‘காந்தாரா – அத்தியாயம் 1’ -விமர்சனம்!
மூன்றாண்டுகளுக்கு முன் ரிலீஸான வெளியான காந்தாரா படத்தில், மன்னராட்சிக் காலத்தில் மக்களுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்ட நூறு ஏக்கர் நிலத்தை அம்மன்னரின் வாரிசுகள் திரும்பப் பெற முனைய அதற்கு எதிராக அம்மக்கள் போராடுகிறார்கள்.அதேநேரம் அம்மக்களுக்கு எதிராக கர்நாடக வனத்துறையும் களமிறங்குகிறது. முடிவில் என்னவானது? என்பதை கர்நாடக எல்லையோரத்தில் வனப்பகுதி கிராமமொன்றில் நடக்கும் சிறுதெய்வ வழிபாட்டை மையமாக வைத்துச் சொல்லப்பட்டிருந்தது. இப்போது அதற்கு முந்தைய காலகட்டத்தைக் கதைக் களமாக கொண்டு வெளியாகியிருக்கிறது காந்தாரா அத்தியாயம் 1.முதல் பாகம் சிறிய பட்ஜெட்டில் உருவாகி வியக்க வைத்த நிலையில், காந்தாரா சேப்டர் 1 படத்தினை மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கியுள்ளனர். இதற்காக செலவு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு பணமும் திரையில் தெரிகிறது,ஆனால் பெரும் மெனக்கெடலுடன் உருவாக்கிய கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் படம் பிரமாண்டமாக இருக்கிறது. சண்டைக் காட்சிகள் படத்தை ரசிக்க வைக்கிறது.அதே சமயம் படத்தின் முக்கியமான காட்சிகளில் நகைச்சுவையை புகுத்த முயற்சி செய்திருப்பது, ஒருக்கட்டத்தில் சலிப்பை தருவதுடன் சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை, பழைய பாணியிலான காட்சிகள் ஒட்டு மொத்த்அ படத்தை பலவீனமாக்கி விடுகிறது. குறிப்பாக படத்தின் நீளம் பார்வையாளர்களை சோர்வடைய செய்து விடுகிறது என்பதுதான் உண்மை.
அதாவது அரிய மூலிகைகள், விலையுர்ந்த விளைபொருட்கள் நிறைந்த காந்தாரா வனப்பகுதியை கைப்பற்ற அதன் அருகே இருக்கும் நாட்டின் அரசர் முயற்சிக்கிறார். அதில் அவர் தோல்வியடைந்த நிலையில், அவரது அடுத்த தலைமுறையினர் அதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு இறக்கிறார்கள். இதற்கிடையே காந்தாரா பழங்குடி கூட்டத்தை சேர்ந்த ரிஷப் ஷெட்டி, காட்டை விட்டு வெளியேறி, தங்களிடம் உள்ள விளைபொருட்களை விற்க முயற்சிப்பதோடு, சாதாரண மக்கள் மீது போடப்பட்டிருந்த தடைகளை அதிரடியாக தகர்த்தி, துறைமுகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார். காந்தாரா மக்களை எதிர்க்க முடியாமல் தடுமாறும் அரசர் ஜெயராம், அவர்களுடன் சமரசமாக பேசி, அவர்களுக்கான அனைத்து மரியாதையையும் வழங்குவதாக அறிவிப்பதோடு, அவர்களின் சக்திகளை கட்டுப்படுத்தி, காந்தாராவை கைப்பற்ற சதி செய்கிறார். அவரது சதிதிட்டம் வெற்றி பெற்றதா?, நாயகன் ரிஷப் ஷெட்டி காந்தாராவையும், மக்களையும் காப்பாற்றினாரா ? என்பதுதான் இந்த காந்தாரா சேப்டர் 1 கதை
ஹீரோ ரிஷப் ஷெட்டி, பழங்குடியினர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.முந்தைய பாகத்தை காட்டிலும் அசாத்திய உழைப்பை கொட்டியிருக்கிறார். படத்தின் கடைசி 30 நிமிடங்களில் இயக்குநராகவும் நடிகராகவும் பிரமிக்க வைக்கிறார். குறிப்பாக “ஓ…ஓ….” என்று சத்தம் போட்டு சாமியாடும் காட்சிகளில் தனது நடிப்பு மூலம் அசத்தியிருப்பவர், உடல் மொழி மற்றும் கண்களில் காட்டும் கோபம் ஆகியவற்றை ஆக்ரோஷமாக வெளிப்படுத்தி அனல் தெறிக்க ஆடிப்பாடி ஸ்கோர் செய்கிறார். நாயகியாக வரும் ருக்மணி வசந்த் ஆரம்பத்தில் அமைதியாக வருபவர், திடீரென்று விஸ்வரூபம் எடுத்து மிரட்டுகிறார்.அரசராக நடித்திருக்கும் ஜெயராம் மற்றும் அவரது மகனாக நடித்திருக்கும் குல்ஷன் தேவய்யா கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.ஆம்.. தான் வரும் காட்சிகளில் பார்வையாளர்களுக்கு எரிச்சல் ஊட்டும் அளவுக்கு பங்களித்துள்ளார்கள்
கேமராமேன் அரவிந்த் கே.காஷ்யப் வளம் மிகுந்த காந்தாராவின் வனம், வெண்மேகங்கள் மூடிய மலைகள் என இயற்கையை அதன் தன்மை மாறாமல் படம்பிடித்து ஒவ்வொரு பிரேமையும் பிரமாண்டமாக காண உதவி இருக்கிறார். மட்டுமின்றி சண்டைக் காட்சிகள், மிரட்டலான தேர் ஊர்வலம், குதிரை ஓட்டம், நாயகன் சாமியாடும் காட்சிகள், க்ளைமாக்ஸ் போர்க் காட்சிகள் ஒவ்வொன்றையும் படமாக்கிய விதத்திற்கு தனி பாராட்டு விழா நடத்தலாம்.
மியூசிக் டைரக்டர் பி.அஜனீஸ் லோக்நாத் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார். அவரது இசையில் பாடல்களும், பின்னணி இசையும் காட்சிகளுக்கு உயிரளித்திருக்கிறது. குறிப்பாக பின்னணி இசை படத்தை காப்பாற்றியிருக்கிறது.
திரைக்கதையிலும், தொழில்நுட்பரீதியாகவும் தொடங்கிய முதல் இறுதி வரை ஒவ்வொரு காட்சியிலும் துல்லியமும், உழைப்பும் அப்பட்டமாக தெரிகின்றன. அந்த வகையில் ஜேம்ஸ் கேமரூன், ஸ்பீல்பெர்க் போன்ற ஹாலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர்களின் படங்களின் தரத்துக்கு நிகராக இருக்கிறது. இண்டர்வெல் காட்சி, யுத்தம், ஆக்ஷன் காட்சிகளில் அரங்கம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, கடைசி 30 நிமிடம் கண் சிமிட்டக் கூட மறந்து விடும் பாணியில் வாவ் சொல்ல வைத்து விடுகிறார்கள். அடுத்த பாகத்துக்கான குறியீடும் ஸ்மைலியை வரவழைக்கிறது.
வழக்கம் போல் படத்தின் நீளம், காமெடிக் காட்சிகளில் கவனம் போதாமை என்று சில குறைபாடுகள் இருந்தாலும் ஹாலிவுட்டுக்கு சவால் விடும் சினிமா இது என்பதில் சந்தேகமில்லை
மார்க் 4.5/5


