சர்வதேச நாய் தினம் @சர்வதேச நாய் வளர்ப்பு தினம்!
இப்போது ஹாட் டாபிக் ஆகி பலராலும் புறக்கணிக்கப்படும் நாய்களும் மனிதர்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒன்றாக வாழ்கின்றனர். பரஸ்பரம் இரு உயிரினங்களுக்கும் பயனளிக்கும் ஒரு கூட்டு வாழ்வு முறையை கடைப்பிடித்து வருகின்றனர். ஆரம்ப காலங்களில் மனிதர்களுக்கு, விலங்குகளை வேட்டையாட நாய்கள் மிகவும் உதவியாக இருந்தன. மேலும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதிலும் சிறந்து விளங்கின. அதனால் வீடுகளில் அவற்றை வளர்க்க ஆரம்பித்தார்கள். மனிதர்களும் நாய்களுக்குத் தேவையான உணவு மற்றும் இருப்பிடத்தை வழங்கினர். இணைப்புப் பாலங்கள்: மற்ற விலங்குகளை விட நாய்கள் மனிதர்களின் உடல் மொழி மற்றும் முக பாவனைகளை புரிந்து கொள்வதிலும், ரெஸ்பான்ஸ் செய்வதிலும் மிகவும் திறமையானவை. அதைப்போலவே நாயின் குரைப்பொலி, செல்லச்சிணுங்கல்கள் மற்றும் உடல் சமிக்ஞைகளை மனிதர்களால் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். அவை இருபாலருக்கும் ஏற்ற இணைப்புப் பாலங்களாக இருக்கின்றன.

விரிவாகச் சொல்வதானால் வளர்ப்புப் பிராணிகளில் நாய்களுக்கு தனி மதிப்புண்டு. பக், பொம்மேரியன், டாபர்மன் எனப் பல வகை நாய்கள் வளர்க்கப்படுகின்றன. காவல்துறைக்காக, வீட்டுப் பாதுகாப்பிற்காக, வேட்டைக்காக எனப் பல காரணங்களுக்காகவும் நாய்கள் வளர்க்கப்படுகின்றன. நாய் நன்றியுள்ள பிராணி என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அந்தஸ்தைக் காட்டக்கூட அதிக விலையிலான நாய்களை வளர்க்கிறார்கள். நாய்கள் பொதுவாக அதிக மோப்ப சக்திக் கொண்டவை. நாய் வளர்ப்பவர்களுக்குத் தெரியும், நாய்க் குட்டிகளின் சேட்டைகள் எவ்வளவு ரசிக்கத்தக்கவை என்று. என்ன செய்தாலும் எஜமான் காலைச் சுற்றிவரும் நாய்க்குட்டிகளின் பாசம் யாருக்குத்தான் பிடிக்காமல் போகும்? இப்படி மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடைப்பட்ட பிணைப்பை சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், தற்காலத்தில் என்ன பிரச்னையாக இருக்கிறது. உலகின் மூன்றாவது கொடிய உயிரினம் நாய் என World Animal Foundation தெரிவிக்கிறது. இதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை. புள்ளி விபரங்களின்படி, உலகளவில் 700 மில்லியன் முதல் 1 பில்லியன் வரையிலான நாய்கள் இருக்கின்றன. இது வீடுகளில் வளர்க்கப்படுபவை தெருநாய்கள் என அனைத்தையும் சேர்த்த கணக்கு. இதே நாய்க்கடிகளின் மூலம், 70% குழந்தைகளே பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் இறப்புகள் ரேபிஸால் நிகழ்வதாக உலக சுகாதார இயக்ககம் தெரிவித்திருக்கிறது. அதை எல்ல்லாம் தாண்டி இன்று சர்வதேச நாய் வளர்ப்பு தினம். முன்னரே சொன்னது போல் மனித குலத்துக்குத் துணையாக மட்டுமில்லாது பாதுகாப்பாகவும் இருந்துவரும் நாய்களைப் பராமரிப்பது குறித்த விழிப்புணர்வைப் பொதுச் சமூகத்தில் ஏற்படுத்தும் விதமாக