மெக்கட்ரானிக்ஸ்: பொறியியல் பிரிவுகளின் சங்கமம் – காலத்தின் தேவை எல்லாப் பொறியியல் பிரிவு!
அனைத்துப் பொறியியல் பிரிவுகளையும் உள்ளடக்கிய ஒரு பொறியியல் படிப்பு இருந்தால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட ஒரு புதுமையான, ஒருங்கிணைந்த துறைதான் மெக்கட்ரானிக்ஸ் (Mechatronics). யஸ்கவா (Yaskawa) என்கிற ஜப்பானிய நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த பொறியாளர் டெட்சுரோ மோரி என்பவரால் 1969 ஆம் ஆண்டு ‘மெக்கட்ரானிக்ஸ்’ என்கிற வார்த்தை முதன்முதலில் உருவாக்கப்பட்டது.
மெக்கட்ரானிக்ஸ் என்பது வெறும் மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய இரண்டு பொறியியல் பிரிவுகள் இணைந்த துறை மட்டுமல்ல. அத்துடன் கணினிப் பொறியியல் (Computer Engineering), மென்பொருள் பொறியியல் (Software Engineering), கட்டுப்பாட்டுப் பொறியியல் (Control Engineering), அமைப்பை வடிவமைக்கும் பொறியியல் (Systems Design Engineering) போன்ற இதர பிரிவுகளும் இதில் அடங்கியுள்ளன. பொறியியல் பிரிவுகளின் எல்லைகளைத் தகர்த்து, அவற்றை ஒன்றிணைத்து, பொறியியலை ஒரே பிரிவாக மெக்கட்ரானிக்ஸ் மாற்றியுள்ளது எனலாம்.

காலத்தின் தேவை
இன்றைய நவீன யுகத்தில், மக்களின் பயன்பாட்டில் இருக்கும் எல்லாச் சாதனங்களும், அறிவியலின் அசாத்திய கண்டுபிடிப்புகளும் தனிப்பட்ட ஒரு பொறியியல் பிரிவை மட்டும் சார்ந்தவையாக இல்லை. அவை பலதரப்பட்ட பொறியியல் பிரிவுகளின் ஒத்திசைவால், அவற்றின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு இடையிலான இணக்கத்தால் உருவாக்கப்படுகின்றன. இந்தத் தேவையிலிருந்து உருவானதே மெக்கட்ரானிக்ஸ்.
மெக்கட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்துக்குச் சிறந்த உதாரணமாக நம்முடைய வீட்டிலிருக்கும் சலவை இயந்திரத்தையோ (Washing Machine) அல்லது தொழிற்சாலையிலிருக்கும் சி.என்.சி. இயந்திரத்தையோ (CNC Machine) கூறலாம். சலவை இயந்திரம் ஒரு குறிப்பிட்ட நிரலின்படி துணிகளைத் துவைக்கும் இயந்திரவியல் பாகங்களையும் (Mechanical parts), அந்த நிரலைக் கட்டுப்படுத்தும் மின்னணுப் பாகங்களையும் (Electronic parts), சலவைச் சுழற்சியைக் கட்டுப்படுத்தும் மென்பொருள் அமைப்பையும் கொண்டிருக்கிறது. அதேபோல, ஒரு சி.என்.சி. இயந்திரம், துல்லியமான இயந்திரவியல் இயக்கங்களுக்கு மின்னணு கட்டுப்பாடுகள் மற்றும் கணினி நிரல்களை நம்பியுள்ளது.
மெக்கட்ரானிக்ஸ் Vs. ரோபாட்டிக்ஸ்
ரோபாட்டிக்ஸ் படிப்பைப் போன்றே மெக்கட்ரானிஸ் உள்ளதே என்று தோன்றலாம். தொழிற்சாலைகளில் ஏற்பட்ட தொழில்நுட்பத் தேவைகளின் அடிப்படைகளில் உருவான பொறியியல் பிரிவு மெக்கட்ரானிக்ஸ். மாறாக, ரோபாட்டிக்ஸ் என்பது, மனிதனின் கட்டளைகளுக்கு அடிபணிந்து எந்நேரமும் செயலாற்றத் தயாராக இருக்கும் இயந்திரங்கள் குறித்த புனைவுகளின் உந்துதலால் ஏற்பட்டது.
மெக்கட்ரானிக்ஸ் பிரிவின் பல்வேறு கூறுகளையும் ரோபாட்கள் கொண்டிருப்பதால், ரோபாட்டிக்ஸை மெக்கட்ரானிக்ஸ் அமைப்பின் ஓர் அங்கமாகக் கருதலாம். இருப்பினும், மெக்கட்ரானிக்ஸ் உடன் ஒப்பிடும்போது ரோபாட்டிக்ஸில் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளும் ஆய்வறிக்கைகளும் முதிர்ச்சியடைந்தவையாக உள்ளன.
ஒரு பொருளைப் பார்க்கும்போது, அதில் அங்கமாக இருக்கும் பல்வேறு பிரிவுகள், அவற்றுக்கு இடையிலான தொடர்புகள், ஒத்திசைவுகள் ஆகியவற்றை உணர்ந்து அறியும் திறன் மெக்கட்ரானிக்ஸ் பொறியாளர்களுக்கு உண்டு. இதனால்தான், அடுத்த தலைமுறை ஆட்டோமேஷன் சம்பந்தப்பட்ட தயாரிப்புகளை உருவாக்குவதில் முக்கியப் பங்கை அவர்கள் வகிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெக்கட்ரானிக்ஸ், மெக்கானிக்ஸ், இன்பர்மேடிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமேஷன், ரோபோடிக்ஸ் ஆகிய முக்கிய 5 துறைகளை உள்ளடக்கியுள்ளது. இது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் ஒரு உயர்படிப்பாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையின் முதுகலை படிப்பில் மெக்கட்ரானிக்ஸ் துறை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள்
மெக்கட்ரானிக்ஸ் படித்தவர்களுக்கு எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், மைனிங், டிரான்ஸ்போர்ட், கேஸ் அன்ட் ஆயில், டிஃபன்ஸ், ரோபோடிக்ஸ், ஏரோஸ்பேஸ், ஏவியேஷன், ஆர்மி, நேவி, ஏர்போர்ஸ் ஆகிய துறைகளில் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
மெக்கட்ரானிக்ஸ் சம்பந்தமான படிப்புகள்:
- Master of Engineering in Mechatronics Engineering
- Master of Technology in Mechatronics Engineering
மெக்கட்ரானிக்ஸ் சம்பந்தமான படிப்பு நடத்தும் சில கல்வி நிறுவனங்கள்:
- VIT University (Vellore)
- Karpagam College of Engineering (Coimbatore)
- Rajalakshmi Engineering College (Thandalam, Chennai)
- Madras Institute of Technology (Chennai)
சுருக்கமாகச் சொல்லப்போனால், மெக்கட்ரானிக்ஸ் என்பது எதிர்காலத் தொழில்நுட்பத்தின் முதுகெலும்பாக உள்ளது. இது பல்வேறு பொறியியல் துறைகளின் ஒருங்கிணைந்த அறிவுடன் சிக்கலான அமைப்புகளை வடிவமைக்கவும், உருவாக்கவும், மேம்படுத்தவும் உதவுகிறது. இன்றைய உலகிற்குத் தேவையான புதுமையான, திறமையான தீர்வுகளை வழங்குவதில் மெக்கட்ரானிக்ஸ் முக்கியப் பங்காற்றுகிறது.


