காமராசர்: சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற தினமின்று!!
தமிழக வரலாற்றில் 1954 இதே ஏப்ரல் 13 ஒரு முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. அன்று, தமிழ்ப்புத்தாண்டு தினத்தில், கர்மவீரர் காமராசர் சென்னை மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இந்த நாள், தமிழகத்தின் வளர்ச்சிக்கும், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் ஒரு பொற்காலத்தின் தொடக்கமாக அமைந்தது.இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராஜர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர் (King Maker), பெருந்தலைவர் என்றெல்லாம் புகழப்படுகிறார். காமராஜ் அரசியலில் விட்டுச் சென்ற நினைவலைகள் இன்றைய அரசியல் உலகில் பல தலைவர்களுக்கும் படிப்பினையாக கருதப்படுகிறது. காமராஜ் முதல்வர் பதவியில் இருந்தபோது அவர் நிறைவேற்றிய திட்டங்கள், எளிமையான அவரது வாழ்க்கை பல தளங்களில் பதிவாகியிருக்கின்றன.

பின்னணி
குமாரசாமி காமராசர், 1903 ஜூலை 15 அன்று விருதுநகரில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர். இளவயதிலேயே பள்ளிப்படிப்பைத் தொடர முடியாமல், குடும்ப வறுமையால் தன் மாமாவின் துணிக்கடையில் பணியாற்றினார். ஆனால், அவரது மனதில் தேசப்பற்றும், மக்கள் மீதான அக்கறையும் ஆழமாக வேரூன்றியிருந்தன. 1920ஆம் ஆண்டு, 16 வயதில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். பலமுறை சிறை சென்று, தன்னலமற்ற தொண்டு மூலம் மக்கள் மனங்களில் இடம்பெற்றார்.1952ல் திருவில்லிபுத்தூர் தொகுதியில் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காமராசர், காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவராக விளங்கினார். 1954இல், சென்னை மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் போட்டியில், இராஜாஜியின் ஆதரவாளரான சி.சுப்பிரமணியத்தை எதிர்த்து, சட்டமன்ற உறுப்பினர்களால் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, 1954 ஏப்ரல் 13 அன்று, தமிழ்ப்புத்தாண்டு தினத்தில், சென்னை மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றார். எவருடைய தலையீடுமின்றி தனது அமைச்சரவையைத் தேர்வு செய்தார்.
காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது சட்டமன்ற உறுப்பினராக இல்லை, மாறாக, ஸ்ரீவில்லிபுத்தூர் பாராளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்தார். ஆறு மாதங்களுக்குள் அவர் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மிக எளிதாக சட்டமேலவை உறுப்பினராவதற்கு அவருக்கு வாய்ப்பிருந்தது. ஆயினும், தேர்தலில் போட்டியிட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதையே அவர் விரும்பினார். எளிதில் வெற்றி பெறக்கூடிய சாதகமான பல சட்டப்பேரவைத் தொகுதிகள் அவருக்குப் பரிந்துரைக்கப்பட்டன. பலர் அவருக்காக சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவும் முன்வந்தனர். ஆனால் காமராஜர் அதை விரும்பவில்லை. மாநிலம் முழுவதற்குமான பிரதிநிதியாக, முதலமைச்சராக, இருக்கும் தான், மாநிலத்தின் எத்தொகுதியில் இருந்தும் போட்டியிட தயங்கக் கூடாது எனக் கருதினார். அப்போது வட ஆற்காடு மாவட்டத்தில் காலியாக இருந்த குடியாத்தம் தொகுதியில் போட்டியிட முடிவெடுத்தார். அத்தொகுதியில் காமராஜருக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே கே. கோதண்டராமன் என்ற வேட்பாளரை நிறுத்தியது. பெரியார் ‘பச்சைத் தமிழனுக்கு’ தனது ஆதரவை வெளிப்படையாக அறிவித்தார். அண்ணாதுரை தனது கட்சியின் திராவிட நாடு இதழில் காமராஜருக்கு ஆதரவாகக் கட்டுரைகள் பல எழுதினார். ஏகோபித்த ஆதரவு பெற்ற காமராஜர் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாகக் கருதப்பட்ட குடியாத்தம் தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்றார்.

