32°C
விளம்பரம்
Advertisement

பொய்யாகிப் போகும் ஊடகம்!

admin சேலம் Published: March 20, 2025 2 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



முன்பு நாங்களெல்லாம் பத்திரிகைகளில் பணியாற்றியபோது, ஒரு செய்தியை அச்சுக்கு அனுப்புவதற்கு முன்பு, அதன் உண்மைத் தன்மை, நம்பகத் தன்மை, சொல்பவர்கள் யார், அவர்கள் அதைச் சொல்வதன் நோக்கம் என்ன, ஒருவேளை அவர்கள் தங்கள் சுயநலத்திற்காக நமது ஊடகத்தைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்களா… என்பன போன்ற பல்வேறு விஷயங்களையும் ஒருமுறைக்கு இருமுறை சரி பார்த்த பிறகுதான் அச்சுக்கே அனுப்புவோம். சிக்கலான விஷயங்களென்றால் ஆதாரங்கள் கைக்கு வராமல், பிரசுரிக்கவே மாட்டோம். ‘சென்னையில் மழை’ என்றால் கூட அது பத்திரிகைகளில் செய்தியாக வந்திருந்தால்தான் சென்னைவாசிகளே நம்புவார்கள் என்னும் அளவுக்கு அன்றைய அச்சு ஊடகங்களின்மேல் மக்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள்; ஊடகங்களும் தங்களுக்கான சமூகப் பொறுப்பை முழுமையாக உணர்ந்தே செயல்பட்டன.

ஆனால், இன்றைய நிலை என்ன? காட்சி ஊடகங்கள் குறிப்பாக சமூக ஊடகங்கள் ஆளுமை செய்யும் இந்தக் காலத்தில் எல்லாம் தலைகீழாகிவிட்டன. தொலைக்காட்சிகளில் வெளியாகும் விவாத நிகழ்ச்சிகளில் பல நம்மை அதிர வைக்கின்றன. தற்செயலாக நேற்றொரு விவாத நிகழ்ச்சியைப் பார்த்தேன். வெளிப்படையான கட்சி அடையாளங்களோடு வருவோர் பற்றிப் பிரச்னையில்லை. எந்தெந்தக் கட்சிக்காரர் எந்தெந்த அளவுக்கு உண்மை பேசுவார் என்பதெல்லாம் நாம் அறிந்ததுதான். ஆனால், ‘அரசியல் விமர்சகர்’ என்கிற முகமூடி போட்டுக் கொண்டு வருவோரில் பலர், எந்தெந்தக் கட்சிகளின் பின்னால் ஒளிந்து நின்று பேசுகிறார்கள் என்பதும் நாம் அறிந்ததுதான்.

Since Russia’s expansive influence operation during the 2016 election, Americans’ usage of social media has only increased — and drastically so, as a result of the pandemic.

நாம் அறிவோம் என்பதை அவர்களும் அறிவார்கள் என்றாலும் இப்படியெல்லாம் ஒளிந்து கொண்டு பேசுவதற்கு அவர்கள் கொஞ்சமும் கூச்சப்படுவதேயில்லை. அதுமட்டுமல்லாமல், சகட்டுமேனிக்குப் பொய்களாக அவிழ்த்து விடுவதுதான் பேரதிர்ச்சி. அவற்றுக்குப் பிறர் ஆதாரம் கேட்டால், ‘எல்லாம் பொதுவெளியில் இருக்கின்றன. அவற்றையெல்லாம் படிக்காமல் நீங்கள் எதற்கு விவாதத்திற்கு வருகிறீர்கள்?’ என்று எதிராளியிடம் கேட்டு, தங்களுடைய பச்சைப் பொய்களையும் உண்மையென நிரூபிக்கும் அசிங்கமான முயற்சிகளை என்னவென்று சொல்வது? இப்படிப்பட்ட பொய்யர்களையும் நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டிய கட்டாயம் இன்றைய ஊடகங்களுக்கு ஏன் வந்தது?

‘இந்தியன் எக்ஸ்பிரஸ் இல்லையென்றால், இந்தியா இருண்டு போயிருக்கும்’ என்று தன்னைதானே விளம்பரப்படுத்திக் கொள்கிற அளவுக்குச் சமூக அக்கறையுடன் செய்திகளை வெளியிட்டு அதிர வைத்த ராம்நாத் கோயங்கா காலத்து இந்தியன் எக்ஸ்பிரஸின் கம்பீரம் எங்கே? போஃபர்ஸ் பீரங்கி ஊழலை பூகம்பம்போல் வெளிக் கொணர்ந்து, ராஜிவ் காந்தி அரசை வீழ்த்திய அன்றைய ‘தி ஹிந்து’ நாளிதழின் துணிச்சல் எங்கே? எங்கே? ஊடகங்கள் மெளனமாகிவிட்டால், சர்வாதிகாரத்தின் கூச்சல் நம் காதுகளைச் செவிடாக்கிவிடுமே என்பதுதான் நமது கவலை.

செ. இளங்கோவன்

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்