஹெட் கான்ஸ்டபிளாக நாயகன் லெவலில் வந்து அவரது பொறுப்பு, எல்லை என்ன? காவலரென்பவர் ஜனங்களின் வாழ்வில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியுமென்பதை நுணுக்கமாகவும், எதார்த்தமாகவும் காட்சிப்படுத்தி அடிசினலாக ஒரு அழகான காதல் கதையை கோர்த்து பார்வையாளர்களைக் கவர்வதில் ஜெயித்து விடுகிறார்கள்

கதைக்களம்

கொலை வழக்கு ஒன்றில் வேலூர் சிறையில் விசாரணை கைதியாக இருக்கும் அப்துல் ரெளஃப் எனும் கைதி (அக்‌ஷய் குமார்) சிவகங்கை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு ஹெட் கான்ஸ்டபிள் விக்ரம் பிரபு தலைமையிலான குழுவிற்கு வழங்கப்படுகிறது. பயணத்தின்போது ஏற்படும் சில சம்பவங்களை அடுத்து கைதி போலீஸ் துப்பாக்கி ஒன்றுடன் தப்பித்து விடுகிறார். ஏன் அந்த கைதி தப்பினார்? அவரது நிஜப் பின்னணி என்ன? விக்ரம் பிரபு எதிர்கொண்ட சவால்கள் என்ன? விசாரிக்கப்படாமலே, வாய்தா மட்டும் அளிக்கப்பட்டு ஆண்டுகணக்காகச் சிறையில் வாடும் கைதியின் நிலைமை-. அதுவும் பாதிக்கப்பட்ட அந்த கைதி முஸ்லிமாக இருந்துவிட்டால் நிகழும் சோகம் மற்றும் நீதித்துறையின் மெத்தனத்தை புட்டு புட்டு வைப்பதே சிறை படக் கதை .

நடிகர்களின் பங்களிப்பு

விக்ரம் பிரபு: நாயகன் என்பதைத் தாண்டி, ஒரு முதிர்ச்சியான ஹெட் கான்ஸ்டபிளாக வாழ்ந்திருக்கிறார். வசன உச்சரிப்பிலும் உடல்மொழியிலும் ஒரு புதிய விக்ரம் பிரபுவைத் திரையில் பார்க்க முடிகிறது.

அக்‌ஷய் குமார்: அறிமுக நடிகர் என்று சொல்ல முடியாத அளவிற்கு, பள்ளிப் பருவம் முதல் சிறை கைதி வரை தனது தோற்ற மாற்றத்தாலும் எதார்த்தமான நடிப்பாலும் கைதட்டல் பெறுகிறார்.

அனிஷ்மா அனில்குமார்: எளிமையான அழகும், குழந்தைத் தனமான சிரிப்பும் கொண்ட இவரது நடிப்பு படத்திற்குப் பெரும் பலம்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்

இயக்கம் & திரைக்கதை: உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்துத் தமிழ் எழுதிய கதையை, சுரேஷ் ராஜகுமாரி மிக வலிமையான காட்சி மொழியாக்கியுள்ளார். 2003 காலகட்டத்தில் ஒரு இஸ்லாமிய இளைஞரைச் சமூகம் பார்த்த விதத்தை ஆழமாகப் பதிவு செய்துள்ளார்.

இசை: ஜஸ்டின் பிரபாகரனின் இசை கதாபாத்திரங்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது.

ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம் இருளில் நிகழ்த்திய ஒளி மாயாஜாலம் காட்சிகளுக்குப் பிரம்மாண்டம் சேர்க்கிறது.

படத்தொகுப்பு: பிலோமின் ராஜின் கச்சிதமான படத்தொகுப்பு, கதையைச் சில இடங்களில் பதற்றத்தின் உச்சத்திற்குக் கொண்டு செல்கிறது.

நிறை & குறை

நிறை: காவல்துறை பற்றிய நுணுக்கமான மற்றும் எதார்த்தமான பதிவுகள்.

விக்ரம் பிரபு – அக்‌ஷய் குமார் இடையேயான நடிப்புப் போட்டி.

சமூக நீதி மற்றும் அதிகார வர்க்கத்தின் மீதான விமர்சனம்.

குறை: முதல் பாதியில் சில இடங்களில் ஏற்படும் சிறு தொய்வு. இருப்பினும் காதல் கதையின் ஆழம் அதை மறக்கச் செய்கிறது.

மொத்தத்தில்  கடமை, சட்டம் மற்றும் மனிதாபிமானம் ஆகியவற்றுக்கு இடையேயான போராட்டத்தைச் சொல்லும் ‘சிறை’, இன்றைய காலத்திற்கு தேவையான படைப்பு.

மார்க்: 4 / 5

Related Posts