ஆகாஷ் தீப்: துயரங்களுக்கு மத்தியில் ஒளிரும் நட்சத்திரத்தின் வாழ்க்கை மற்றும் சாதனைகள்!

ஆகாஷ் தீப்: துயரங்களுக்கு மத்தியில் ஒளிரும் நட்சத்திரத்தின் வாழ்க்கை மற்றும் சாதனைகள்!

ந்திய கிரிக்கெட் அணியில் சமீபத்தில் அறிமுகமாகி, தனது வேகப்பந்துவீச்சால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வரும் இளம் வீரர் ஆகாஷ் தீப். அவரது திறமை, உழைப்பு, மற்றும் களத்திற்கு வெளியே அவர் சந்தித்த கடுமையான வாழ்க்கை போராட்டங்கள், அவரை ஒரு உண்மையான ஹீரோவாக மாற்றியுள்ளன. பிஹாரின் சசாரம் என்ற சிறிய கிராமத்தில் இருந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி வரை அவர் கடந்து வந்த பாதை, பலருக்கும் உத்வேகம் அளிக்கிறது.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் துயரங்கள்:

ஆகாஷ் தீப் 1996, டிசம்பர் 15 அன்று பிஹாரின் தேஹ்ரி நகரில் பிறந்தார். கிரிக்கெட் மீதான அவரது ஆர்வம் சிறு வயதிலிருந்தே இருந்தது. ஆனால், அவரது குடும்ப சூழ்நிலை, குறிப்பாக அவரது தந்தை ராம்ஜி சிங் (ஒரு பள்ளி ஆசிரியர்) அரசு வேலைக்குச் சென்று நிலையான வாழ்க்கை வாழ வேண்டும் என்று விரும்பினார். ஆகாஷ் காவலர் தேர்வுக்கோ அல்லது பியூன் வேலைக்கோ முயற்சி செய்யுமாறு அவரது தந்தை அறிவுறுத்தினார். ஆனாலும், ஆகாஷ் தனது கிரிக்கெட் கனவை ரகசியமாகத் தொடர்ந்தார்.

2010 ஆம் ஆண்டு, மேற்கு வங்காளத்தின் துர்காபூரில் உள்ள தனது மாமா வீட்டில் குடியேறினார். ஆனால், அவரது வாழ்க்கையில் அடுத்தடுத்து சோகங்கள் நிகழ்ந்தன. அவரது தந்தை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அவரது அண்ணனும் உயிரிழந்தார். இந்த இரட்டை சோகங்கள் ஆகாஷை நிலைகுலையச் செய்தன. குடும்பத்தின் நிதிச் சுமை அவர் மீது விழுந்ததால், மூன்று ஆண்டுகள் கிரிக்கெட்டிலிருந்து விலகி இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வீட்டின் ஒரே நம்பிக்கையாக, தனது குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவருக்கு ஏற்பட்டது.

கிரிக்கெட் மீதான வெறி மற்றும் மீள்வு:

கடுமையான நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில், ஆகாஷ் தீப் மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். துர்காபூரில் நடந்த உள்ளூர் டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, ஒரு நாளைக்கு ரூ. 6,000 வரை சம்பாதித்து தனது செலவுகளை சமாளித்தார். அவரது உள்ளூர் போட்டிகளில் வெளிப்படுத்திய திறமை, அவரை கொல்கத்தாவுக்கு அழைத்து வந்தது. அங்கே முகமது ஷமி போன்ற இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் வழிகாட்டுதலில் தனது உடல் தகுதியையும், பந்துவீச்சுத் திறனையும் மேம்படுத்திக் கொண்டார்.

உள்நாட்டு கிரிக்கெட்டில் பிரகாசம்:

