32°C
விளம்பரம்
Advertisement

உலக குடும்ப மருத்துவர் தினம்!

admin சேலம் Published: May 19, 2025 5 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



குடும்ப மருத்துவர் என்று ஒருவர் இருந்தார் என்பது மறந்து போய் வெகுகாலம் ஆகிவிட்டது. எளிய திறமையான ஆரம்பக்கால சிகிச்சை மேற்கொள்வது என்பது கௌரவ குறைச்சல் என்ற அளவுக்கு நமக்கும் பகுத்தறிவும் விஞ்ஞானமும் வளர்ந்து விட்டது. சிறிய உபாதைக்கும் உயர் சிகிச்சை மருத்துவமனையையே நாடுகிறோம். . தாய்- குழந்தை உறவு வளர்ச்சிக்கும், கணவன்- மனைவி உறவு வாழ்க்கைக்கும் எவ்வளவு முக்கியமோ அந்த அளவு இந்த குடும்ப மருத்துவர் நோயாளி உறவு என்பது மன ரீதியாக மட்டுமல்ல, உடல் நோய்களும் குணமடைதலில் மருந்துகளுக்கு நிகரான முக்கிய பங்கு வகிக்கிறது. இதை எல்லாம் உரத்த குரலில் சொல்லவே உலக குடும்ப மருத்துவர் தினம் (World Family Doctor Day) ஒவ்வொரு ஆண்டும் மே 19 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள், குடும்ப மருத்துவர்களின் (Family Doctors) முக்கியத்துவத்தை உலக அளவில் வலியுறுத்துவதற்காக 2010ஆம் ஆண்டு முதல் உலக குடும்ப மருத்துவர்கள் அமைப்பால் (World Organization of Family Doctors – WONCA) அறிமுகப்படுத்தப்பட்டது. குடும்ப மருத்துவர்கள், ஒரு தனிநபரின் மற்றும் அவரது குடும்பத்தின் ஒட்டுமொத்த உடல்நலத்தைப் பேணுவதில் முதன்மையான பங்காற்றுகின்றனர். இந்தக் கட்டுரையில், குடும்ப மருத்துவர்களின் பங்கு, அவர்களின் அருகிவரும் முக்கியத்துவம், இன்றைய சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் இந்தத் தினத்தின் பின்னணியை விரிவாக அலசுவோமா?.

குடும்ப மருத்துவர்களின் பாரம்பரிய முக்கியத்துவம்

முன்னொரு காலத்தில், ஒவ்வொரு ஊரிலும் ஒரு ‘ஃபேமிலி டாக்டர்’ என்று அழைக்கப்படும் குடும்ப மருத்துவர் இருப்பார். அவர்கள் ஒரு குடும்பத்தின் மருத்துவத் தேவைகளை முழுமையாகப் புரிந்து, தலைமுறைகளாக அவர்களின் உடல்நலப் பின்னணியை அறிந்து வைத்திருப்பார்கள். சாதாரண காய்ச்சல் முதல் நீண்டகால நோய்கள் வரை, அனைத்தையும் அவர்கள் கையாண்டனர். அந்தக் காலத்தில் மருத்துவ வசதிகள் இன்றைய அளவுக்கு முன்னேறியிருக்கவில்லை; ஆனால், மக்கள் தங்கள் குடும்ப மருத்துவரின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தனர். குடும்ப மருத்துவர்கள், நோயாளியின் உடல் நலம் மட்டுமல்லாமல், அவர்களின் குடும்பச் சூழல், பொருளாதார நிலை, மனநிலை ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு சிகிச்சை அளித்தனர். இந்த அணுகுமுறை, நோயை வெறும் உடல் ரீதியான பிரச்னையாக மட்டும் பார்க்காமல், ஒரு முழுமையான பார்வையில் அணுக உதவியது. மக்கள், எவ்வளவு கூட்டமாக இருந்தாலும், எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியிருந்தாலும், தங்கள் குடும்ப மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவதை முக்கியமாகக் கருதினர்.

