டிஜிட்டல், ஓடிடி கைப்பிடிக்குள் இருக்கிறோம் ; ‘ராம் அப்துல்லா ஆண்டனி’ தயாரிப்பாளர் மதியழகன்!
அன்னை வேளாங்கண்ணி ஸ்டுடியோஸ் சார்பில் TS.கிளமென்ட் சுரேஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் த.ஜெயவேல் இயக்கத்தில், சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் ஹீரோவாக நடிக்க, பள்ளி மாணவர்களின் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் “ராம் அப்துல்லா ஆண்டனி”. ஆண்டனி கதாபாத்திரத்தில் பூவையார், அப்துல்லா கதாபாத்திரத்தில் அர்ஜுன் மற்றும் ராம் கதாபாத்திரத்தில் அஜய் அர்னால்டு ஆகியோர் நடித்துள்ளனர்,. மேலும், வேலராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சாய் தீனா, சௌந்தர்ர்ராஜா, கிச்சா ரவி, சாம்ஸ், வினோதினி வைத்தியநாதன், பிக் பாஸ் அர்ணவ் மற்றும் ராஜ் மோகன் ஆகியோர் இணைந்து நடித்திருக்கிறார்கள். சிறப்புத் தோற்றத்தில் வனிதா விஜய்குமார் நடிக்கிறார்..டி.ஆர்.கிருஷ்ண சேட்டன் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். எல்.கே.விஜய் ஒளிப்பதிவு செய்ய, வினோத் சிவகுமார் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். வரும் அக்-31ஆம் தேதி இந்தப்படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது.. !இந்த நிகழ்வில் இயக்குநர்கள் எஸ்.ஏ சந்திரசேகரன், அகத்தியன், பேரரசு, பொன்ராம், எஸ்,ஆர் பிரபாகரன், தயாரிப்பாளர் மதியழகன், நடிகர் உதயா, கூல் சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகரன் இந்த படத்தின் இசைத்தட்டை வெளியிட்டார்.

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் கிளமென்ட் சுரேஷ் பேசும்போது,
எனக்கு சினிமாவில் இதுதான் முதல் தயாரிப்பு. வேறு தொழில்கள் எனக்கு இருந்தாலும் இந்த தொழிலில் தான் சினிமாவை நம்பி இத்தனை பேர் வாழ்கிறார்களா என்கிற ஆச்சரியம் ஏற்பட்டது. நடிகர்கள் என்றாலே ஏசியில் சொகுசாக இருப்பவர்கள் என நினைத்திருந்தபோது, நேரில் பார்க்கும் போது தான் மழையிலும் வெயிலிலும் அவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிந்தது. நடிகர் சௌந்தர்ராஜா இந்த படத்திற்காக ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை கடும் உழைப்பை கொடுத்து எங்களுடன் கூடவே பயணித்துக் கொண்டு வருகிறார். குடும்பத்தோடு பார்க்கும் விதமாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். இந்தப்படம் வெற்றி பெற்றால் அந்த பணத்தை மீண்டும் பட தயாரிப்பிலேயே தான் செலவு செய்வேன். புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பேன்” என்று கூறினார்.
