சென்னை மெட்ரோவில் டிக்கெட் வழங்குவதில் ஏன் இந்த குளறுபடி?

சென்னை மெட்ரோவில் டிக்கெட் வழங்குவதில் ஏன் இந்த குளறுபடி?

சென்னை மெட்ரோவில் பயணச்சீட்டு வாட்ஸப்பில் தான் அனுப்புகின்றனர்,பட்டன் ஃபோன் தான் உள்ளது என சொன்னாலும் செவிமடுப்பதில்லை, தவிர பயணச்சீட்டு கட்டணத்தை பணமாக வாங்குவதில்லை, ஜிபேயில் தான் செலுத்த வேண்டி உள்ளது. இந்த செயல்முறை மிகவும் அடாவடியாக உள்ளது, வாட்ஸாப் ஜிபே இல்லாமல் எத்தனையோ பேர் இருப்பர், அவர்கள் மெட்ரோவில் பயணிக்க வாட்ஸாப் ஜிபே செயலி நிறுவ வேண்டும், அதற்கு டேட்டா பேக் இட்டு வைத்து வேலிடிட்டி முடியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது எத்தனை அநியாயம், முதியவர்களுக்கு தங்கள் தொலைபேசி எண்களை எண்கள் பதியும் கருவியில் உள்ள தேய்ந்து போன பொடி எழுத்து பொத்தான்களை உபயோகித்து பதிவதில் எத்தனை சிரமம் இருக்கும்,எத்தனை பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருக்கும், அவர்களுக்கு இது அயற்சியை தருமே, மேலும் இந்த வாட்ஸாப்பில் அனுப்பப்படும் பார் கோட் உபயோகித்து டர்ன்ஸ்டைல் கதவுகளை கடப்பது பிரம்ம பிரயத்தனமாக உள்ளது,பல வேளைகளில் ஸ்கேனர் கண்ணாடி பார்கோடை படிப்பதில்லை, மக்கள் அதிக நேரம் இந்த பிரயத்தனத்தில் செலவிட வேண்டியுள்ளது,

இருவாரங்கள் முன்பு சென்ட்ரலில் இருந்து மெட்ரோவில் பயணிக்கையில் இந்த வாட்ஸாப் பயணச்சீட்டு குழப்பத்தால் பரபரப்பான காலைவேளையில் நெடும் வரிசை தேங்கி நிற்கிறது.நான் திரிசூலத்தில் இறங்க வேண்டும், என் நண்பர் திருமங்கலத்தில் இறங்க வேண்டும், இருவருக்கும் நான் பயணச்சீட்டு எடுக்கையில் என் பயணச்சீட்டுக்கு என் தொலைபேசி எண்ணை பதிந்தேன், என் நண்பரின் பயணச்சீட்டுக்கு என் நண்பரின் தொலைபேசி எண்ணை பதிந்தேன் அதன் பிறகு பயணச்சீட்டு வந்து விட்டதா என சரிபார்க்க பிரயத்தனம், இரட்டை பணிச்சுமை பயணிகளுக்கு, எந்த அதி மேதாவி தந்த யோசனை இது?ஏன் இப்படி கடினமான போக்கை பயணச்சீட்டு வழங்குவதற்கு கடைபிடிக்கிறது சென்னை மெட்ரோ நிர்வாகம்?

நாளை வாட்ஸாப் சர்வர் முடங்கினாலோ விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டாலோ எத்தனை லட்சம் பயணியரின் தகவல்கள் விஷமிகளிடம் திருட்டுப் போகும்,யோசியுங்கள், எல்லா அரசுத்துறைகளிலும் தலைமை பதவியில் ஐ ஏஎஸ் இருப்பர் அவர்கள் இது போல வெளியே இறங்கி பயணம் செய்யுங்கள், சலாம் போடுபவர்களை தூர நிற்க வையுங்கள், உங்கள் பயணச்சீட்டை நீங்களே சென்று வாங்குங்கள் அப்போது தான் மக்கள் துயரம் தெரியும்.மெட்ரோ ரயிலுக்குள் யாரும் எதுவும் சாப்பிடக்கூடாது என பயணத்தின் போது அறிவித்தபடி இருக்கிறது,ஆனால் மனிக்யூர் செய்த நவீன பெண்டிர் வரும்போதே வாங்கி வந்த விலை உயர்ந்த துரித உணவை எந்த லஜ்ஜையுமின்றி பயணத்தின் போதே தின்கின்றனர்,

துபாய் மெட்ரோவில் ஒரு சுவிங்கம் கூட மெல்ல முடியாது, பயணச்சீட்டு பரிசோதகர் எப்படியோ கண்டறிந்து இறக்கி அழைத்துப் போய் கடும் அபராதம் விதித்து விடுவர். வாகன நிறுத்தங்களில் போதுமான அளவு வாகனங்கள் நிறுத்த இடம் இல்லை , இன்று மீனம்பாக்கம் மெட்ரோவின் காலை 10-30க்கு வாகன நிறுத்தத்தை பூட்டியவர்கள், வெளியே பார்க்கிங் ஃபுல் என்று எழுதிய அட்டையை வைத்திருந்தனர்,கூண்டுக்குள் பார்க்கிங் ஃபுல் என சொல்ல ஒரு சிப்பந்தி வேறு, ரீல்ஸ் பார்த்தபடி உள்ளார், அலைந்து திரிந்து எதிர் திசை நுழைவு வாயில் நிறுத்தம் போனால் அங்கும் வாகனம் நிறுத்த இடம் இல்லை,

இது போல பல குளறுபடிகள் உள்ளன, என் போன்ற எத்தனை சென்னை குடிமக்களின் தியாகம் சகிப்புத் தன்மையினால் விளைந்தது இந்த சென்னை மெட்ரோ , இந்த குறைகள் அவசியம் சரிசெய்யப்பட வேண்டும்.

கீதப்பிரியன் கார்த்திகேயன்

Related Posts