ஆகஸ்ட் 26-ம் தேதி சர்வதேச நாய் வளர்ப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆம்.. நாய்கள் மனிதனைக் கடிப்பதற்காகப் படைக்கப்பட்ட பிராணிகள் அல்ல. நாம்தான் கடிப்பதற்கான நெருக்கடியை அவற்றிற்கு உண்டாக்குகிறோம். நாய்களால் மனிதனுக்கு வரக்கூடிய இன்னல்களைவிட மனிதர்களால் நாய்களுக்கு வரக்கூடிய இன்னல்கள்தான் மிக மிக அதிகம். தெருக்களில் ஆடு- மாடுகளை வளர்த்து வணிகம் செய்பவர்களுக்கும் இரவு நேரங்களில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகிறவர்களுக்கும் சமூக நாய்கள் இடைஞ்சலாக இருக்கின்றன. அவர்கள் கொஞ்சமும் ஈவிரக்கம் இல்லாமல் நாய்களை விஷம் வைத்துச் சாகடிக்கிறார்கள். சமூக நாய்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து எந்தப் பதிவுகளும் நம்மிடம் இல்லை. ஆனால், அரிதிலும் அரிதாக எங்காவது ஒரு நாய் யாரையாவது கடித்துவிட்டால், கடித்துக் குதறியது என்று பெரிய விஷயமாகப் பதிவிடப்படுகிறது. இது வீட்டுக்குள் வைத்து வளர்க்கப்படும் அந்நிய நாட்டு நாய் வணிகத்தை ஊக்குவிக்கும் விஷயமாக அமைந்து விடுகிறது. நமது பெற்றோரையும் உறவுகளையும் கொண்டு போய் அனாதை இல்லத்தில் விட்டுவிட்டு எங்கோ ஓரிடத்தில் நடக்கும் இயற்கைப் பேரிடருக்கு நன்கொடை அனுப்பிய கதைதான் இது.
மனிதனுடைய தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடுதான் அந்நிய நாட்டு நாய்களை வளர்க்கும் கலாச்சாரமாக மாறி இருக்கிறது. அந்நிய நாட்டு நாய்களை வளர்த்தால் தங்களின் சமூக அந்தஸ்து கூடும் என நினைக்கும் தாழ்வு மனப்பான்மைதான் இதற்குக் காரணம். மனிதர்களைக் கடிப்பதற்காகப் படைக்கப்பட்டவை அல்ல நாய்கள். ஆனால், மனிதன்தான் அவற்றுக்குக் கடிநாய், தெருநாய், வெறிநாய் எனப் பட்டம்கட்டி விடுகிறான். அதே சமயம் ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்தின்போது அறிக்கை மட்டுமே விடும் மாநகராட்சி, ஆக்ரோஷமான வளர்ப்பு நாய்களை அடையாளம் கண்டு, நடவடிக்கை எடுப்பது போன்றவற்றில் மெத்தனம் காட்டுவதால், நாய்க்கடியால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்கிறது. நம் தமிழ்நாடில்ல் தடை செய்யப்பட்ட நாய்களும் பல விஐபிகளால் வளர்க்கப்படுகிறது. இதுகுறித்து, மாநகராட்சி கால்நடை அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. குறிப்பாக, அனைத்து பகுதிகளிலும் வழக்கம்போல் வளர்ப்பு நாய்கள், மக்கள் கூடும் பேருந்து நிலையங்கள், பூங்காக்களில் உலா வருகின்றன. அவ்வாறு அழைத்து வரப்படும் நாய்கள் சங்கிலி மட்டுமே போடப்பட்டுள்ளது. வாய் மூடி போடப்படுவது இல்லை. நாயை அழைத்து வருவோர் பெரும்பாலும், மொபைல் போனில் பேசிக்கொண்டு வருகின்றனர். அந்நாய்கள், அப்பகுதியை கடந்து செல்வோரை அச்சுறுத்தி வருகிறது. சம்பவம் நடக்கும்போது மட்டும், மாநகராட்சி அறிக்கை விடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், நடவடிக்கைகளை துரிதப்படுத்தினால்தான் இந்த சிக்கல் தீரும்.