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசும்போது,
நான் வாழ்த்துவது பெரிய விஷயம் இல்லை. இந்த படம் வெளியான பிறகு தமிழ்நாடு உங்களை வாழ்த்தும். இந்த படத்தின் டிரைலரை பார்த்ததுமே யாருப்பா இந்த படத்தின் டைரக்டர் என்று கேட்கத் தோன்றுகிறது. டிரைலர் இன்ட்ரஸ்டிங்காக, புதுசாக இருக்கிறது. படம் பார்க்க தூண்டுவதற்காக தானே டிரைலரை உருவாக்குகிறோம்.. டிரைலர் இந்த அளவிற்கு வந்திருக்கு என்றால் அதற்குள் இருக்கும் கரு அந்த அளவிற்கு நன்றாக இருக்கும் என தோன்றுகிறது. சில நேரங்களில் டிரைலரில் கதையை சொல்வது தப்பாகி விடும். ஆனால் இதில் இன்ட்ரஸ்டிங்கா இருந்தது. என்ன நடந்திருக்கும் என்கிற ஆர்வத்தை தூண்டுகிறது. இப்போ ட்ரெண்ட் என்னவென்றால் சூப்பர் ஸ்டாரை வைத்து படம் எடுத்தால் போட்ட பணத்தை எடுக்க விடலாம். தயாரிப்பாளர் தப்பித்து விடுவார். இல்லை என்றால் இப்படி புதிய பசங்களை வைத்து படம் பண்ண வேண்டும். இதற்கு நடுவில் உள்ளவர்களை வைத்து யாராவது படம் பண்ணினால் தயாரிப்பாளர்கள் காணாமல் போய்விடுவார்கள். சூப்பர் ஸ்டார்களை வைத்து படம் எடுத்தால் அதற்கு பைனான்ஸ் பண்ணுவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். நல்ல கதையை வைத்து படம் எடுப்பதற்கு இங்கே யாரும் பைனான்ஸ் பண்ண ஆட்கள் தயாராக இல்லை.
ஒரு புதிய இயக்குநரை நம்பி இரண்டரை கோடி பணம் போட்டு படம் எடுத்திருக்கிறார் என்றால் அந்த தயாரிப்பாளருக்கு நன்றி. அந்த நம்பிக்கை ஜெயிக்கணும். ஒரு காரியத்தை ஆரம்பிக்கும்போது நாம் ஜெயிப்போம் என நினைத்து ஆரம்பித்தால், கண்டிப்பாக ஜெயிப்போம். என் வாழ்க்கை அதுதான். இப்போது வரை நான் ஜெயிப்பேன் என்று தான் படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். நம்பிக்கை உள்ளவன் தான் ஜெயிப்பான். இந்த படம் வெற்றி அடையும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இன்றைய தலைமுறை வன்முறையை தான் ரசிக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டு வரும் இயக்குநர்கள் எல்லாம் கத்தி, ரத்தம், சத்தம் என இந்த மூன்றை நம்பித்தான் படம் எடுக்க வருகிறார்களே தவிர கதை இதெல்லாம் எதுவும் கிடையாது. ஒரு எழுத்தாளர் தான் நாட்டிலேயே ஒரு எழுச்சியை உண்டாக்க முடியும்” என்று பேசினார்.
இசையமைப்பாளர் கிருஷ்ண சேட்டன் பேசும்போது,
“தமிழில் இதுதான் எனக்கு முதல் படம். இயக்குநர் கதை சொன்ன விதமே எனக்கு பிடித்திருந்தது. பாடல்கள் அனைத்தையும் அவரே எழுதிக் கொண்டு வந்து விட்டார். படம் வெற்றிபெற எனது வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன்”. என்று பேசினார்.
நடிகர் பூவையார் பேசும்போது,
இயக்குநர் ஜெயவேல் அண்ணன் நான்கு வருடங்களுக்கு முன்பே இந்த கதையை சொல்லிவிட்டு பூவையார் தான் இந்த படத்தை பண்ண வேண்டும் என ஸ்ட்ராங்காக இருந்தார். வேறு யாராவது இருந்தார்கள் என்றால் அந்த சூழலுக்கு ஏற்ற மாதிரி மாறி இருப்பார்கள். ஆனால் அவர் உறுதியாக நின்றார். இந்த கதையின் மீது எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. இந்த படத்தில் எல்லாமே லைவ்வாக பண்ண வேண்டும் என அடி உதை எல்லாமே லைவ்வாக வாங்கினோம். எனக்கான ஒரு திரை விலகும் என ஒரு எதிர்பார்ப்புடன் இருந்தேன். அது இவ்வளவு சீக்கிரம் கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. பாட்டு தான் எனக்கு முதலில்.. கூடவே நடிப்பையும் தொடர்வேன். இந்த இடத்தில் நான் வந்து நிற்பதற்கு காரணமான விஜய் டிவி உள்ளிட்ட பலருக்கும் நன்றி” என்று பேசினார்.