படிப்பறிவில்லாத காமராஜர் எப்படிப் பாராள முடியும் எனப் பலரும் பரிகாசம் செய்த நிலையில் பதவி ஏற்ற அவர் தனது அனுபவம் மிக்க திறமையான நடவடிக்கைகளால் தான் ஒரு சிறந்த நிர்வாகி என்பதை நிரூபித்தார். அவருடைய நியாயமான, எளிமையான அணுகுமுறை கட்சியில் மட்டுமின்றி, ஆட்சியிலும் அவருக்கு நற்பெயரைப் பெற்றுத்தந்தது. சரியான முடிவுகளை விரைந்து எடுப்பதில் அவர் வல்லவராகத் திகழ்ந்தார். தன் தலைமையை விரும்பாதவர்களாயினும் கூட அவர்களது திறமை இந்த தேசத்திற்குப் பயன்படுமானால், அவர்களையும் அரவணைத்துச் செல்ல காமராஜர் ஒருபோதும் தயங்கியதில்லை. அவ்வகையில், முதலமைச்சர் பதவிக்கான உட்கட்சித் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி. சுப்பிரமணியத்தை மட்டுமின்றி, இராஜாஜியின் அமைச்சரவையில் அங்கம் வகித்த எம். பக்தவச்சலம், ஏ.பி. ஷெட்டி ஆகியோரையும் தன்னுடைய அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார்.தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பி. பரமேஸ்வரன் அவர்களை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சராக்கினார். அது தீண்டாமையை ஒழிப்பதற்கான காமராஜரின் ஒரு சிறந்த இராஜதந்திர நடவடிக்கையாக அமைந்ததோடு, தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்தில் அவருக்கு இருந்த அக்கறையையும் வெளிப்படுத்தியது. அது தமிழகம் முழுவதும் இருந்த தாழ்த்தப்பட்ட மக்களின் ஏகோபித்த ஆதரவை அவருக்குப் பெற்றுத்தந்தது.
கல்வி மறுமலர்ச்சி
காமராசரின் மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று, கல்வி மேம்பாட்டிற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள். “கல்விக்கண் திறந்தவர்” என்று புகழப்படும் காமராசர், தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தார். 1956இல் அறிமுகப்படுத்தப்பட்ட இலவச மதிய உணவுத் திட்டம், ஏழை மாணவர்களின் பள்ளி வருகையை அதிகரித்து, கல்வி பரவலாக்கத்திற்கு வழிவகுத்தது. இத்திட்டம், இந்தியாவிலேயே முன்மாதிரியாக அமைந்தது. வி ரிவாகச் சொல்வதானால் தமிழகத்தில் இருந்த 15,000 ஆயிரம் கிராமங்களில் 6000 கிராமங்களில் பள்ளிக்கூடங்களே இல்லாத நிலை இருந்தது. அதனால் 500க்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளியைத் திறக்க அவர் உத்தரவிட்டார். அதன்படி 1954-55 ஆண்டுகளில் 12,967 கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன. கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் தொடர்ந்து பல பள்ளிகளைத் திறப்பதற்குக் காமராஜரின் அரசங்கம் பெருமுயற்சிகளை மேற்கொண்டது. கல்வியை மேலும் பரவலாக்க முடிவு செய்த காமராஜரின் அரசாங்கம் 1962-ம் ஆண்டு 300க்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளியைத் திறக்க முடிவு செய்தது. அதன்படி, மேலும் 12267 பள்ளிகள் புதிதாகத் திறக்கப்பட்டன. அதன் விளைவாகப் பள்ளி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கைப் பெரிதும் உயர்ந்தது. காமராஜர் கண்ட கனவு நனவாகத் துவங்கியது. காமராஜர் ஆட்சி துவங்கிய 8 ஆண்டுகளில் பள்ளி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கைப் பல மடங்கு உயர்ந்தது.