இன்றைய சூழலில் குடும்ப மருத்துவர்களின் நிலை

இன்றைய நவீன மருத்துவ உலகில், குடும்ப மருத்துவர்களின் பங்கு பெருமளவு குறைந்து வருகிறது. தலைவலி போன்ற சாதாரண பிரச்னைகளுக்குக் கூட, மக்கள் நரம்பியல் நிபுணர்களை அணுகுவது வழக்கமாகிவிட்டது. இதய நோய், சிறுநீரகப் பிரச்னைகள், மூட்டு வலி, நீரிழிவு, இரைப்பை நோய்கள், முதுமை நோய்கள் என ஒவ்வொரு துறைக்கும் சிறப்பு மருத்துவர்கள் உருவாகியுள்ளனர். இதனால், குடும்ப மருத்துவர்கள் ‘அருகிவரும் ஜீவன்களாக’ மாறிவிட்டனர்.இந்த மாற்றத்திற்கு மக்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றமே முக்கியக் காரணம். நவீன மருத்துவ முன்னேற்றங்கள், அதிநவீன பரிசோதனைகள், மற்றும் சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனைகளை நாடுவதற்கு மக்கள் அதிக விருப்பம் காட்டுகின்றனர். எல்லாவற்றிலும் அவசரத்தைக் காட்டும் இன்றைய வாழ்க்கை முறை, மருத்துவத்திலும் பரவிவிட்டது. இதனால், ஒரு குடும்ப மருத்துவரை நம்பி, நீண்டகால உறவைப் பேணுவதற்குப் பதிலாக, உடனடி தீர்வுகளைத் தேடுவது பொதுவாகிவிட்டது.

குடும்ப மருத்துவர்களின் தனித்துவமான பங்கு

குடும்ப மருத்துவர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், புகழ்பெற்ற  மருத்துவர் டாக்டர் வி.வி.எஸ். நடராஜன் அவர்கள் பகிர்ந்த கருத்துகள் மிகவும் கவனிக்கத்தக்கவை. அவர் கூறியவை இங்கே: 

“ஒரு மனுஷனுக்கு வர்ற வியாதியில் பாதிக்கும் மேற்பட்ட வியாதிகளை அவனாலேயே கைவைத்தியங்களால் எதிர்கொள்ள முடியும். மீதி வியாதிகள்ல 80 சதவிகித வியாதிகளை எம்.பி.பி.எஸ். மருத்துவர்களே பார்க்க முடியும். மீதி 20 சதவிகித நோய்களுக்குத்தான் நிபுணர்கள் உதவி தேவைப்படும். இதுலேயும் ஒரு நல்ல மருத்துவர் நோயைப் புரிஞ்சுக்குறது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு நோயாளியோட பின்னணியையும் தெரிஞ்சு வைச்சுருக்குறது முக்கியம்.”

அவர் மேலும் ஒரு உதாரணத்தைப் பகிர்ந்தார்:

“என்கிட்ட ஒரு சிறுமியை அடிக்கடி ஏதாவது பிரச்னையோட அழைச்சுக்கிட்டு வந்துட்டே இருந்தாங்க. ஏன் அடிக்கடி பிரச்னைன்னு பார்த்தா, அந்தப் பெண்ணுக்கு நோய் எதிர்ப்புச் சக்திக் குறைவு. அதுக்கு ஊட்டச்சத்துப் பற்றாக்குறைதான் காரணம். ஊட்டச்சத்துக்குறைவுக்கு மாத்திரைங்களைவிட நல்ல உணவு முக்கியம். எனக்கு அந்தப் பெண்ணோட அப்பாவைத் தெரியும். அவருக்குக் குடிப்பழக்கம் உண்டு. ‘உங்களோட குடிப்பழக்கம் ஏற்படுத்துற ஏழ்மைதான் உங்க பெண்ணோட உடல்நிலைக்குக் காரணம்’னு சொன்னேன். குடியை மறக்க அவருக்குச் சிகிச்சை கொடுத்தேன். பெண் தானா குணமானா. இந்தப் பின்னணியில் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. திடீர்னு போய் பார்க்குற ஒரு ஸ்பெஷலிஸ்ட்டால் இந்தப் பிரச்னைகளை எப்படி உணர்ந்துக்க முடியும்?”இந்த உதாரணம், ஒரு குடும்ப மருத்துவரின் ஆழமான புரிதலையும், நோயாளியின் சமூக மற்றும் குடும்பப் பின்னணியை அறிந்து சிகிச்சை அளிக்கும் திறனையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

