என் காதலே – விமர்சனம்!

என் காதலே – விமர்சனம்!

காதலித்து ஏமாற்றுபவர்கள் என்று பெரும்பாலும் பெண்கள் மீது குற்றம் சட்டபடுவது உண்டு. அதுவும் திரை படங்களில் முக்கியமாக தமிழ் அனைத்திலும் காதல் தோல்வி பற்றிய ஒரு சீன் கூட இல்லாமல் படம் இருப்பதில்லை. அதுவும், பெண்களை கண்டபடி திட்டி ஒரு பாட்டு கட்டாயம் இருக்கும். “இந்த பொண்ணுங்களே இப்படி தான்”, “போங்கடி நீங்களும் உங்க காதலும்”….blah blah.. என்று நிறைய. இச்சூழலில் பெண் தரப்பு காதல் மற்றும் அதன் தோல்வியை சொல்லும் திரைப்படங்கள் வருவது தமிழ் சினிமாவில் அரிதான ஒன்று. அந்த வகையில், பெண் காதல் தோல்வியையும், அதன் வலியையும் சொல்லும் இந்த படமிது.

அதாவது காரைக்காலில் உள்ள ஒரு மீனவ குப்பத்தில் 2004 சுனாமி பேரலையால் அப்பா-அம்மாவைப் பறிகொடுத்த லிங்கேஷ், மாமன் மதுசூதனன் அவனை எடுத்து சொந்தப் பிள்ளை போலவே வளர்கிறார். லிங்கேஷ் படித்து, மாமனின் வலது கரமாக இருந்து மீன்பிடி தொழிலில் தனது உயிராக நினைத்து வாழ்ந்து வருகிறார். கூடவே மாமன் மகள் திவ்யா, சிறுவயதில் இருந்தே மாமா தான் தனது உலகம் என்று லிங்கேஷ் மீது அளவுகடந்த பாசத்தையும், காதலையும் வைத்து அவரையே சுற்றி வருகிறார். மாமன் மதுசூதனனும் லிங்கேஷ் தான் தனது மருமகன் என்று முடிவு செய்துள்ளார். இச்சூழலில் வழக்கம் போல் எதிர் கோஷ்டி ஒன்று சுற்றுவட்டாரத்தில் செல்வாக்குடன் இருக்கும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செல்வாக்கை ஒழிக்க செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் லண்டனிலிருந்து தமிழக கலாச்சாரத்தைப் பற்றி ஆய்வு செய்ய, ஹீரோயின் லியா உள்ளிட்ட ஒரு குழு அந்த மீனவ குப்பத்துக்கு வருகிறது. அவர்களுக்கு வழிகாட்டியாகவும், தமிழக கலாச்சாரத்தை பற்றி சொல்ல லிங்கேஷ் இவர்களுடன் பயணிக்கிறார். ஆரம்பத்தில் லிங்கேஷின் ஒரு சில செயலால் அவர் மீது வெறுப்பு கொண்டவராக லியா இருக்கிறார். போகப்போக ஊர்மக்களிடம் லிங்கேஷின் அன்பும், பாசமும் பழகும் அவரது நல்ல உள்ளத்தை புரிந்து லிங்கேஷை காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். லிங்கேஷுக்கு திவ்யா மீது ஒருபோதும் காதல் வரவில்லை. மாறாக அவளை அவனது தாய் ஸ்தானத்தில் வைத்து பார்க்கிறார். விரைவில் மாமனை திருமணம் செய்து சந்தோஷமாக வாழலாம் என்ற கனவில் இருந்த திவ்யாவுக்கு லிங்கேஷ்-லியா காதல் பேரிடியாக இருக்கிறது. விஷயம் கேள்விப்பட்ட மாமன் மதுசூதனன் லிங்கேஷ்-லியா காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் காதலை பிரிக்க நடவடிக்கை எடுக்கிறார். எதிர்பாராத பல திருப்பங்களுடன் திவ்யா-லிங்கேஷ்-லியா காதல் என்ன ஆனது என்பதே இந்த என் காதலே படக் கதை.

ஹீரோவாக நடித்திருக்கும் லிங்கேஷ், ஹீரோயிங்களாக நடித்திருக்கும் திவ்யா மற்றும் லண்டன் பெண் லியா ஆகிய மூவரும் கிடைத்த ரோல்களின் வலுவை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். குறிப்பாக் தங்கள் காதல் உணர்வுகளை ரசிகர்களிடத்தில் நேர்த்தியாக கடத்தி படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.காட்பாடி ராஜன், மதுசூதன் ராவ், தர்சன், என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் படத்தின் ஆரம்பத்தில் முக்கியமான கதாபாத்திரங்களாக அறிமுகமானாலும், அதன் பிறகு திரைக்கதையோடு ஒட்டாமல் பயணித்து மறைந்து போகிறார்கள்.கஞ்சா கருப்பு மற்றும் மாறன் கூட்டணி காமெடி ஓரளவு சிரிக்க வைக்கிறது.

மியூசிக் டைரக்டர் சாண்டி சாண்டல்லோ இசையில் பாடல்கள் அனைத்தும் முனுமுனுக்க வைக்கும் ஹிட் ரகங்களாக இருப்பதோடு, வார்த்தைகள் தெளிவாக புரியும்படியும் இருக்கிறது. மெலொடி பாடல்கள் குட் ஃபீல் பின்னணி இசையும் பர்ஃபெக்ட் .

கேமராமேன்கள் டோனிசென் மற்றும் வெங்கடேஷ், கடல் மற்றும் கடல் சார்ந்த பகுதிகளை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பாடல் காட்சிகளில் கதை மட்டும் இன்றி கதாபாத்திரங்களையும் பளிச்சென்று காட்டி பலம் சேர்த்து இருக்கிறார்கள்.

எடிட்டர் கோபி கிருஷ்ணா மற்றும் ரஞ்சித் ஆகியோரது பணியில் குறையில்லை.

படத்தின் கதையை எழுதி டைரக்ட் செய்திருக்கும் ஜெயலட்சுமி, முக்கோண காதல் கதையை அழகியலோடு சொல்ல முயற்சித்திருக்கிறார். காட்சிகளில் புதுமை இல்லை என்றாலும், தேவையில்லாத விசயங்களை திணிக்காமல் தான் சொல்ல வந்ததை நேர்த்தியாக சொல்லி பாஸ் மார்க் வாங்கி விட்டார்