இந்நிலையில் மாநகராட்சி கால்நடைத்துறை அதிகாரிகள் தரப்பில்’நாய்கள் வளர்ப்போர் விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால், குற்றவியல் நடவடிக்கை வரை எடுக்க முடியும். அவற்றை செயல்படுத்த மாநகராட்சி உயர் அதிகாரிகளிடம் அனுமதி கோரினோம். அனுமதி தர மறுத்துவிட்டனர். பெரும்பாலும் வசதி படைத்தோர் நாய்கள் வளர்ப்பது காரணமாக இருக்கலாம்.’என்கின்றனர். மேலும் இன்றைக்கு நகர்புறங்களில் வளர்க்கும் நாய் மிகவும் வித்தியாசமாக செயல்பட வைக்கிறது. நாய் வளர்ப்பவர்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டி இருந்தால், அதற்காக சமைத்து சாப்பாடு வைத்து, அதை பார்த்துக் கொள்வதற்காக ஒரு ஆளை அமர்த்தி அல்லது நாயை கவனித்துக் கொள்ளும் காப்பகத்தில் விட்டுவிட்டு செல்ல வேண்டி இருக்கிறது. மேலும் அதை குளிக்க வைக்க தனி சோப்பு இத்யாதிகள் தேவைப்படுகிறது. அதற்கான சமையலுக்கு தனி பாத்திரங்கள் வைத்து சமைத்து போடுகிறார்கள். அதன் கழிவுகளை வெளியேற்ற அவ்வப்பொழுது வீட்டில் இருப்பவர்கள் வெளியில் அழைத்துக் கொண்டு செல்கிறார்கள். அப்படி செல்லும்பொழுது வழியில் அசுத்தம் செய்து விட்டால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் முகம் சுழித்து ஏதாவது பேசுவதையும் பொறுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அது படுப்பதற்கு தனி படுக்கை மெத்தை என்று ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள். அதையும் அவ்வப்பொழுது சுத்தம் செய்து போட வேண்டியிருக்கிறது. கொஞ்சம் அசுத்தமாக இருந்தாலும் வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் சங்கடப்படுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் நாய் வளர்ப்பவர்கள் வீட்டிற்கு பெற்றோர்களே போய் வர விருப்பப்படுவதில்லை. அதிலும் மழைக்காலம் வந்து விட்டால் வீட்டிற்குள்ளேயே அதற்கு படுக்கையறை வேறு இருப்பதால் சாப்பிடவும் தண்ணீர் அருந்தவும் மிகவும் சங்கடப்படுகிறார்கள் வீட்டிற்கு வரும் பெரியவர்கள். இதனால் வீட்டிலும் சில சண்டை சச்சரவுகள் ஏற்பட ஆரம்பிக்கிறது. வீட்டில் பெரியவர்களாகிய எங்கள் உடல்நிலை சரியில்லை என்றால் வந்து பார்ப்பதில்லை. நாய்க்கு என்றால் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து ஆஸ்பத்திரி வரை அழைத்துச் சென்று எல்லாம் செய்வதற்கு மட்டும் நேரம் இருக்கிறது. எங்களை கவனிக்க நேரமில்லையா? என்றும் மன வருத்தப்படுகிறார்கள்.