குடும்ப மருத்துவர்களின் நன்மைகள்

முழுமையான அணுகுமுறை: குடும்ப மருத்துவர்கள், நோயாளியின் உடல், மனம், மற்றும் சமூகச் சூழலை ஒருங்கிணைத்து சிகிச்சை அளிக்கின்றனர். இது, நோயின் மூல காரணத்தைக் கண்டறிய உதவுகிறது.

குடும்ப வரலாறு மற்றும் மரபியல் தொடர்பு: பரம்பரை நோய்கள், மரபியல் காரணிகள் ஆகியவற்றை அறிந்து, தடுப்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்க முடியும்.

நீண்டகால உறவு: குடும்ப மருத்துவர்கள், நோயாளிகளுடன் நீண்டகால உறவைப் பேணுவதால், அவர்களின் உடல்நல மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணிக்க முடியும்.

பொருளாதாரச் சிக்கனம்: சிறப்பு மருத்துவர்களை அணுகுவதற்கு முன், குடும்ப மருத்துவர்கள் பெரும்பாலான பிரச்னைகளைத் தீர்க்க முடியும், இது மருத்துவச் செலவைக் குறைக்க உதவுகிறது.

நம்பிக்கையும் நெருக்கமும்: நோயாளிகளுக்கும் மருத்துவருக்கும் இடையேயான நம்பிக்கை, சிகிச்சையின் வெற்றிக்கு முக்கியமானது. குடும்ப மருத்துவர்கள் இந்த நம்பிக்கையை உருவாக்குகின்றனர்.

உலக குடும்ப மருத்துவர் தினத்தின் நோக்கம்

இந்தத் தினம், குடும்ப மருத்துவர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதோடு, அவர்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு நினைவூட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இது பின்வருவனவற்றையும் வலியுறுத்துகிறது:

குடும்ப மருத்துவர்களை முதன்மை மருத்துவப் பராமரிப்பின் மையமாக ஊக்குவித்தல்.

மக்களுக்கு முழுமையான மற்றும் தொடர்ச்சியான மருத்துவப் பராமரிப்பை உறுதி செய்தல்.

சிறப்பு மருத்துவர்களை அணுகுவதற்கு முன், குடும்ப மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துதல்.

மொத்தத்தில் குடும்ப மருத்துவர்கள், ஒரு சமூகத்தின் உடல்நல அமைப்பின் முதுகெலும்பாகத் திகழ்கின்றனர். இன்றைய அவசர உலகில், நவீன மருத்துவ முன்னேற்றங்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்களின் ஆதிக்கம் அதிகரித்தாலும், குடும்ப மருத்துவர்களின் முக்கியத்துவம் ஒருபோதும் குறையாது. ஒரு குடும்ப மருத்துவர், நோயாளியின் உடல், மனம், மற்றும் சமூகச் சூழலை ஒருங்கிணைத்து, முழுமையான சிகிச்சையை வழங்க முடியும்.
டாக்டர் வி.வி.எஸ். நடராஜன் கூறியது போல, “உங்க உடல்நலத்துக்கு எப்போதும் தேவைப்படுறவர் ஃபேமிலி டாக்டர். நீங்க மருத்துவர்கள்கிட்ட எவ்வளவு நெருக்கமாகுறீங்களோ, அதே அளவுக்கு மருத்துவர்களும் உங்களுக்கு நெருக்கமாவாங்க. அதனால, உங்க ஃபேமிலி டாக்டரை நீங்களே உருவாக்குங்க.” இந்த உலக குடும்ப மருத்துவர் தினத்தில், நமது குடும்ப மருத்துவர்களைப் புரிந்து, அவர்களின் பங்களிப்பைப் பாராட்டுவோம். அவர்களை நமது உடல்நலப் பயணத்தில் முதன்மையான பங்காளிகளாக ஏற்போம்.

நிலவளம் ரெங்கராஜன்

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்