32°C
விளம்பரம்
Advertisement

உலக சிட்டுக்குருவிகள் நாள்!

admin சேலம் Published: March 20, 2025 6 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



காக்கைக் குருவி எங்கள் சாதி என்றான் பாரதி. இன்று காக்கைகள் இருக்கின்றன, குருவிகள்..? இருக்கின்றன. ஆனால், மிகக் குறைந்த எண்ணிக்கையில். சிட்டுக்குருவிகள் நெல் வயல்களில் பூச்சிகளை உண்டு விவசாயத்துக்கு நன்மை செய்யும். சிட்டுக்குருவி, பெயருக்கு ஏற்றாற்போல் சிறிய உடலமைப்புடன் காணப்படும் பறவை இனம். முன்பு நகரம், கிராமம் என்ற பாகுபாடில்லாமல் எல்லா இடங்களிலும் காணப்பட்டன. தற்போது சிட்டு குருவி – இன்றைய இளம் தலைமுறையினருக்கு இவைகள் குறித்து எந்தளவு தெரியும் என்று தெரியவில்லை. நமது பழைய தமிழர் பண்பாட்டில் கூட்டு குடும்பங்களுக்கு முக்கியத்துவம் இருந்தது. ஒரே வீட்டில் 5 முதல் 10 சகோதரர்கள் வரை குடும்பமாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். அவர்கள் வாழ்வதற்காக விசாலமான வீடு இருக்கும். நல்ல காற்றோட்டத்துடன் கட்டப்பட்டிருந்த வீடுகளில் தாழ்வாரங்கள், பெரிய ஜன்னல் வைக்கப்பட்டிருக்கும். அதன் இடுக்குகள், தாழ்வாரத்தில் சிட்டு குருவிகள் கூடு கட்டி மனிதர்களோடு வாழ்ந்து வரும். வீடுகளில் சிட்டுக்குருவிகள் கூடுகட்டினால், அந்த வீடுகளில் செல்வம் கொழிக்கும் என்ற நம்பிக்கையும், மக்கள் மத்தியில் உண்டு. அதிலும் புதியதாக திருமணமானவர்கள் குடியிருக்கும் வீட்டில் சிட்டு குருவி கூடு கட்டினால், இந்த வீட்டில் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையும் இருந்தது. கூட்டு குடும்பத்தில் முதியவராக இருப்பவர் தினமும் காலையில் அரிசி, கோதுமை கேழ்வரகு உள்ளிட்ட உணவு தானியங்களை கொண்டுவந்தால், அதை பார்த்ததும் சிறகடித்து பறந்து வரும் சிட்டு குருவிகள் மகிழ்ச்சியாக உண்ணும்.

இப்படி மக்களோடு மக்களாக வாழ்ந்த சிட்டு குருவி இனம் தற்போது அடையாளம் தெரியாத வகையில் அழிந்து வருகிறது. அதன் அழிவுக்கு பல காரணங்களை பறவை ஆராய்ச்சியாளர்கள் முன்வைக்கிறார்கள். கடந்த 25 முதல் 50 ஆண்டுகளுக்கு முன் விசாலமாக கட்டப்பட்ட வீடுகள் பல இடிக்கப்பட்டு இன்றைய நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் கட்டப்படுவதால், சிட்டு குருவிகள் கூடு கட்ட இடமில்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பது ஒரு சாராரின் கருத்தாகவுள்ளது. பட்டணம், நகர பகுதியில் ஆங்காங்கே சுற்றி திரியும் புறாக்களுக்கு மக்கள் பூங்கா உள்ளிட்ட பகுதியில் தீனி போட்டு பராமரிக்கிறார்கள். புறாக்கள் பொதுவாக மரங்களில் வசிப்பதில்லை. சிட்டு குருவிகள் கட்டியுள்ள வீடுகள், கட்டிடத்தின் தாழ்வாரங்கள், இடுக்குகளை ஆக்கிரமித்து கொள்கிறது. இதனால் சிட்டு குருவிகள் நகர பகுதியில் வாழ முடியாமல் அதன் இனப்பெருக்கம் அழிந்துவிட்டது என்பது சிலரின் கருத்தாகவுள்ளது. சரி நகர பகுதியில் இந்த பிரச்னை உள்ளது உண்மை. ஆனால் கிராமங்களில் வாழ்ந்த குருவிகள் ஏன் காணாமல் போய்விட்டது.

