தமிழ் குரல் / AI Voice
இன்றைய உலகில், மனிதர்களின் இறப்புக்கு மூன்றாவது முக்கிய காரணமாக அமைந்திருப்பது கல்லீரல் கோளாறுகள்தான். உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரங்களின்படி, ஒவ்வோர் ஆண்டும் சுமார் 15 லட்சம் பேர் கல்லீரல் பாதிப்பு காரணமாக உயிரிழக்கின்றனர். இந்தச் சிக்கலின் ஆழம் எங்கு தொடங்குகிறது என்றால், கல்லீரலில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், அது உடனடியாகத் தெரிய வராது. பாதிப்பு தீவிரமடைந்த பிறகே அறிகுறிகள் வெளிப்படும். இதனால் கல்லீரல் நோய்களை நாம் சாதாரணமாக எடுத்துக்கொண்டால், அது நமக்குத்தான் ஆபத்து. இதயம் மற்றும் மூளைக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம், கல்லீரலுக்குக் கொடுக்கப்படுவதில்லை. உடலின் ரத்தம் முழுவதும் கல்லீரல் வழியே தினமும் பல முறை கடந்து செல்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட அத்தியாவசியப் பணிகளைக் கல்லீரல் செய்கிறது. ஆனால், குடிப் பழக்கம், தவறான உணவுப் பழக்கம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவற்றின் காரணமாகக் கல்லீரலைப் பல வகைகளில் நாம் பாதிப்புக்கு உள்ளாக்குகிறோம். சகலரும் இந்த முக்கியத்துவத்தை உணர்ந்து, கல்லீரல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வைப் பெறும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 ஆம் நாளில் உலகக் கல்லீரல் அழற்சி நாள் (World Hepatitis Day) கடைப்பிடிக்கப்படுகிறது. உலக மக்களிடையே, கல்லீரல் அழற்சி நோய்களுக்கான அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த நாள் உலக சுகாதார அமைப்பால் (WHO) ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

ஹெப்படைட்டிஸ் என்றால் என்ன?
கல்லீரலைப் பாதிக்கும் வைரஸ் கிருமிகளை ஹெப்படைட்டிஸ் என அழைக்கிறார்கள். ஹெப்படைட்டிஸ் கிருமிகளில் ஏ, பி, சி, டி, இ எனப் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரச்சினையை ஏற்படுத்தினாலும், அனைத்துமே கல்லீரலைப் பாதிக்கும் வைரஸ் கிருமிகளைச் சார்ந்தவை. பொதுவாக வைரஸ் கிருமிகளால் கல்லீரல் பாதிக்கப்பட்டால், கல்லீரல் அழற்சி அல்லது வீக்கம் உண்டாகும். கல்லீரல் செல்கள் அழற்சி அடைவதாலேயே ஹெப்படைட்டிஸ் வைரஸ் கிருமி தொற்றவும் முடிகிறது.
இன்றைக்கு உலகில் ஹெப்படைட்டிஸ் பி மற்றும் ஹெப்படைட்டிஸ் சி வைரஸ் பாதிப்பால் 50 கோடிப் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஹெப்படைட்டிஸ் பி மற்றும் சியை கவனிக்காமல் விட்டுவிட்டால் சிரோசிஸ் (கல்லீரல் இழைநார் வளர்ச்சி நோய்), கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் செயலிழப்பு போன்றவை ஏற்படலாம்.
கல்லீரல் அழற்சியின் வகைகள் மற்றும் அறிகுறிகள்
மருத்துவத்தில் கல்லீரல் அழற்சியைக் கடுமையான வகை மற்றும் நீடித்த கடுமையான வகை என இரண்டு பிரிவாக அழைக்கிறார்கள்.
- கடுமையான வகை: இந்த வகை கல்லீரல் அழற்சி கண்டறியப்பட்டால் கல்லீரல் உறுப்பு மாற்றம் செய்ய வேண்டிய நிலைகூட வரலாம். மஞ்சள் காமாலை நோய்கூட கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்படும்போதே வருகிறது.
- அறிகுறிகள்: காய்ச்சல், உடல் சோர்வு, தசை மற்றும் மூட்டு வலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி, பசியின்மை, புகைப்பிடிக்க வெறுப்பு, அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது, கண்கள் மற்றும் தோல் மஞ்சள் நிறமடைதல் (மஞ்சள் காமாலை), வயிற்று வலி ஆகியவை இதற்கு அறிகுறிகள்.
- நீடித்த கடுமையான வகை: இந்த வகையில் பலருக்கும் ஹெப்படைட்டிஸ் இருப்பதே தெரியாது. கல்லீரல் சேதமடைந்துள்ளதைப் பொறுத்து, இந்த வகையில் நோயின் தீவிரம் வெளியே தெரியும்.
- அறிகுறிகள்: மஞ்சள் காமாலைக்கான அறிகுறிகளுடன் வயிறு உப்பி இருப்பது, எடை குறைதல், ரத்தக் கசிவு, முகப்பரு, அளவுக்கு அதிகமாக மாதவிடாய் நீள்வது, சிறுநீரக அழற்சி, வீக்கம் ஆகியவை இந்த வகைக்கான அறிகுறிகள். பொதுவான அறிகுறியாக ஜீரணப் பிரச்சினையும் ஏற்படலாம்.
