ஹரிஷ் கல்யாண் நடித்த டீசல் – பத்திரிக்கையாளர் சந்திப்பு ஹைலைட்ஸ்!
தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் & எஸ்பி சினிமாஸ் தயாரித்து, சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டீசல்’. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை -அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு உற்சாகமாக நடைபெற்றது.

படக்குழுவினரின் பகிர்வுகள்:
ஒளிப்பதிவாளர், எடிட்டர், மற்றும் கலை இயக்குநர்:
- ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட்: ” ‘கட்டா குஸ்தி’க்குப் பிறகு ஒப்பந்தமான படம் இது. ரிலீஸுக்கு தாமதமானாலும், எனது முந்தைய ஹிட்டான ‘அங்காடித்தெரு’, ‘மதகஜராஜா’ போல் இந்தப் படமும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.”
- எடிட்டர் சான் லோகேஷ்: “ஒரு பொருளின் விலைவாசி அதிகரிப்பதற்குப் பின்னால் உள்ள அரசியலை ‘டீசல்’ தெளிவாகப் பேசும். இது இந்த தீபாவளிக்கு நல்லதொரு முக்கியமான படமாக அமையும். படம் கமர்ஷியலாக வெற்றி பெற வாழ்த்துகள்.”
- கலை இயக்குநர் ரன்வன்: “டீசல் பின்னணியில் செட் அமைப்பது சவாலாக இருந்தது. ஆனால் களத்தின் தன்மைக்கு ஏற்றவாறு சரியாக அமைத்திருக்கிறோம் என நம்புகிறேன்.”
துணை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு:
- நடிகர் தங்கதுரை: “இது என் கரியரில் முக்கியமான படம். தினமும் ஷூட்டிங் போகிறோமா அல்லது நடிகர் சங்க மீட்டிங் போகிறோமா என்று சந்தேகப்படும் அளவுக்குத் திருவிழா போலப் படம் எடுத்தார்கள். ‘டீசல்’ ஹரிஷ் கல்யாணுக்கு மிகப்பெரும் வெற்றியாக அமையும்.”
- நடிகர் பிரேம்குமார்: “டீசலுக்குப் பின்னால் நடக்கும் மாஃபியா என்ன என்பதை இயக்குநர் மிகத் துல்லியமாக வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறார். ஹரிஷ் கல்யாணுக்கு இப்போது சரியான நேரம் கூடி வந்திருக்கிறது. அனைவருக்கும் ‘டீசல்’ தீபாவளி வாழ்த்துகள்.”
- நடிகர் விவேக் பிரசன்னா: “பல தலைமுறைகளிடமிருந்து அரசியல் சூழல் பெரும் சொத்தை சுரண்டி, அவர்களைப் பலியாக்கியதை இந்தப் படம் சரியாகக் காட்டி இருக்கிறது. எரிசக்தி தொடர்பான அரசியல் பேசும் விழிப்புணர்வுப் படமாக இது இருக்கும். ‘டீசல்’ படத்திற்குப் பிறகு ஹரிஷ் கல்யாண் மீது முதலீடு செய்யும் பட்டியலில் நிச்சயம் அவர் இணைவார்.”
- நடிகர் வினய்: “என் கதாபாத்திரம் வித்தியாசமானதாக இருக்கும். ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்திற்கு மிகவும் கடின உழைப்பைக் கொடுத்திருக்கிறார். இசையமைப்பாளர் திபுவின் அழகான இசை மற்றும் ரிச்சர்ட் ஒளிப்பதிவு கதைக்கு மிகப்பெரும் பலம்.”
- இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ்: “‘டீசல்’ நல்ல அனுபவம். இது காமன் மேன் கனெக்ட் உள்ள படம். ‘பச்ச குத்திக்கிட்டு…’ என்னுடைய முதல் கானா பாடல். இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.”
நாயகி அதுல்யா ரவி மற்றும் இயக்குநர் சண்முகம் முத்துசாமி:
நடிகை அதுல்யா ரவி: “இந்தப் படத்துடன் நான் உட்பட எல்லோருமே எமோஷனலாக கனெக்ட் ஆகி இருந்தோம். தயாரிப்பாளர் தேவா சாருக்கு நிச்சயம் இந்தப் படம் வெற்றி தேடித் தரும். என் கரியரில் என்றும் நினைத்து பார்க்கும்படியான மிகப்பெரிய ஹிட் சாங் கொடுத்த இசையமைப்பாளர் திபு சாருக்கு நன்றி. உங்கள் தீபாவளியை ‘டீசல்’ படத்துடன் சேர்ந்து கொண்டாடுங்கள்.”
இயக்குநர் சண்முகம் முத்துசாமி: “காதல், ஃபேமிலி சப்ஜெக்ட் எல்லாம் நிறைய பார்த்தாச்சு. புதிதாக கதை யோசித்தபோது, ஒரு நாள் பெட்ரோல் பங்க்கில் டேங்கர் லாரியிலிருந்து சிறுவர்கள் பெட்ரோல், டீசலை திருடுவதைக் கண்டேன். அவர்களைப் பின்தொடர்ந்து சென்றபோதுதான் இந்த அதிர்ச்சிகரமான உலகம் பற்றி தெரிய வந்தது. இதைத்தான் படமாக்கலாம் என்று உருவானதுதான் ‘டீசல்’. இந்தப் படத்தில் நிறைய ரகசியங்கள் இருக்கிறது. இந்த மாஃபியாவால் ஒரு சாதாரண மனிதன் எந்த அளவிற்குப் பாதிக்கப்படுகிறான் என்பதைச் சொல்லியிருக்கிறோம். ‘பாகுபலி’, ‘கத்தி’ போன்று அடுத்தடுத்து ரூ. 100 கோடி வசூல் செய்யும் பெரிய படங்களை எங்கள் தயாரிப்பாளர் தயாரிக்க வேண்டும்.”
நடிகர் ஹரிஷ் கல்யாண்:
நடிகர் ஹரிஷ் கல்யாண்: “ஆக்ஷன் படங்கள் மீது எனக்கு அதீத விருப்பம் உண்டு. அதற்கான சரியான கதை வரும்வரை காத்திருந்தேன். அப்படியான கதையாக எனக்கு ‘டீசல்’ அமைந்தது. தங்கத்தை விட அதிக மதிப்பு மிக்கதாகப் பார்க்கப்படும் எரிபொருள் உலகத்திற்குப் பின்னால் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை இந்தக் கதை சொல்லி இருக்கிறது.”
“ட்ரைலர் வெளியான போது பெரிதாக யாரும் திட்டவில்லை. அதுவே எங்களுக்குப் பெரிய நம்பிக்கை கொடுத்தது. ஆக்ஷன் படத்திற்கான சரியான மீட்டரை நடிப்பில் கொண்டு வந்திருக்கிறேன் என்று பலரும் பாராட்டினார்கள். மக்களுக்கான படமாக இது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சினிமாவை உண்மையாக நேசிக்கும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்காகவே இந்தப் படம் ஜெயிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எங்களுடைய முயற்சிக்கு உங்களுடைய ஆதரவும் அன்பும் தேவை,” என்று கூறி முடித்தார்.