  • பெங்கால் அறிமுகம்: 2019 ஆம் ஆண்டு பெங்கால் அணிக்காக U-23 பிரிவில் சிறப்பாகச் செயல்பட்ட பிறகு, அவர் அதே ஆண்டு மார்ச் மாதம் டி20 வடிவத்திலும், பின்னர் ஒருநாள் (List A) மற்றும் டிசம்பர் மாதம் முதல் தர கிரிக்கெட்டிலும் (First-Class) பெங்கால் அணிக்காக அறிமுகமானார்.
  • ரஞ்சி டிராபி ஹீரோ: 2019-20 ரஞ்சி டிராபி சீசனில் குஜராத் அணிக்கு எதிராக 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அந்த சீசனில் 35 விக்கெட்டுகளை வீழ்த்தி, பெங்கால் அணி இறுதிப் போட்டிக்குச் செல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
  • 2023 சீசனின் திருப்புமுனை: 2023 ரஞ்சி டிராபி சீசன் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஹரியானாவுக்கு எதிராக 10 விக்கெட்டுகளையும், அரையிறுதியில் மத்தியப் பிரதேசத்திற்கு எதிராக 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, ‘ஆட்ட நாயகன்’ விருதைப் பெற்றார். அந்த சீசனில் 41 விக்கெட்டுகளுடன் பெங்கால் அணியின் அதிக விக்கெட் எடுத்த பந்துவீச்சாளராகத் திகழ்ந்தார்.
  • இந்தியா ‘A’ அணிக்கான வாய்ப்பு: ரஞ்சி டிராபியில் அவரது தொடர்ச்சியான சிறப்பான ஆட்டங்கள், இந்தியா ‘A’ அணிக்கு தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து லயன்ஸுக்கு எதிரான தொடர்களில் வாய்ப்பைப் பெற்றுத்தந்தன. இங்கிலாந்து லயன்ஸுக்கு எதிரான இரண்டு போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி, தனது திறமையை மேலும் மெருகேற்றினார்.

ஐபிஎல் பயணம்:

உள்நாட்டுப் போட்டிகளில் ஆகாஷ் தீப் வெளிப்படுத்திய திறமை, ஐபிஎல் அணிகளின் கவனத்தை ஈர்த்தது. 2022 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியால் அடிப்படை விலைக்கு வாங்கப்பட்டார். RCB அணிக்காக அவர் 3 சீசன்களில் 8 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர், 2025 ஐபிஎல் சீசனுக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிக்குத் மாறினார்.

சர்வதேச அறிமுகமும், வரலாற்றுச் சாதனையும்:

2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 அன்று இங்கிலாந்துக்கு எதிராக ராஞ்சியில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக ஆகாஷ் தீப் அறிமுகமானார். தனது அறிமுகப் போட்டியிலேயே அபாரமாகப் பந்துவீசி, முதல் சில ஓவர்களிலேயே இங்கிலாந்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.

சமீபத்தில் (ஜூலை 7, 2025) எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஆகாஷ் தீப் தனது வாழ்நாள் சாதனையைப் பதிவு செய்தார். இந்தப் போட்டியில், இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 10 விக்கெட்டுகளை (4+6) கைப்பற்றி, 10/187 என்ற புள்ளிவிவரத்துடன் இந்தியாவை 336 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 1986 இல் சேத்தன் ஷர்மா எடுத்த 10/188 என்ற சாதனையை முறியடித்து, இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்தார். மேலும், 49 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து டாப் ஆர்டரில் நான்கு பேட்ஸ்மேன்களை ஒரே இன்னிங்ஸில் அவுட் செய்த இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்குப் பிறகு, ஆகாஷ் தீப் தனது தனிப்பட்ட வாழ்க்கைப் போராட்டத்தைப் பகிர்ந்து கொண்டார். தனது அக்கா கடந்த இரண்டு மாதங்களாக புற்றுநோயுடன் போராடி வருவதாகவும், இந்தப் போட்டி வெற்றியையும் தனது பந்துவீச்சையும் அவருக்கே அர்ப்பணிப்பதாகவும் உருக்கமாகத் தெரிவித்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆக இந்த ஆகாஷ் தீப்-இன் பயணம், வெறும் கிரிக்கெட் வீரரின் கதை மட்டுமல்ல. அது கடின உழைப்பு, விடாமுயற்சி, குடும்பத்திற்கான அன்பு, மற்றும் சோகங்களை சாதனைகளாக மாற்றும் மன உறுதி ஆகியவற்றின் பிரதிபலிப்பு. “என் கிராமத்து சாலைகளைப் போல எனது பயணமும் மேடு பள்ளங்கள் நிறைந்தது” என்று அவர் கூறியது, அவரது போராட்ட வாழ்க்கையைத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. ஆகாஷ் தீப், இந்திய கிரிக்கெட்டில் ஒரு புதிய நம்பிக்கையாக உருவெடுத்துள்ளார்.

ஈஸ்வர் பிரசாத்

Related Posts