நடிகர் சாய் தீனா பேசும்போது,
“இந்த படத்தில் பூவையார் நடிக்கிறார் என்று சொன்னதுமே நான் இந்த படத்தில் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். அதனாலேயே இயக்குநரிடம் கதை எல்லாம் கேட்காமல் ஒப்புக் கொண்டேன். ஆனால் படப்பிடிப்பிற்கு சென்ற பிறகுதான் தெரிந்தது ஒரு நல்ல டைரக்டரிடம் ஒரு நல்ல படம் பண்ணி இருக்கிறேன் என்று. இந்த மாதிரி இயக்குநர்கள் வரும்போதுதான் என்னைப் போன்ற நடிகர்கள் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும்” என்று பேசினார்.
நடிகர் ஜாவா சுந்தரேசன் பேசும்போது,
“இந்த டிரைலரை பார்த்துவிட்டு இந்த படம் நன்றாக இருக்கிறதே என்று பாராட்டுவது இருக்கட்டும். ஆனால் இந்த கதையை கேட்டு விட்டு படம் இப்படி நன்றாக வரும் என மனதுக்குள்ளயே கணக்குப் போட்டு இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் கிளமென்ட் சுரேஷ் அவர்களுக்குத்தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். ஒரு தொழில் முறை தயாரிப்பாளராக ஒரு படத்திற்கு எவ்வளவு பிசினஸ், யாரை வைத்து படம் எடுக்க வேண்டும் என நினைக்காமல் நல்ல கதை, நல்ல பசங்கள், இவர்களுக்காக படம் எடுப்போம் என நினைத்து அவர் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
படப்பிடிப்பின் போது சிக்கன நடவடிக்கைகள் என நிறைய கடைபிடித்தார்கள். ஆனால் திரையில் தெரியும் காட்சிகள் எதிலும் அவர்கள் குறை வைக்கவே இல்லை. சமரசம் பண்ணிக் கொள்ளவே இல்லை. இந்த படத்தில் நடித்துள்ள மூன்று சிறுவர்களுமே மிகவும் திறமைசாலிகள். இந்த படத்தில் எனது மகனாக ராம் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பையனை ஒரு கட்டத்தில் நானே சுவீகாரம் எடுத்துக் கொள்ளலாமா என்று கூட நினைத்தேன். இந்த படம் இயக்குனர் ஜெவேலு சாருக்கு ஷ்யூர் ஷாட் ஹிட்” என்று கூறினார்
இயக்குநர் ஜெயவேல் பேசும்போது,
“இந்த இடத்தில் தான் இருப்பதற்கு ஒரே ஒரு காரணம் தயாரிப்பாளர் கிளமென்ட் சுரேஷ் தான். அவருடைய பெயரை என் செல்போனில் காட் (கடவுள்) என பதிந்து வைத்திருக்கிறேன். பல தடங்கல்களுக்கு இடையே இந்த படம் வளர்ந்தது. ஆனால் அது பற்றி சொல்ல வேண்டிய இடம் இது இல்லை. அதற்கெல்லாம் படத்தின் வெற்றி மூலம் தான் பதில் சொல்ல முடியும். பல பேர் இந்த படத்தை எடுத்தவரை பார்த்துவிட்டு இது குப்பை இனிமேல் பணம் போடுவது வேஸ்ட் என்று சொன்ன நிலையில் அதையெல்லாம் ஒதுக்கி விட்டு இந்த குப்பையை கோபுரம் ஆக்கி காட்டு என என்னை நம்பி மீண்டும் படப்பிடிப்பை நடத்தத் தூண்டியவர் தயாரிப்பாளர் சுரேஷ். ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறேன் என்று திருப்தி இருக்கிறது” என்று கூறினார்.


