வேதனையை வென்றெடுத்த நாள்: உலக மயக்க மருந்து (ஈதர்) தினம்!
ஆண்டுதோறும் அக்டோபர் 16ஆம் தேதி உலக மயக்க மருந்து தினம் (World Anaesthesia Day) அல்லது ஈதர் தினம் (Ether Day) கொண்டாடப்படுகிறது. அறுவை சிகிச்சை வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த ஒரு கண்டுபிடிப்பின் நினைவாகவும், பல கோடி உயிர்களின் நிம்மதியான சிகிச்சைக்காகவும் இந்த நாள் சிறப்பிக்கப்படுகிறது.
மயக்க மருந்தின்றி ஒரு கொடூரமான காலம்
1840-களுக்கு முன்பு வரை அறுவை சிகிச்சை என்பது நோயாளிக்கும் மருத்துவர்களுக்கும் ஒரு கொடூரமான அனுபவமாகவே இருந்தது. அறுவை சிகிச்சை என்றாலே நோயாளிகள் பயத்திலேயே பாதி செத்துவிடுவார்கள் என்று சொல்லலாம். காரணம்? அப்போது வலி தெரியாமல் இருக்கச் செய்யும் மயக்க மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

அன்றைய அறுவை சிகிச்சை அறையின் நிலையை டெனெஸ் ஃப்ராடென் என்பவர் தனது “வேதனையை வென்றுவிட்டோம்” (Conquering Pain) என்ற ஆங்கில புத்தகத்தில் விவரித்துள்ளார்:
அறுவை சிகிச்சை பண்ணும் டாக்டர், ஆப்ரேஷன் தியேட்டருக்குள் இரண்டு விஸ்கி பாட்டில்களுடன் நுழைவார். ஒரு பாட்டில் நோயாளி வலியைப் பொறுத்துக்கொள்ள, இன்னொன்று மருத்துவருக்கு – நோயாளி தாங்க முடியாத வேதனையால் கதறுகையில் அதை சகித்துக்கொள்ள.
வலி குறைக்கும் வழியைத் தேடி, இந்திய, சீன மருத்துவர்கள் கஞ்சாவையும் ஹசீஷையும் பயன்படுத்தினர். அபினி, மதுபானம் போன்ற போதைப்பொருட்களும் வலியை மறக்கச் செய்ய உலகின் பல பாகங்களில் பயன்படுத்தப்பட்டன. பண்டைய கிரேக்க மருத்துவரான தியாஸ்காரிதெஸ், மேன்ட்ரேக்ஸ் என்ற மூலிகையை ஒயினுடன் கலந்து தயாரித்த பானம் மரத்துப் போக செய்யும் தன்மையுடையது என்று உரிமை பாராட்டினார். இவர்தான் முதன்முதலில் “அனஸ்தீஸியா” () என்ற வார்த்தையையும் பயன்படுத்தியதாக தெரிகிறது.
ஆனாலும், வலி குறைந்த பாடில்லை. அறுவை சிகிச்சை மருத்துவர்கள் எந்தளவுக்கு வேகமாக ஆப்ரேஷன் செய்கிறாரோ அந்தளவுக்கு அவர் திறமைசாலி என்று புகழப்பட்டனர். காரணம், வேகம்தான் நோயாளியின் வேதனையைக் குறைக்கும் ஒரே வழி. இதன் விளைவாக, மக்கள் தாங்க முடியாத வலியுடன் கூடிய அறுவை சிகிச்சைக்குப் பதிலாக, அபாயகரமான கட்டி வந்தாலும், பற்களெல்லாம் சொத்தையானாலும் அப்படியே விட்டுவிடுவது நல்லது என நினைத்தனர்.
ஈதரின் பிறப்பும், 112 வருட காத்திருப்பும்
வலிக்கு நிரந்தரத் தீர்வு தேடிய ஆய்வில், ஒரு முக்கியமான திரவம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பிறந்தது.