இன்னும் சில வீடுகளில் படித்து முடித்து வேலைக்குச் சென்று வெளியூரில் வேலை பார்க்கும் பிள்ளைகள் வீட்டில் இருக்கும் பெற்றோர்களுக்கு நாயை வாங்கி கவனிக்கும்படி விட்டுவிட்டுச் சென்று விடுகிறார்கள். அதை கவனிப்பதற்கு அவர்களுக்குப் பிடிப்பதில்லை. பிள்ளை வாங்கிவிட்டானே என்று வளர்க்கிறார்கள். இது தேவையில்லாத சுமை. நாங்கள் பணிபுரிந்து ஓய்வில் வீட்டில் நிம்மதியாக இருக்கலாம் என்றால், இந்த நாயினால் பெரிய அல்லல்பட வேண்டி இருக்கிறது என்று கஷ்டமாக சொல்வதையும் கேள்விப்பட முடிகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அதை கவனித்து எல்லாம் செய்துவிட்டு எங்களுக்கு சாப்பிடக்கூட பிடிக்கவில்லை என்று பெரியவர்கள் கூறுகிறார்கள். இன்னும் ஒருசிலர் பர்த்டே வெட்டிங் டே என்று வரும்பொழுது நாய்க்குட்டியை அன்பளிப்பாகக் கொடுத்து அவர்களின் அன்பினை வெளிப்படுத்துகிறார்கள். இதனாலும் சில பிரச்னைகள் எழுகிறது. இங்கு எப்பொழுதும் நாய் வீட்டிற்குள்ளேதான் வாசம் செய்கிறது. வெளியில் விட்டால் யாராவது பிடித்துக்கொண்டு போய் விடுவார்கள் என்ற பயம். சில நாய்கள் குறைப்பது கூட இல்லை. யாராவது வந்தாலும் சென்றாலும் வேடிக்கை பார்க்கிறது. அப்பொழுதுதான் இந்த எண்ணம் தோன்றுகிறது நாய்க்கு நாம் காவலா? நாய் நமக்கு காவலா? என்று. ஆக, ஒரு குழந்தையை வளர்ப்பதற்கும் மேலான செலவுகளையும் கவனிப்பையும் ஒரு நாய்க்கு கொடுக்க வேண்டி இருப்பதை இங்கு கவனிக்க முடிகிறது.
அதே சமயம்செல்லப்பிராணிகளை வளர்ப்பது, குறிப்பாக நாய் வளர்ப்பது அதனுடன் நேரம் செலவிடுவது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மன அழுத்த ஹார்மோன்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது. தனிமை உணர்வை குறைக்கிறது. மகிழ்ச்சி உணர்வுகளை அதிகரிக்கச் செய்கிறது. நாயுடன் கொஞ்சுவது, விளையாடுவது, வெளியில் கூட்டிச் செல்வது போன்றவற்றால் நல்ல உடற்பயிற்சி கிடைக்கிறது. இதனால் உற்சாகம் மேலிடுகிறது. உட்கார்ந்தே வேலை பார்ப்பதில் சலிப்பு தட்டுவதில்லை. ஏனென்றால் அவ்வப்பொழுது எழுந்து நாய்க்கு வேண்டிய வேலைகளை செய்யவேண்டி இருப்பதால், அதில் ஒரு மனநிறைவு கிடைக்கிறது என்கிறார்கள். நாணயத்தின் இரு பக்கம் போல் எல்லாவற்றிலும் நிறைகுறை, நன்மை, தீமை இருப்பது போல் நாய் வளர்ப்பிலும் இருப்பதை நன்றாகப் பார்த்து, கேட்டு தெரிந்து கொள்ள முடிகிறது. எனவே முடிந்தவரை நாய் வளர்ப்பை பிடிக்காத பெற்றோர்களிடம் வளர்க்கச் சொல்லி கட்டாயப்படுத்தாமல், அதை பிடித்தவர்களே அருகில் இருந்து வளர்ப்பது பிரச்னைகளைத் தீர்க்கும்.
நிலவளம் ரெங்கராஜன்