அதுவரையில் எங்கெல்லாம் பள்ளிகள் திறக்கப்படவில்லையோ, அக்கிராமங்களிலெல்லாம் மத்திய அரசின் நிதியுதவியுடன் ஓராசிரியர் பள்ளிகளை ஏற்படுத்தினார். அதன் மூலம் வேலைவாய்ப்பற்ற படித்த கிராமப்புற இளைஞர்களுக்கு ஆசிரியராகும் வாய்ப்புக் கிடைத்தது. அங்கே கல்வியும் தழைக்கத் துவங்கியது. ஆரம்பக்கல்வி மட்டுமின்றி மேல்நிலைக் கல்வியை மேம்படுத்தவும் காமராஜர் அரசாங்கம் பாடுபட்டது. அதற்காக அமைக்கப்பட்ட இலட்சுமணசாமி முதலியார் குழுவின் பரிந்துரைகளை ஏற்று, 7 ஆண்டுகள் தொடக்கக் கல்வி, 4 ஆண்டுகள் மேல்நிலைக் கல்வி, உள்ளடக்கிய 11 ஆண்டுகள் பள்ளிக் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. கணிதமும், அறிவியலும், சமூக அறிவியலும் கட்டாயப் பாடங்களாக்கப்பட்டன. புதிதாகத் திறக்கப்பட்ட பள்ளிகளுக்கு பெருமளவில் ஆசிரியர்கள் தேவைப்பட்டதால், பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்களை உருவாக்கும் பொருட்டு மாநிலமெங்கும் 40 ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் திறக்கப்பட்டன.
எவ்வளவு ஏற்பாடுகள் செய்தாலும் ஏழ்மையில் உழன்றுகொண்டிருந்த ஏதுமற்ற ஏழை மாணவர்களைப் பள்ளிகளுக்கு வரவழைக்க இயலவில்லை. பசியில் வாடும் பாலகர்கள் படிப்பைப் பற்றி நினைக்கக்கூட இயலாதநிலை இருக்கிறது என்பதை உணர்ந்த காமராஜர் நெஞ்சம் பதறினார். ஏழை மாணவர்களின் வாழ்வை எப்படியேனும் உயர்த்தியே தீருவது என்று முடிவு செய்தார். ஏழைக் குழந்தைகளின் பசியினைப் போக்கி அவர்களுக்குக் கல்வியைப் புகட்டுவதற்காக, 1956-ம் ஆண்டு மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன் மூலம் தமிழகத்தில் மாபெரும் கல்விப் புரட்சிக்கு வித்திட்டார். ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வருவது பெரிதும் அதிகரித்தது. அனைத்து மாணவர்களும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் சாதிப்பாகுபாடுகளற்ற சமத்துவநிலை பள்ளிகளில் ஏற்பட்டது.
