’பைசன்’ காளமாடன் – விமர்சனம்!
நசுக்கப்பட்டோம், பிதுக்கப்பட்டோம் என்று மட்டுமே முணுமுணுத்து முன்னுக்கு வந்து விட்ட மாரிசெல்வராஜ் இப்போது சாதி உள்ளிட்ட பிற காரணங்களினால் ஒரு இளைஞரின் வாழ்க்கையில் நடந்த வன்முறை சம்பவங்கள் பற்றியும் , திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி நிலப்பரப்பின் சமூக மோதல்கள் மற்றும் அந்த மண்ணின் கோபம், வலி போன்றவற்றை தன் பாணியில் வெளிக் காட்டி இருக்கிறார். எடுத்து கொண்ட கண்டெண்டில் தாதாக்கள் காட்சிகள் சற்று அதிகமாக இருப்பது ஒரு குறையே. இதை தவிர்த்து கபடி காட்சிகளை இன்னும் கொஞ்சம் வைத்திருந்தால் பைசன் மிகச் சிறப்பாக பரிணமளித்திருப்பான்.
பைசன் – காளமாடன். கபடி விளையாட்டிற்காக அர்ஜுனா விருது பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மணத்தி கணேசன் வாழக்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. அதாவது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வானதி என்ற ஊரில் மிக எளிமையான குடும்பத்தில் வாழ்ந்து வருபவன் கிட்டான் (துருவ்). கபடி விளையாட்டில் இவரது அதீத ஆர்வத்தை பார்த்து பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் இவரை உற்சாகப்படுத்துகிறார். கிட்டானை பல்வேறு கிளப்களுக்கு அனுப்பி விளையாட வைக்கிறார்.அதே சமயம் உள்ளூரில் உள்ள சமூக, வர்க பிரச்சனைகள் கிட்டானின் வளர்ச்சிக்கு பெரிய தடையாக இருக்கிறது. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இரண்டு பெரிய தாதாக்கள் தூத்துக்குடி சுற்று வட்டார பகுதியில் அவ்வப்போது மோதி கொள்கிறார்கள். இவர்களில் ஒரு தாதா கிட்டானை தன் கபடி கிளப்பில் ஆட வைக்கிறார். ஒரு கட்டத்தில் இரண்டு தாதாக்களுமே கொல்லப்படுகிறார்கள்.மிகுந்த போராட்டத்திற்கு பிறகு ஜப்பானில் நடைபெற போகும் இந்தியா – பாகிஸ்தான் கபடி போட்டியில் கலந்து கொள்ள தமிழ் நாடு சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஜப்பான் செல்கிறார். அங்கே இந்திய கபடி கழகத்தில் பெரிய பதவியில் இருக்கும் ஒருவர் கிட்டான் கபடியில் பங்கு பெறுவதை தடுக்க நினைக்கிறார். அதை மீறி கிட்டான் வெற்றி பெறுகிறாரா? என்று சொல்வதுதான் பைசன் படக் கதை.
இறுக்கமான உடல், வெற்றிக்கும், ஒதுக்கப்படுதலுக்கும் இடையேயான மனப் போராட்டம், இரண்டையும் சரி விகிதத்தில் தந்து நடிப்பில் ஒரு கபடி பைசனாக வாழ்ந்து காட்டி விட்டார் துருவ். அதிலும் பள்ளியில் கடவுள் வாழ்த்து நடந்து கொண்டிருக்கும் நிலையில் மறைந்திருந்து சாப்பாடு திருடி தின்னும் துருவ் விக்ரமை பள்ளி ஆசிரியர் அருவி மதன் கண்டுபிடித்து அடித்து விரட்டி,” அம்மாவை அழைத்து வா” என்று சொன்னதும் காலில் இருக்கும் செருப்பை கழட்டி விட்டு பள்ளி மைதானத்தில் நிற்காமல் ஓடும் துருவ் விக்ரமின் எனர்ஜியை கண்டு ஆச்சரியப்படும் மதன்,” யார்ரா நீ, இவ்வளவு நேரம் நிற்காமல் ஓடுற.. உன் ஆசை கபடி வீரனாக ஆவது என்றால் அதை நான் நிறைவேற்றித் தருகிறேன்” என்று சொல்லி அடுத்தடுத்த காட்சிகளுக்கு பிள்ளையார் சுழி போட்டு விடுகிறார்.
