உலக தேநீர் தினம்!
சகல தரப்பு மக்களின் விருப்ப பானம் தேநீர். பணிபுரியும் இடத்திலும் சரி, வீட்டில் இருந்தாலும் சரி… தலைவலியோ, டென்க்ஷனோ ஏற்பட்டால் உடனே நமது உடல் தேடுவது ஒரு கப் சூடான தேநீரை தான். டீ குடித்த சில நிமிடங்களில் ஏற்படும் புத்துணர்ச்சி அனைத்துப் பிரச்னைகளில் இருந்தும் சிறிது நேரம் நம்மை ஆறுதல்படுத்திவிடும்.தண்ணீருக்கு அடுத்தபடியாக உலகத்தில் அதிகம் அருந்தப்படும் பானம் `டீ’ என்கிற தேநீர்தான். ஏழை – பணக்காரன் என்று பாரபட்சம் பாராமல் அனைவருக்கும் மத்தியில் டீ மிகவும் பிரசித்திபெற்ற பானம். காபிக்கு 3000 ஆண்டுகள் முன்னதாகவே டீ கண்டுபிடிக்கப்பட்டது வரலாறு. இப்பேர்ப்பட்ட டீ எனப்படும் சாயாவின் அருமை, பெருமைகளை பறைச்சாற்றவே ஒவ்வோர் ஆண்டும் மே 21 ஆம் தேதி, “பன்னாட்டு டீ தினம்” உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது. தண்ணீர் தவிர்த்து, உலகில் அதிகம் அருந்தப்படும் பானம் தேநீர் என்பதால், இது உலகளாவிய அளவில் கலாச்சார, பொருளாதார மற்றும் சமூக முக்கியத்துவம் வாய்ந்தது. இத்தினம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நலன், நிலையான உற்பத்தி மற்றும் தேநீர் வணிகத்தின் சமூகப் பங்களிப்பு ஆகியவற்றை முன்னிறுத்துகிறது.

வரலாற்றுப் பின்னணி:
தேநீரின் வரலாறு சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் சீனாவில் தொடங்குகிறது. சீனப் பேரரசர் ஷென் நுங் என்பவரால் தேநீர் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதே சமயம் தேயிலை முதலில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதை சீனர்கள் மருத்துவ குணமுள்ள மூலிகையாகவே அறிந்திருந்தனர். பின் சீனாவிலிருந்து ஜப்பானுக்குப் பரவியது. ஜப்பானிலிருந்து டச்சுக்காரர்கள் வழியாக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் தேயிலை அறிமுகமானது. 1840-50-களில் இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் வரவழைக்கப்பட்ட தேயிலை இலங்கையில் சோதனை முயற்சியாகப் பயிரிடப்பட்டது. அதன்பிறகு, தென்கிழக்காசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்குத் தேயிலை பரவிய, ஒவ்வொரு நாட்டிலும் தனித்துவமான கலாச்சாரத்தைக் கொண்டது.
பன்னாட்டு டீ தினம், முதலில் 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 15 அன்று புது டெல்லியில் தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளான இந்தியா, இலங்கை, நேபாளம், வியட்நாம், இந்தோனேசியா, வங்கதேசம், கென்யா, மலாவி, மலேசியா, உகாண்டா மற்றும் தான்சானியா போன்ற நாடுகளில் கொண்டாடப்பட்டது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நலன், நியாயமான வர்த்தகம் மற்றும் விலை ஆதரவு ஆகியவற்றை முன்னிறுத்தி இத்தினம் உருவாக்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) பன்னாட்டு தேநீர் தினத்தை மே 21 அன்று உலகளவில் கொண்டாட முன்மொழிந்தது. இந்த முன்மொழிவு 2019 டிசம்பர் 21 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 2020 ஆம் ஆண்டு முதல் மே 21 ஆம் தேதி பன்னாட்டு டீ தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தேயிலை அறுவடை காலம் பெரும்பாலான தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளில் மே மாதத்தில் தொடங்குவதே இதற்கான முக்கிய காரணமாகும்.
முக்கியத்துவம்:
தேயிலைத் தொழிலாளர்களின் நலன்: தேயிலை உற்பத்தி, வளரும் நாடுகளில் மில்லியன் கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. இத்தினம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், குறிப்பாக குறைந்த ஊதியம், மோசமான பணி நிலைமைகள், மருத்துவ வசதியின்மை மற்றும் சுத்தமான நீர் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளை உலக கவனத்திற்குக் கொண்டு வருகிறது.