ஓலைக்குடிசைகளையே உறைவிடமாகக் கொண்டிருந்த ஏழை மாணவர்களுக்கு, உணவு தந்து கல்வி கற்க வகை செய்த காமராஜர், அவர்களுக்கு உடையும் கொடுக்க முடிவு செய்தார். 1960-ம் ஆண்டு பள்ளிகளில் சீருடை அறிமுகப்படுத்தப்பட்டு, இலவசமாக வழங்கப்பட்டது. அது மாணவர்களிடையே ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வைப் போக்கியது. காமராஜர் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதை ஒரு கடமையாக மட்டும் கருதாமல் அதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியமைத்தார். “அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல்… அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்ற மகாகவியின் வார்த்தைகளை நிஜமாக்கிக் காட்டுவதற்கான காமராஜரின் சீரிய முயற்சிகளுக்கு ஒட்டுமொத்த தமிழக மக்களும் ஒன்றிணைந்து ஆதரவளித்தனர். மாணவர்களுக்கு மதிய உணவு அளிப்பதிலும், சீருடைகள் வழங்குவதிலும் மக்களும் துணை நின்றனர். இயன்றவர்கள் பலரும் பணமாகவும், பொருளாகவும் வழங்கினர். கல்வி வளர்ச்சிக்கென மாவட்டம்தோரும் பள்ளி மேம்பாட்டு மாநாடுகள் நடத்தப்பட்டன. அம்மாநாடுகள் பொதுமக்களின் ஆர்வம் மிகுந்த பங்கேற்புடன் திருவிழாக்களைப் போல் நடந்தன. தமிழகத்தில் மக்கள் இயக்கமாக மலர்ந்த கல்வி வளர்ச்சிக்கு பொதுக் கல்வி இயக்குநராக காமராஜரால் நியமிக்கப்பட்ட நெ.து. சுந்தரவடிவேலுவும் பெரிதும் துணை நின்றார்.
மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்கள் நலன்காப்பதிலும் காமராஜர் பெரிதும் அக்கறை கொண்டிருந்தார். ஆசியாவிலேயே முதன்முறையாக ஓய்வூதியம், சேமநலநிதி மற்றும் காப்பீடு ஆகிய மூன்றும் இணைந்த பயன்களை காமராஜரின் அரசாங்கம் ஆசிரியர்களுக்கு வழங்கியது. ஆரம்பப் பள்ளிகளைப் போன்று மேல்நிலைப் பள்ளிகளும் முன்னேற்றம் பெற்றன. 1954-55-ல் 1031 ஆக இருந்த மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை, 1962-63-ல் 1820 ஆக உயர்ந்தது. மேல்நிலைக் கல்வி கற்ற மாணவர்கள் எண்ணிக்கையும் 3.82 இலட்சத்திலிருந்து 6.2 இலட்சமாக உயர்ந்தது. பள்ளிக்கல்வி மட்டுமின்றி கல்லூரிக் கல்வியை மேம்படுத்துவதிலும் காமராஜர் கவனம் செலுத்தினார். 1953-54 ஆண்டுகளில் 53 கல்லூரிகளும் அவற்றின் பயின்ற 39 ஆயிரம் மாணவர்களுமாக இருந்த நிலை, அடுத்த 9 ஆண்டுகளில் முன்னேற்றம் கண்டு 1962-63 ஆண்டுகளில் கல்லூரிகளின் எண்ணிக்கை 63 ஆகவும் அதில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 49 ஆயிரமாகவும் அதிகரித்தது. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆய்வுக் கூடங்களும், நூலகங்களும் துவங்கப்பட்டன. பள்ளி ஆசிரியர்களைப் போலவே கல்லூரி ஆசிரியர்களையும் பாதுகாத்தார் காமராஜர். 1962-ம் ஆண்டிலிருந்து கல்லூரி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டது.
