விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடங்கிய நாள்!

விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடங்கிய நாள்!

ன்று ஜூலை 9, உலகின் மிகவும் பழமையான மற்றும் மிகவும் மதிப்புமிக்க டென்னிஸ் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப், 1877 ஆம் ஆண்டு லண்டனின் விம்பிள்டன் பகுதியில் முதன்முதலில் தொடங்கிய நாள் ஆகும். இது டென்னிஸ் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. டென்னிஸ் விளையாடுவோரும் சரி, ரசிகர்களும் சரி, விம்பிள்டனை விரும்பிப்பார்க்க ஒரு முக்கியமான காரணம், இங்கு விதிமுறைகள் மிகக் கடுமையானவை. சுமார் 140ஆண்டுகளுக்குமுன் உருவாக்கிய அதே விதிமுறைகள்தான் பெரும்பாலும் அமலில் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, மைதானத்தில் விளையாடுவோர் வெள்ளை ஆடைதான் அணியவேண்டும், ஒருவேளை அதில் வேறு வண்ணங்கள் இடம்பெற்றிருந்தாலும் இந்த அளவுக்குமேல் செல்லக்கூடாது என்றெல்லாம் விதிமுறைகளை வைத்திருக்கிறார்கள். இப்படி விம்பிள்டன் நிர்வாகிகள் ‘நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்’ என்று கண்டிப்பாக இருந்தாலும், இது ஒரு பாரம்பரிய அனுபவமாகவே மதிக்கப்படுகிறது. ‘விம்பிள்டனில் நான் ஒரு போட்டியை நேரில் பார்த்திருக்கிறேன்’ என்று ஒரு ரசிகர் சொன்னால், மற்றவர்கள் அவரை மரியாதையுடன் பார்ப்பது உறுதி.

டென்னிஸின் வேர்கள்: உள்ளங்கையின் விளையாட்டு

டென்னிஸ் விளையாட்டின் வேர்கள் 12 ஆம் நூற்றாண்டின் பிரான்சில் உள்ளன. அப்போது இது கைகளால் பந்தைத் தட்டி விளையாடப்படும் ஒரு விளையாட்டாகவே இருந்தது. இதனால்தான் இது “உள்ளங்கையின் விளையாட்டு” (Jeu de Paume) என்று அழைக்கப்பட்டது. பிரான்சின் பத்தாம் லூயி மன்னரே பெயர் தெரிந்த முதல் டென்னிஸ் வீரர் என்பதுடன், அவர் 13 ஆம் நூற்றாண்டில் பாரிஸில் ஒரு உள்ளரங்க டென்னிஸ் மைதானத்தையும் கட்டியுள்ளார். இந்த விளையாட்டு பின்னர் மற்ற ஐரோப்பிய அரச குடும்பத்தினரிடையே பரவியது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டறியப்பட்ட ஒரு புல்வெளி விளையாட்டு க்ரொக்கெட். புல்வெளியில் ஆங்காங்கே ‘ஹூப்ஸ்’ எனப்படும் வளையங்களைப் பதித்துவைத்திருப்பார்கள், பந்துகளை அடித்து அவற்றினிடையே அனுப்பவேண்டும், கிட்டத்தட்ட கால்ஃப்மாதிரிதான், ஆனால் குழிகளுக்குப்பதில் வளையங்கள். க்ரொக்கெட் விளையாட்டு அறிமுகமானவேகத்தில் மக்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்றது. ஏராளமானோர் இதனை விளையாட விரும்பியதால், 1868ல் இங்கிலாந்தில் இதற்கென்று ஒரு தனி அமைப்பை உருவாக்கினார்கள். சுமார் நான்கு ஏக்கர் புல்வெளி நிலத்தில் அமைக்கப்பட்ட இந்தத் தனியார் குழுவின் பெயர், ‘All England Croquet Club.’

கிட்டத்தட்ட இதே நேரத்தில், இங்கிலாந்தில் புல்வெளியில் டென்னிஸ் விளையாடும் பொழுதுபோக்கும் புகழ்பெற்றுக்கொண்டிருந்தது. க்ரொக்கெட் விளையாடுவது, அதற்கான போட்டிகளை நடத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த இந்த அமைப்பினர், ‘நம்மிடம்தான் புல்வெளி இருக்கிறதே, அதில் டென்னிஸ் விளையாடுவதற்கும் ஓரிடத்தை ஒதுக்குவோமே’ என்று யோசித்திருக்கிறார்கள். ரைவில், அங்கே வருகிறவர்களெல்லாம் க்ரொக்கெட்டுக்கு இணையாக டென்னிஸையும் விளையாட விரும்பினார்கள். ஆகவே, அமைப்பின் பெயர் ‘All England Croquet and Lawn Tennis Club’ என்று மாற்றப்பட்டது.