இந்த கேள்விக்கும் ஆராய்ச்சியாளர்களிடம் பதில் உள்ளது. இது என்னவெனில் சமீப ஆண்டுகளாக ஒவ்வொரு மனிதரின் அறிவிக்கப்படாத வாழ்க்கை துணைபோல் மாறிவிட்டது செல்போன் ஆதிக்கம் தான். புற்றிச்சல் புற்றுகள்போல் போட்டி போட்டு செல்போன் கம்பெனிகள் உருவாகியுள்ளது. தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆங்காங்கே செல்போன் ரிசிவிங் கோபுரங்கள் அமைத்து வருகிறார்கள். அதிலிருந்து வெளியேறும் கதிர் வீச்சுகள் சிட்டு குருவி இனத்தின் அழிவுக்கு முக்கிய காரணமென்று அடித்து சொல்கிறார்கள். சிட்டுக்குருவிகள் விரும்பி உண்ணும் கம்பு, கேழ்வரகு, சோளம், திணை போன்ற சிறுதானியங்களின் பயன்பாடு குறைந்துவிட்டதும், நெல் பயிரிடுதலில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டதும் சில முக்கியக் காரணங்களாக கூறப்படுகிறது.

செல்போன் டவர்களின் பாதிப்புகளை விட இத்தகைய காரணங்களே சிட்டுக்குருவிகளின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.கடந்த 6 ஆண்டுகளில் 40க்கும் மேற்பட்ட நாடுகள் மார்ச் 20ம் தேதி உலக சிட்டு குருவி தினமாக அனுசரிப்பதுடன், குருவி இனத்தை பாதுகாக்க என்னென்ன வழிமுறைகள் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரமும் செய்து வருகிறது. இன்று உலகில் பல நாடுகளில் சிட்டு குருவி தினம் அனுசரிக்கப்படுகிறது.

அது சரி இந்த சிட்டுக் குருவிி தினம் உருவான கதை தெரியுமோ?

1950-களில் சீனாவில் ஆட்சிக்கு வந்த மாவோ `Four Pest Campaign’ என்ற முன்னெடுப்பைக் கையிலெடுத்தார். பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய நான்கு உயிர்களை முற்றிலுமாக அழித்தொழிக்க உத்தரவிட்டார். அந்தப் பட்டியலில் சிட்டுக்குருவியும் இருந்தது. பார்த்த இடமெல்லாம் சிட்டுக்குருவிகளை சுட்டு வீழ்த்தினர். அவை என்ன செய்தன? விலை நிலங்களில் இருக்கும் தானியங்களைச் சாப்பிட்டதால்தான் இவ்வளவு பெரிய தண்டனையா! ஆம். ஆனால், சீனாவுக்கு அவை செய்த நன்மைகள் அப்போது தெரியவில்லை. அவற்றை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவித்தனர். சிட்டுக்குருவி இனத்தின் முக்கால் பங்கு அழிந்துபோனது. அவற்றின் கூடுகளை அழிப்பது, முட்டைகளை உடைப்பது என மனிதன் செய்யக் கூடாத காரியங்கள் எல்லாம் அந்தச் சின்னப் பறவைகளுக்குச் செய்தனர். இரு வருடங்களுக்குப் பிறகு, சீனாவில் பயிர்களுக்கு நோய்த் தாக்குதல், பூச்சித் தாக்குதல் என விவசாயம் பாதிக்கப்பட்டுப் பெரும் இழப்பை சந்தித்தது. ஏன் இவ்வளவு பெரிய அழிவு என்று ஆராய்ந்து பார்க்கையில்தான் உண்மை புரியவந்தது. சிட்டுக்குருவிகள் உணவு தானியங்களை மட்டுமின்றிப் புழு, பூச்சிகள், வெட்டுக்கிளிகள் போன்ற விளைச்சலைப் பாதிக்கும் பூச்சியினங்களையும்தான் சாப்பிடுகின்றன என்பதை அப்போதுதான் சீன அரசு புரிந்துகொண்டது. சிட்டுக்குருவிகள் அழிந்துபோனதால் வெட்டுக்கிளிகள் அதிகரித்தன. அவை பயிர்களில் பெரும் சேதத்தை விளைவித்தன. விளைச்சல் பாதிக்க மக்களும் பசியால் வாடத்தொடங்கினர். பருவ மழையும் பெய்யாததால் சீனா பெரும் உயிர் இழப்பைச் சந்தித்தது. சுமார் ஒன்றரை கோடி மக்கள் இறந்தார்கள்.

