நாம் விழிப்புடன் இல்லையென்றால், எஞ்சியிருக்கும் நம் கோவணமும் உருவப்பட்டுவிடும்!
‘பட்டியல் இனமானாலும் பழங்குடியினரானாலும் அவர்களையெல்லாம் நாட்டின் மிகவுயர்ந்த பதவியில் அமரவைத்து அழகு பார்ப்பதும் கொண்டாடுவதும் நாங்கள்தான்’ என்று தம்பட்டமடித்துக் கொள்பவர்கள் நமது பாஜகவினர்தான். அது உண்மையா?
இப்போது நமது உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றிருப்பவர், பி.ஆர். கவாய் என்கிற பூஷன் ராமகிருஷ்ண கவாய் (Bhushan Ramkrishna Gavai). கே.ஜி. பாலகிருஷ்ணனுக்குப் (கோணக்குப்பகத்தில் கோபிநாதன் பாலகிருஷ்ணன்) பிறகு இரண்டாவது பட்டியலினத் தலைமை நீதிபதி இவர்தான். கூடவே, புத்தமதத்தைச் சேர்ந்த முதல் தலைமை நீதிபதி என்பதும் ஒரு தனிப் பெருமை. மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றதும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மும்பை சென்றார்.

இந்தியாவின் தலைமை நீதிபதி ஒரு மாநிலத் தலைநகருக்கு வருகிறாரென்றால், அம்மாநிலத் தலைமைக் காவல் அதிகாரி, நகரக் காவல் ஆணையர் ஆகியோர் சென்று வரவேற்பதுதான் மரபு. ஆனால், அப்படி யாருமே மும்பையில் இவரை வரவேற்கச் செல்லவில்லை. இதை அந்நிகழ்ச்சியில் இவர் சுட்டிக்காட்டிய பிறகுதான் அவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடிவந்தனர். இப்படியோர் முடிவை அந்த அதிகாரிகள் தாங்களாகவே சுயமாக யோசித்து முடிவெடுத்திருக்க முடியுமா? யோசித்துப் பாருங்கள். அங்கே நடப்பது பாஜக தலைமையிலான ஆட்சி.
இந்நிலையில், நமது துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், ‘ நாட்டின் தலைமை நீதிபதிக்கான நெறிமுறைகள் மிக உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. அது தனிப்பட்டது அல்ல, அவர் வகிக்கும் பதவிக்கானது. மேலும் இதை அனைவரும் மனதில் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். நெறிமுறைகளைப் பின்பற்றுவது அடிப்படையானது’ என்று அந்த அதிகாரிகளை ஒற்றை மயிலிறகைக் கோண்டு ஒரு சாத்து சாத்தியிருக்கிறார். (இவர்தான் ‘உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் பார்லிமெண்டா?’ என்று கேட்டவர் என்பதையும் நாம் நினைவில் கொள்வது அவசியம்) அதன் பிறகாவது அந்த அதிகாரிகளின் மேல் அந்த அரசு தண்டிக்காவிட்டாலும் கண்டித்ததாகக்கூடத் தெரியவில்லை.
மே 12-ம் தேதி பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய மத்தியப்பிரதேச அமைச்சர் விஜய் ஷா, “அவர்கள் (பயங்கரவாதிகள்) நமது சகோதரிகளின் சிந்தூரை அழித்தனர். அவர்களை அழிக்க நாம் அவர்களின் சகோதரியை அனுப்பி பழிவாங்கினோம். அவர்கள் (பயங்கரவாதிகள்) நமது இந்து சகோதரர்களைக் கொன்றனர். பிரதமர் மோடி, அவர்களின் (பயங்கரவாதிகளின்) சகோதரியை ராணுவ விமானத்தில் அனுப்பி அவர்களின் வீடுகளைத் தாக்கி பதிலடி கொடுத்தார். அவர்கள் (பயங்கரவாதிகள்) நமது சகோதரிகளை விதவைகளாக்கினர். பிரதமர் மோடி, அவர்கள் சமூகத்தைச் சேர்ந்த சகோதரியை அவர்களுக்குப் பாடம் கற்பிக்க அனுப்பினார்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
சர்ச்சை பெருமளவில் வெடிக்கவே, அமைச்சர் விஜய் ஷாவின் மன்னிப்புக் கோரலை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆபரேஷன் சிந்தூரின் போது ஊடகங்களுக்கு விளக்கமளித்த கர்னல் சோபியா குரேஷியை அவமதிக்கும் வகையில் அமைச்சர் பேசியதற்காக அவர் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரை விசாரிக்க மூன்று பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க மாநில டிஜிபிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்படி அவர்கள் பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டிவிடுவதெல்லாம் எதற்கு? அவர்களின் ஒரே இலக்கு, ‘நாங்கள் வானம்; எங்களுக்குக் கீழ்தான் எல்லாமே’ என்பதுதான். மொத்தத்தில், நாம் விழிப்புடன் இல்லையென்றால், எஞ்சியிருக்கும் நம் கோவணமும் உருவப்பட்டுவிடும். உஷார்! உஷார்!!