சும்மா டென்னிஸ் விளையாடிக்கொண்டிருந்தால் எப்படி? ஒரு போட்டி நடத்தினால்தானே பரபரப்பாக இருக்கும், மக்களிடையே டென்னிஸ் விளையாடுவதற்கு, அதைப் பார்ப்பதற்கு ஆர்வத்தை உண்டாக்கும் வாய்ப்பல்லவா இது? இப்படி யோசித்த அமைப்பினர், 1877 ஜுன் 9ம்தேதி ஒரு பத்திரிகை விளம்பரம் கொடுத்தார்கள், ‘இங்கிலாந்துவாழ் டென்னிஸ் ஆர்வலர்களே, விம்பிள்டனில் புல்வெளி டென்னிஸ் போட்டியொன்றைத் தொடங்குகிறோம், ஆர்வமுள்ள எல்லாரும் இதில் கலந்துகொள்ளலாம்.’

அந்த முதல் ‘விம்பிள்டன் டென்னிஸ்’ போட்டியில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் ஒரு சிறு தொகையைக் கட்டணமாகச் செலுத்தவேண்டும்; டென்னிஸ் ராக்கெட்களையும் அவர்களே கொண்டுவரவேண்டும்; பந்துகளைமட்டும் போட்டியை நடத்துவோர் தருவார்கள்; ஒருவரையொருவர் எதிர்த்து மோதவேண்டும்; இறுதிப்போட்டியில் வெல்பவருக்குப் பரிசுக்கோப்பை. இந்த விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு 22 பேர் விளையாட முன்வந்தார்கள். இவர்களுக்கிடையேதா 1877 இதே ஜூலை 9ம் தேதி அகில இங்கிலாந்து க்ரொக்கெட் மற்றும் புல்வெளி டென்னிஸ் அமைப்பின் மைதானத்தில் போட்டிகள் தொடங்கின.

ரேக்கெட்டின் அறிமுகமும், ‘டென்னிஸ்’ பெயரின் பிறப்பும்

16 ஆம் நூற்றாண்டில் தான் இன்று நாம் பயன்படுத்தும் ரேக்கெட் (கம்பியால் பின்னப்பட்ட தட்டை) அறிமுகமானது. “டென்னிஸ்” என்ற பெயர் உருவானதற்கும் ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு. பந்தைப் போடுபவர் “டெனெஸ்” (Tenez) என்ற பிரெஞ்சுச் சொல்லைச் சொல்லும் வழக்கத்திலிருந்து இந்த பெயர் உருவானது. “டெனெஸ்” என்பதற்கு “பிடி” அல்லது “எடு” என்று பொருள்.

புல்வெட்டும் இயந்திரத்தின் பங்கு

டென்னிஸ் ஒரு புல்தரை விளையாட்டாக உருவானதால், 1830 இல் கண்டுபிடிக்கப்பட்ட புல்வெட்டும் இயந்திரம் (Lawn Mower) இந்த விளையாட்டு பரவலாக முக்கியக் காரணியாக அமைந்தது. சீராக வெட்டப்பட்ட புல்வெளி மைதானங்கள், விளையாட்டை மேலும் மெருகூட்டின.

நவீன டென்னிஸின் தந்தை

1800களின் பிற்பகுதியில் உருவான நவீன டென்னிசை உருவாக்கியவராக இங்கிலாந்து ராணுவ அலுவலர் வால்ட்டர் விங்க்ஃபீல்ட் (Walter Wingfield) கருதப்படுகிறார். அவர் டென்னிஸ் விளையாட்டின் விதிகளை முறைப்படுத்தி, அதை ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட விளையாட்டாக மாற்றினார்.

கிராண்ட் ஸ்லாம்: டென்னிஸ் உலகின் சிகரம்

விம்பிள்டன், பிரெஞ்ச் ஓப்பன், ஆஸ்திரேலியன் ஓப்பன், மற்றும் அமெரிக்கன் ஓப்பன் ஆகிய நான்கு டென்னிஸ் போட்டிகளும் கிராண்ட் ஸ்லாம் (Grand Slam) போட்டிகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த சொல் 17 ஆம் நூற்றாண்டில் ஒரு சீட்டுக்கட்டு விளையாட்டில் வெற்றியைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. அந்த விளையாட்டில் அனைத்தையும் வெல்வது ‘கிராண்ட் ஸ்லாம்’ என்றும், ஒன்றைத் தவிர அனைத்தையும் வெல்வது ‘ஸ்மால்’ அல்லது ‘லிட்டில் ஸ்லாம்’ என்றும் அழைக்கப்பட்டது.

1930 இல் பாபி ஜோன்ஸ் (Bobby Jones) நான்கு பெரிய கோல்ஃப் போட்டிகளிலும் வென்றபோது ‘கிராண்ட் ஸ்லாம்’ என்ற சொல் மீண்டும் பிரபலமடைந்தது. அதன் பின்னர்தான், ஒரே ஆண்டில் மேற்குறிப்பிட்ட நான்கு டென்னிஸ் போட்டிகளிலும் வெல்வதை ‘கிராண்ட் ஸ்லாம்’ என்று அழைக்கும் பழக்கம் உருவானது.

இன்று, விம்பிள்டனைத் தவிர மற்ற மூன்று கிராண்ட் ஸ்லாம் போட்டிகளும் கடினமான தரையில்தான் (Hard Court) விளையாடப்படுகின்றன. விம்பிள்டன் மட்டுமே அதன் பாரம்பரியமான புல் மைதானத்தில் விளையாடப்படுகிறது, இது அதன் தனித்துவமான கவுரவத்திற்கு ஒரு முக்கியக் காரணமாகும்.