யூ டிஹாங் என்ற அரசு அதிகாரி ஒருவர் சீனாவிலிருந்த ஓர் ஊருக்கு, பஞ்சம், பசி மற்றும் அதனால் ஏற்பட்ட இறப்பு விகிதத்தைக் கணக்கிடச் சென்றிருந்தபோது பார்த்ததை இப்படிக் குறிப்பிடுகிறார்,

“அந்த ஊரில் நூற்றுக்கணக்கான பிரேதங்கள் புதைக்கப்படாமலே சாலைகளில் போடப்பட்டிருந்தன. அந்த மக்களிடம் ஏனென்று கேட்டபோது அவற்றை நாய்கள் சாப்பிட்டுக்கொள்ளும், அவையாவது எங்களைப்போல் பசியால் சாகாமல் எங்கள் உடல்களைச் சாப்பிட்டுப் பசியாறிக்கொள்ளட்டும். அப்போதுதான் அதை நாங்கள் சாப்பிட முடியும் என்றனர். ஆனால், அந்த ஊரிலிருந்து நாய்களை மக்கள் எப்போதோ சாப்பிட்டுவிட்டனர்.’’

இவ்வளவு பெரிய அழிவை ஏற்படுத்தியது ஒரு பறவையின் அழிவு என்பதைப் பின்னர் தெளிவாகப் புரிந்துகொண்ட சீன அரசு கொல்லக்கூடிய பறவை, பூச்சியினங்கள் பட்டியலில் இருந்து சிட்டுக்குருவியின் பெயரை எடுத்தது. அதிலிருந்து சிட்டுக்குருவிகளைக் காப்பதில் சீனா முன்னோடியாக இருந்துவருகிறது. எந்த நாடு அழிக்க ஆணையிட்டுதோ அதே நாடு பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதை மீட்டெடுக்கப் பல்வேறு வகையில் முயன்றுவருகிறார்கள். சிட்டுக்குருவிகள் நமக்கு ஏன் தேவை என்பதை இந்த சம்பவம்தான் உலகுக்கு உணர்த்தியது.

சிட்டுக்குருவி தினத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தவர் நேச்சுர் ஃபார் எவர் சொஸைட்டி எனும் அமைப்பின் நிறுவனர் முகமது திலாவர். இவருடைய முயற்சியால் இன்றைக்கு டெல்லியின் மாநிலப் பறவையாக இருக்கிறது.

இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்

புதியதாக வீடு கட்ட மேல்கூரை மோல்டிங் போடும்போது குருவிகள் வசிக்க சிறியளவில் இடம் வசதி செய்ய வேண்டும். வீட்டு முற்றத்திலோ அல்லது தாழ்வாரத்திலோ எங்கு இடம் கிடைக்கிறதோ அங்கு குருவிகள் குடிப்பதற்காக அகலமான பாத்திரம், பிளேட், பக்கெட் போன்றவற்றில் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். முடிந்தால் வீட்டில் உள்ள அரிசி, கேழ்வரகு, கோதுமை உள்ளிட்ட தானியங்களை சிறியளவில் வைக்கவும்.* வீட்டில் இடம் கிடைக்கும் இடங்களில் காலி டப்பாக்கள் வைப்பதும் நல்லது. அதில் கூடு கட்டும் குருவிகள் முட்டையிட்டு இன பெருக்கம் செய்ய உதவும்.

அடிசினல் ரிப்போர்ட்:

சென்னை போன்ற நகரப் ​பகு​தி​களில் சிட்டுக்​குருவிகளை மீண்​டும் கொண்டு வந்து, அவற்றின் பெருக்​கத்தை அதிகரிக்​கும் நோக்​கில் வடசென்னையை சேர்ந்த கணேசன் – சாந்​தினி தம்ப​தியர் 2014-ம் ஆண்டு ‘கூடு​கள்’ என்ற அறக்​கட்​டளையை தொடங்கி நடத்தி வருகின்​றனர். இவர்கள் குறித்து பிரதமர் மோடி ஒரு மன் கீ பாத்தில் பாராட்டு தெரி​வித்தார். அவர்களின் பணி குறித்து, அறக்​கட்​டளை​யின் இணை நிறு​வனர் சாந்​தினி, ‘ஆந்தை ரிப்போர்ட்டர் ’ -ரிடம் கூறிய​தாவது:

சிட்டுக்​குருவி இனத்தை பெருக்க வேண்​டும் என்ற நோக்​கில் ‘கூடு​கள்’ அறக்​கட்​டளையை தொடங்​கினோம். இதை அடுத்த கட்டத்​துக்கு கொண்டு செல்​வதற்​காக, பள்ளி குழந்தைகளை ஈடுபடுத்தி உள்ளோம். அந்த வகையில், பள்ளி குழந்தை​களுக்கு கூடு செய்ய கற்றுக்கொடுத்து, அவர்கள் மூலமாக, இதுவரை 10 ஆயிரம் சிட்டுக்​குருவி கூடுகள் தயாரித்​துள்ளோம். இதை மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம்.வடசென்னை​யில் பல்வேறு பகுதி​களுக்​கும் சென்று நாங்களே இவற்றை பொருத்தி, சிட்டுக்​குரு​வி​யின் செயல்​பாடுகளை கண் காணித்து வருகிறோம். இதனால், வடசென்னை பகுதி​யில் சிட்டுக்​குருவி​களின் எண்ணிக்கை அதிகரித்​து உள்ளது. சென்னை​யில் பல்வேறு பள்ளி​களும் இதில் ஆர்வம் காட்டு​கின்றன. தங்களது மாணவர்​களுக்​கும் சிட்டுக்​குருவி கூடு கற்றுத்​தரு​மாறு எங்களுக்கு அழைப்பு விடுக்​கின்​றனர். தமிழகம் மட்டுமின்றி, புதுச்​சேரி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்​களுக்​கும் இந்த கூடுகளை வழங்கி வருகிறோம்.ஒரு லட்சம் கூடுகளை தயாரித்து, சிட்டுக்​குருவி இனத்தை மேலும் பெருக்குவதுதான் எங்கள் அடுத்த இலக்கு. அதற்​கேற்ப, பள்ளி மாணவர்கள் மூலம் மக்களுக்கு விழிப்பு​ணர்​வும் ஏற்படுத்தி வருகிறோம். இந்த சூழலில், மன​தின்குரல் நிகழ்ச்​சி​யில் பிரதமர் எங்களை குறிப்​பிட்டு பாராட்​டி​யிருப்பது மகிழ்ச்​சியாக உள்​ளது. எங்​களது பணிக்கு அங்​கீகாரம் தரு​வ​தாக​வும் அமைந்​துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நிலவளம் ரெங்கராஜன்

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்