நிலையான உற்பத்தி மற்றும் நுகர்வு: தேயிலைத் துறையில் நிலையான உற்பத்தி முறைகள் மற்றும் பொறுப்புள்ள நுகர்வு ஆகியவற்றை ஊக்குவிக்கிறது. காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் தேயிலை உற்பத்தியாளர்களை ஆதரிப்பதும் இத்தினத்தின் நோக்கம்.
கலாச்சாரப் முக்கியத்துவம்: தேநீர் என்பது ஒரு பானம் மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களில் ஒரு சமூக மற்றும் உணர்வுபூர்வமான அடையாளமாக உள்ளது. இந்திய மசாலா சாய், ஜப்பானிய சானோயு தேநீர் சடங்கு, ஆங்கிலேயர்களின் மதிய தேநீர், மொராக்கோவின் புதினா தேநீர், ரஷ்யாவின் சமோவர் தேநீர் என ஒவ்வொரு நாட்டிலும் தேநீர் தனித்துவமான கலாச்சார முக்கியத்துவம் பெறுகிறது.
வறுமை ஒழிப்பு மற்றும் கிராமப்புற வளர்ச்சி: தேயிலைத் தொழில், குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் வறுமை ஒழிப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. அதாவது தேயிலைத் தொழில் சில ஏழ்மையான நாடுகளுக்கு வருமானம் மற்றும் ஏற்றுமதி வருவாயின் முக்கிய ஆதாரமாக உள்ளது, மேலும் தொழிலாளர் மிகுந்த துறையாக, குறிப்பாக தொலைதூர மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகளில் வேலைகளை வழங்குகிறது. வளரும் நாடுகளில் கிராமப்புற மேம்பாடு, வறுமைக் குறைப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றில் தேயிலை குறிப்பிடத்தக்க பங்கை வகிக்க முடியும், இது மிக முக்கியமான பணப் பயிர்களில் ஒன்றாகும்.

கொண்டாட்டங்கள்:
பன்னாட்டு டீ தினத்தில், தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளிலும், தேநீர் நுகரும் நாடுகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கருத்தரங்குகள், மாநாடுகள், கண்காட்சிகள் மற்றும் தேநீர் சுவைக்கும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. மக்கள் தங்கள் விருப்பமான தேநீரைப் பகிர்ந்து மகிழ்வதோடு, தேயிலைத் தொழிலின் முக்கியத்துவம் மற்றும் அதில் பணிபுரியும் மக்களின் உழைப்பையும் நினைவு கூர்கிறார்கள்.
மொத்தத்தில் இந்த பன்னாட்டு டீ தினம், வெறும் தேநீரை கொண்டாடுவது மட்டுமல்ல. இது தேயிலை உற்பத்தி முதல் நம் கைக்கு வந்து சேரும் ஒவ்வொரு படிநிலையிலும் உள்ள உழைப்பு, கலாச்சாரம் மற்றும் பொருளாதார தாக்கத்தை நினைவூட்டும் ஒரு நாள். உலகின் பெரும்பான்மையான பகுதிகளில் வெறும் காய்ச்சிய நீராக (பிளாக் டீ ) மட்டுமே தேயிலை அருந்தப்படுகிறது. நம் நாட்டில்தான் பாலுடன் சேர்த்த டீ, இஞ்சி டீ, ஏலக்காய் டீ, லெமன் டீ, காஷ்மீர் ஸ்பெஷல் பாதாம் பிஸ்தா டீ, அரேபியன் சஃப்ரானி சாய் என வெரைட்டியாக ருசிக்கப்படுகிறது. உலகம் முழுவதுமுள்ள உணவு ரசனைக்குத் தேநீர் வகைகள் மிக முக்கியமான சான்று! ஒரு சூடான தேநீர்க் கோப்பையை ரசிக்கும்போது, இந்த உலகளாவிய பானத்தின் பின்னால் உள்ள மனித உழைப்பு மற்றும் நீடித்த வளர்ச்சிக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதை பன்னாட்டு டீ தினம் உணர்த்துகிறது.
நிலவளம் ரெங்கராஜன்


