ஏலத்துக்கு வந்த பாம்பன் பாலம் – சில ஞாபக குறிப்புகள்!
தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விஷயங்களில் ஒன்று பாம்பன் ரயில் பாலம். 111 ஆண்டுகளாக கம்பீரமாக நிற்கும் இந்த ரயில் பாலம் தமிழகத்தின் நிலப் பரப்பையும் ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் பாலமாகும். பெருமை மிக்க இந்த பாலத்தை அகற்ற ரயில்வே நிர்வாக முடிவு செய்து அதற்காக வேலைகளில் இறங்கி இருக்கிறது .
முதலில் ஒரு பிளாஷ் பேக்…
1854ல் இங்கு பாலம் அமைக்க ஆங்கிலேயர்களால் திட்டமிடப்பட்டு 80 அடி அகலம், 14 அடி ஆழம், 4,400 அடி நீளத்திற்கு கால்வாய் வெட்டப்பட்டது. இதன் வழியாக 200 டன் எடையுள்ள கப்பல்கள், சிறிய ரக போர் கப்பல்கள் சென்று வந்தன. 1876 ல் ஆங்கிலேயர்கள் இந்தியா இலங்கை இடையே போக்குவரத்திற்கான இணைப்பை ஏற்படுத்த முடிவு செய்தனர். பாம்பன் கடல், தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் பாலம் அமைத்து ரயில் போக்குவரத்து ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. ஜெனரல் மன்றோ என்பவரால் இது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. ஆனால் என்ன காரணத்தினால் ஆய்வு நிலையிலேயே அது கைவிடப்பட்டது. பின்னர் சென்னை டெபுடி ஜெனரல் ரைட்சன் என்பவரால் ‘டுவின்ஸ் ரயில் பெர்க்கி சர்வீஸ்’ என்ற திட்டம் தயாரிக்கப்பட்டது.

அப்போது ரூ. 2. 29 கோடி செலவில் திட்டத்தை செயல்படுத்த பிரிட்டீஷ் அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இது செலவுத்தொகை டூ மச் என்று பிரிட்டிஷ் அரசு கை விரித்து விட்டது. இதன் பின்னர் தான் 1899 ல் கீழே கப்பல், மேலே ரயில் செல்லும் வகையில் ‘டபுள் லீப் கேண்டிலிவர் பிரிட்ஜ்’ பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக 1902ல் ஆங்கிலேய அரசு முறையாக அறிவிப்பு வெளியிட்டது. வர்த்தக போக்குவரத்திற்காகவே கடலில் பாலம் கட்ட பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தது. இதன்படி பாம்பன் கடலில் தூக்கு பாலம் மற்றும் தனுஷ்கோடி வரை ரயில் பாதை அமைக்க வேண்டும். அங்கிருந்து கப்பலில் செல்வதற்கு தனுஷ்கோடி மற்றும் தலைமன்னாரில் துறைமுகம் அமைக்க வேண்டும் என்ன முடிவு செய்து அதற்காக 70 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவக்கப்பட்டது.
1902 முதல் பாலம் கட்டுவதற்கு அனைத்து பொருட்களுமே இங்கிலாந்தில் இருந்து கப்பல்கள் மூலம் கொண்டு வரப்பட்டது. குஜராத்தை சேர்ந்த கட்ஜ்கரோலி குடும்பத்தார் பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தடைகளை கடந்து இவர்கள் 1913ல் கடலுக்குள் 146 தூண்களுடன் பாம்பன் பாலம் கட்டி முடித்தனர். இந்த தூண்கள்தான் இந்த ரயில் பாலத்தை தாங்கி நிற்கின்றன. இந்த தூண்களை கட்ட மட்டுமே 4 ஆயிரம் டன் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2.3 கி.மீ. நீளம் கொண்ட இப்பாலம் இந்தியாவின் முதல் கடல் பாலம் மற்றும் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் என்ற பெருமையை கொண்டது.
1914 பிப்ரவரி 24ல் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்தும், தனுஷ்கோடி தலைமன்னார் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. பாம்பன் ரயில் பாலத்தின் நடுவே பெரிய கப்பல்கள் சென்று வருவதற்கு ஏற்றவாறு கத்திரி வடிவ தூக்கு பாலம் செயல்பட்டு வந்தது. இப்பாலத்தில் ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள், மீனவர்கள் , உள்ளூர் வாசி கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்றவாறு ரயில் போக்குவரத்து மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தொடக்கத்தில் மீட்டர் கேஜ் ரயில் பாதையில் ரயில்கள் சென்று வருவதற்கு ஏதுவாக கட்டப்பட்டது. பின்னர் 2007 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது.
2022-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி பழைய ரயில் பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ரயில் போக்குவரத்து மண்டபத்துடன் நிறுத்தப்பட்டது.
இதன் பின்னர் பழைய ரயில் பாலம் அருகில் ரூ. 550 கோடி செலவில் செங்குத்து தூக்கு பாலத்துடன் கூடிய புதிய பாம்பன் பாலம் கட்டப்பட்டு ஏப்ரல் 6-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் ரயில் போக்குவரத்து துவக்கி வைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இப்போது புயல் மற்றும் மழைக்காலங்களில் கூட ரயில் சேவைக்கு பெரிதும் உதவிய இந்த பழமை வாய்ந்த பாம்பன் பாலத்தை அகற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து 2.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் கோரி உள்ளது. நான்கு மாதங்களுக்கு அகற்ற வேண்டும் எனவும் அந்த டென்டரில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது . தமிழகத்தின் மிகச் சிறந்த அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் பழமை வாய்ந்த பாம்பன் ரயில் பாலத்தை அகற்றாமல் நூற்றாண்டு நினைவுச் சின்னமாக அமைக்க வேண்டும் என ராமேஸ்வரம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழைய பாலத்தை அகற்றும்போது கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புண் இருக்கிறது என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தென்காசி தேவா