கயிற்றில் இருந்து அறுபட்ட காளைபோல் காளமாடன் துருவ் விக்ரம் கபடி போட்டிக்களத்தில் தீயாக சுழல்கிறார், புலியாக சீறுகிறார். ஒரு டிசர்ட்டும், கால் சட்டையும் அணிந்து எதிரணிக்கு கபடி பாட்டு பாடி செல்லும் துருவ் விக்ரம் கட்டாந்தரையில் அந்தர் பல்டி அடித்து எதிரணி வீரர்களை தோற்கடிப்பது அரங்கை உற்சாகத்தில் ஆழ்த்துகிறது . அதேபோல் ஆக்சன் காட்சியிலும் கோபக்காரனாக மாறி எதிரியை கண் மண் தெரியாமல் தாக்கி முரட்டு வீரனாக மனதில் பதிகிறார் துருவ் விக்ரம்.
ஆசிய போட்டியில் இந்திய டீமில் தானும் ஒரு வீரனாக இணைவதற்கு துருவ் விக்ரம் எதிர்கொள்ளும் எதிர்ப்புகள் சூழ்ச்சிகள் நடப்பில் நடக்கும் நிஜத்தை பிரதிபலிக்கிறது. சீயான் விக்ரம் தனது ஒவ்வொரு படத்திலும் கதாபாத்திரத்திற்காக உயிரையும் துணிவார். அதே துணிச்சல் அவரது மகன் துருவ் விக்ரமிடமும் இருப்பதை இப்படத்தில் காண முடிகிறது.
துருவ் விக்ரம் காதலியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கிறார். உடல் மெலிந்து நடிப்பில் மெருகேறி அந்த காலத்து நடிகை சோபாவை ஞாபகத்துக்கு கொண்டு வருகிறார் .
துருவ் விக்ரமின் அப்பாவாக பசுபதி நடித்திருக்கிறார். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து விட்டோம் நம்மை முன்னரே விட மாட்டார்கள், ஆபத்தானவர்களிடமிருந்து மகனையாவது காப்பாற்றி விடவேண்டும் என்ற ஒரு தந்தையின் பயத்தையும் தவிப்பையும் சீனுக்கு சீன் வெளிப்படுத்து கிறார்.அமீர் ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் காவலனாக பாண்டியராஜா என்ற கதாபாத்திரத்தில் அசல் போராளியாக கண் முன்நிற்கிறார்.அமீரை ஒழித்தே தீருவேன் என ஒரு பக்கம் கங்கணம் கட்டிக்கொண்டு, இன்னொரு பக்கம் அதே ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த துருவ் விக்ரமை தன் அணியில் சேர்ந்து கபடி ஆடும்படி சொல்லும் லால் வில்லத்தனத்தை எதார்த்தமாக வெளியிட்டிருக்கிறார்.
மியூசிக் டைரக்டர் நிவாஸ் கே.பிரசன்னாவின் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்க தூண்டுவதோடு, திரையரங்கில் கைதட்டவும், விசில் அடிக்கவும் வைக்கிறது. மண் மற்றும் மக்களின் கலாச்சாரம் பிரதிபலிக்கும் பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரோட்டமாக பயணித்திருக்கிறது.
கேமராமேன் எழில் அரசு.கே, படம் பார்ப்பவர்களுக்கு தென் மாவட்ட நிலப்பரப்பில் பயணித்த அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.
பேருந்தில் ஆடு சிறுநீர் கழிக்கும் போது நடக்கும் சிறு பிரச்சனை ஜாதி சண்டையாக மாறுவது, கோச் பேசும் வசனங்கள், கிளைமாக்ஸ் காட்சிகள் என சில காட்சிகள் தனித்துவமாக தெரிகிறது. இரண்டு தாதாக்கள் இருந்தால் ஒருவர் வில்லனாக மாறுவார் என்ற சினிமா பொதுவிதிக்கு மாறாக காட்சிகள் அமைந்துள்ளன. மேலும்
கபடி போட்டியை மையமாக வைத்து நிறைய படங்கள் வந்துவிட்டன ஆனாலும் இந்த படத்தில் இடம்பெறும் கபடியும், ஒரு கபடி வீரன் வாழ்க்கை சொல்லும் கதையும் கொஞ்சம் வெப் சீரிஸ் பாணிதான் என்றாலும் சலிக்கவிட்டவில்லை என்பதே ஆறுதல்
மார்க் 3.75/5