- 1275-ல், ஸ்பானிய மருத்துவர் ரேமன்ட் லுல்லெஸ், இரசாயனங்களை ஆராய்கையில், எளிதில் ஆவியாகிவிடும், சீக்கிரம் தீப்பிடிக்கும் தன்மையுடைய ஒரு திரவத்தை தயாரித்தார். அதற்கு ‘ஸ்வீட் விட்ரியோல்’ என பெயர் வைத்தார்.
- 16-ம் நூற்றாண்டில், பேரசெல்ஸஸ் என்ற ஸ்விட்ஸர்லாந்தை சேர்ந்த மருத்துவர், இந்தத் திரவத்தை கோழிகளில் பரிசோதித்துப் பார்த்தார். அதை முகர்ந்தவுடன் கோழிகள் தூங்கி விட்டது மட்டுமன்றி, அவை வலியை உணராததையும் கவனித்தார்.
- 1730-ல், ஃப்ரோபேனியுஸ் என்ற ஜெர்மானிய மருந்து தயாரிப்பாளர் இந்தத் திரவத்திற்கு ‘ஈதர்’ (Ether) எனப் பெயர் சூட்டினார். கிரேக்க மொழியில் ‘ஈதர்’ என்ற சொல்லுக்கு “விண்ணுலகத்து” என்று அர்த்தம்.
இந்த அபாரமான திரவத்திற்குக் கிடைத்த பெயர் நீடித்தாலும், அதன் மயக்கமருந்து சக்தி முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, புழக்கத்திற்கு வர 112 வருடங்கள் ஆனது.
அறுவை சிகிச்சையின் வரலாறு மாறிய அக்டோபர் 16, 1846
ஈதர் என்ற வாயுவுக்கு இருக்கும் மரத்துப்போக செய்யும் சக்தி முழுமையாக அங்கீகரிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை வரலாற்றையே மாற்றிய நாள்: அக்டோபர் 16, 1846.
அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரில், மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் ( ) நடந்த ஒரு வரலாற்று நிகழ்வு இது:
- பல் மருத்துவர் டாக்டர். வில்லியம் தாமஸ் கீரின் மார்ட்டன் என்பவர், ஈதர் எனும் வாயுவை நோயாளிக்கு மயக்க மருந்தாகக் கொடுத்தார்.
- டாக்டர். ஜான் கொலின்ஸ் வாரண் என்பவர், வெற்றிகரமாக அந்த நோயாளியின் கழுத்தில் இருந்து ஒரு கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றினார்.
- நோயாளி, எட்வர்டு கில்பர்ட் அபார்ட் மயக்க நிலையிலேயே இருந்து அறுவை சிகிச்சை முடிந்த பின் எழுந்தபோது, அவருக்கு வலியே தெரியவில்லை.
இதுதான், பொதுமக்களால் அறியும் வண்ணம் மயக்கம் கொடுத்து செய்யப்பட்ட முதலாவது வெற்றியான அறுவை சிகிச்சையாகும். இந்த வெற்றிகரமான செயல், இனிமேல் அறுவை சிகிச்சை என்பது வலி நிறைந்ததாக இருக்காது என்பதை உலகிற்கு உணர்த்தியது.
மயக்க மருந்தின் கண்டுபிடிப்பால் அறுவை சிகிச்சை என்பது நிதானமாகவும், வெற்றிகரமாகவும் செய்யக்கூடியதாக மாறியது. இன்று நாம் அறுவை சிகிச்சை மூலம் உயிர் பிழைக்கிறோம் என்றால், அதன் முதல் அடியாக அமைந்த அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளே உலக மயக்க மருந்து (ஈதர்) தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள், வலி இல்லா சிகிச்சையை நமக்கு வழங்கிய அறிவியலின் மகத்துவத்தை என்றும் நினைவுபடுத்துகிறது.
தனுஜா



