இந்திய குடியுரிமை துறப்பு: வெளியேறும் இந்தியர்களின் எண்ணிக்கை எகிறுகிறது!
இந்திய குடியுரிமையைத் துறந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் புதிய தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் மட்டும் 2,06,378 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை விட்டுக்கொடுத்துள்ளனர். இது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 2 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் குடியுரிமையைத் துறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபாலின் கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் அளித்த பதிலில் இந்த அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் வெளியாகின. இந்தத் தரவுகள், 2020 முதல் 2023 வரையிலான காலத்திலும் கணிசமான அதிகரிப்பைக் காட்டுகின்றன:
- 2020: 85,256 பேர்
- 2021: 1,63,370 பேர்
- 2022: 2,25,620 பேர் (அதிகபட்சம்)
- 2023: 2,16,219 பேர்
பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை ஒப்பிடும்போது, தற்போது இந்தியக் குடியுரிமையைத் துறப்பவர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. 2011 முதல் 2014 வரை, சுமார் 1.2 லட்சம் பேர் மட்டுமே குடியுரிமை துறந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளில் இந்த போக்கு வேகமாக உயர்ந்துள்ளது.
தற்போது, உலகளவில் சுமார் 3.43 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளில் வசிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில், 1.71 கோடி பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் (PIO – Persons of Indian Origin) மற்றும் 1.71 கோடி பேர் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI – Non-Resident Indians) ஆவர்.
இந்தியர்களின் இந்த வெளிநாட்டு குடியுரிமை விருப்பம் அதிகரிப்பது குறித்து பல்வேறு அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் தீவிர விவாதம் எழுந்துள்ளது. பொருளாதார வாய்ப்புகள், வாழ்க்கைத்தரம், கல்வி, மற்றும் தொழில் சூழல் போன்ற காரணிகள் இந்த மாற்றத்திற்குப் பின்னால் இருக்கலாம் என பல நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