உள்கட்டமைப்பு வளர்ச்சி
காமராசரின் ஆட்சியில், தமிழகத்தில் பல முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதாவது தமிழகத்தில் இருக்கும் மிக முக்கிய அணைகளில் மேட்டூர் அணை(1934) மற்றும் பாபநாச அணை(1944) ஆகியவை ஆங்கிலேயே காலத்தில் கட்டப்பட்டவை. இவற்றை தவிர “ கீழ் பவானி, காவிரி டெல்டா, ஆரணியாறு, வைகை நீர்த்தேக்கம், அமராவதி அணை, சாத்தனூர் அணை, பரம்பிக்குளம், நொய்யாறு ஆரணியாறு, கிருஷ்ணகிரி, ஆழியாறு, வீடூர் ” போன்ற அணைகள் காமராஜரின் ஆட்சிக் காலமான 1954 முதல் 1963 வரையிலான காலக்கட்டத்தில் கட்டப்பட்டவை. இவற்றை முதலமைச்சரான காமராஜர் தன் கைகளால் திறந்து வைத்தார். மேலும், அவரது காலக்கட்டத்தில் பல நீர் மின் திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன. இது தவிர தமிழ்நாடு மாநிலம் பிரிவதற்கு முன்பாக 1955 ஆம் ஆண்டில் கேரளாவின் மலம்புழாவில் காமராஜரால் கட்டப்பட்ட அணையால் பாலக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். 62 ஆண்டுகளாகியும் காமராஜர் கட்டிச் சென்ற அணைகள் கம்பீரமாக நிற்கின்றன, அதனால் தமிழகத்தில் பல பகுதிகளின் குடிநீர், விவசாயத் தேவை பூர்த்தியாகின்றது. ஆனால், காமராஜர் அவர்களுக்கு பின் ஆட்சியில் இருந்தவர்கள் பெரியளவில் அணைகள் ஏதும் கட்டவில்லை. மேலும் . சென்னை ஆவடியில் ராணுவ தளவாடத் தொழிற்சாலை, நெய்வேலி பழுப்பு நிலக்கரி தொழிற்சாலை, திருச்சி BHEL உள்ளிட்ட தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு, தமிழகத்தில் தொழில்புரட்சி உருவாக்கப்பட்டது.

காமராஜர் ஒரு இலட்சியவாதி மட்டுமல்ல அவர் ஒரு செயல் வீரரும் ஆவார். இந்திய தேசம் பருவ மழைகளையும், விவசாயப் பொருளாதாரத்தையும் சார்ந்தே இருக்கிறது என்பதை நன்கு உணர்ந்திருந்த அவர் விவசாயத்தை மேம்படுத்துவதிலும், அதன் மூலம் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் தீவிர கவனம் செலுத்தினார்.விவசாய முன்னேற்றத்தில், விவசாயத் தொழிலாளர்களின் பங்கு முக்கியமானது என்பதை உணர்ந்த காமராஜரின் அரசாங்கம், 1956-ம் ஆண்டு விவசாயக் குத்தகைதாரர்கள் சட்டத்தைக் கொண்டு வந்தது. அச்சட்டம் உழுபவரின் உரிமைகளை உறுதிப்படுத்தியது. 1962-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நில உட்சவரம்புச் சட்டத்தின் படி விவசாய நிலத்திற்கான உட்சவரம்பு நிர்ணயிக்கப் பட்டது. அச்சட்டம் அதிகப்படியான நிலம் வைத்திருந்த நிலச்சுவான்தார்களிடமிருந்து உட்சவரம்பிற்கு மேற்பட்ட நிலத்தை எடுத்து, அதை நிலமற்ற ஏழை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிப்பதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் அளித்தது.
காமராசர் 1963 அக்டோபர் 2 அன்று முதலமைச்சர் பதவியைத் துறந்து, காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக “காமராசர் திட்டத்தை” அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டத்தின் மூலம், மூத்த தலைவர்கள் பதவிகளைத் துறந்து கட்சிப் பணியில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார். பின்னர், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராகப் பணியாற்றிய அவர், லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி ஆகியோரை பிரதமராக உயர்த்தி, “கிங்மேக்கர்” என்ற புகழைப் பெற்றார். 1975 அக்டோபர் 2 அன்று காலமான காமராசர், 1976இல் பாரத ரத்னா விருது பெற்றார். சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மற்றும் பல நினைவிடங்கள் அவரது புகழை இன்றும் நிலைநிறுத்துகின்றன. அவரது எளிமை, நேர்மை, மற்றும் மக்கள் மீதான அக்கறை, இன்றும் தலைவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது. “கறைபடியாத கைகள்” என்று புகழப்பட்ட காமராசரின் ஆட்சி, தமிழக மக்களின் மனங்களில் என்றென்றும் நீடிக்கும்.