கல்லீரல் அழற்சிக்கான காரணங்கள்
கல்லீரல் அழற்சி ஏற்படப் பல காரணங்கள் உள்ளன. நோய்த் தொற்றுகள், சில மருந்துகள், நச்சுப் பொருட்கள், குறிப்பாகக் குடிப் பழக்கம், கல்லீரல் புற்றுநோய் காரணமாகக் கல்லீரலில் ஹெப்படைட்டிஸ் வைரஸ் கிருமிகள் தொற்றிவிடுதல் போன்றவை அவற்றில் சில. இவற்றில் ‘சிரோசிஸ்’ எனும் நோய்தான் கல்லீரல் நோய்களின் கடைசி நிலை. இதற்கு மிகவும் முக்கியக் காரணம் மது அருந்துவது.
தடுப்பு முறைகள் மற்றும் உணவுப் பழக்கங்கள்
சீரான உணவு முறை, உடற்பயிற்சி, உரிய ஓய்வு ஆகியவையே கல்லீரலை ஆரோக்கியமாக வைப்பதற்கு மட்டுமல்லாமல், ஆரோக்கிய வாழ்வுக்கும் அடிப்படை.
- தடுப்பூசிகள்: ஹெப்படைட்டிஸ் ஏ மற்றும் ஹெப்படைட்டிஸ் பி வராமல் தடுக்கத் தடுப்பூசிகள் போட்டுக்கொண்டால் கல்லீரல் பாதிப்புக்கு உள்ளாகாமல் தடுக்கலாம்.
- மது அருந்துவதைத் தவிர்த்தல்: மது அருந்துவது கல்லீரலைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதால் குடிப் பழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.
- மருந்துகள்: கல்லீரலைப் பாதிக்காத மருந்து, மாத்திரைகளை மட்டுமே பொதுவாக எடுத்துக்கொள்ள வேண்டும். எந்த மருந்தையும் மருத்துவர் அறிவுரையின்றி நீண்ட நாட்களுக்குச் சாப்பிடக் கூடாது.
- தானம் செய்தல்: கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் ரத்தம், உறுப்பு, திசுக்கள், விந்து ஆகியவற்றைத் தானமாக அளிக்கக் கூடாது.
உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்தபடி, 2025 ஆம் ஆண்டு உலக கல்லீரல் அழற்சி நாளுக்கான கருப்பொருள் “Hepatitis: Let’s Break It Down” ஆகும். இந்தக் கருப்பொருள் கல்லீரல் அழற்சியைத் தடுப்பது, பரிசோதனை செய்வது மற்றும் சிகிச்சையளிப்பது ஆகியவற்றிற்கு உள்ள நிதி, சமூக மற்றும் அமைப்பு ரீதியான தடைகளை அகற்றுவதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. மேலும், தடுப்பூசி, பாதுகாப்பான ஊசி முறைகள், தீங்கு குறைப்பு, பரிசோதனை மற்றும் சிகிச்சை போன்ற கல்லீரல் அழற்சி சேவைகளை எளிமையாக்கி, தேசிய சுகாதார அமைப்புகளில் ஒருங்கிணைப்பதன் மூலம் 2030-க்குள் கல்லீரல் அழற்சியை பொது சுகாதார பிரச்சினையாக முடிவுக்கு கொண்டுவருவதை இது ஊக்குவிக்கிறது.
கல்லீரல் ஆரோக்கியத்திற்கான எளிய வழிமுறைகள்:
- கல்லீரல் அழற்சி உள்ளவர்களுக்குச் சைவ உணவே சிறந்தது.
- திராட்சை ஜூஸ், கேரட் ஜூஸ் ஆகியவற்றைத் தினசரி குடிப்பதன் மூலம் சிறுநீர் எளிதாகப் பிரியும். மலம் இளகும்.
- எலுமிச்சை சாறு சேர்த்த நீரைக் குடித்தால் கல்லீரலின் செல்கள் பலமடையும். இது மஞ்சள் காமாலைக்கும் நல்லது.
- பூண்டைத் தினசரி சமையலில் சேர்த்துக்கொள்வது நல்லது. சீரகப் பொடி கலந்த மோர் பருகினால் ஜீரணம் மேம்படும்.
- கல்லீரல் கோளாறு உள்ளவர்களும், கல்லீரல் நோய் வராமல் தடுத்துக்கொள்ள நினைப்பவர்களும் சமையல் எண்ணெயை மிகக் குறைவாகப் பயன்படுத்துவது நல்லது.
இந்த நாளில், கல்லீரலின் முக்கியத்துவத்தை உணர்ந்து, நமது வாழ்க்கை முறையைச் சீரமைத்து, கல்லீரலைப் பாதுகாப்பதன் மூலம் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் பெறுவோம். கல்லீரல் நலமே, உடல் நலம்!
டாக்டர்.செந்தில் வசந்த்

