கோச்சடையான் – அரைவேக்காடுகளின் அட்டூழியம்…! By தமிழ் ஸ்டுடியோ அருண்
வியாபாரத்திற்கு நான் எதிரானவன் அல்ல. வியாபாரம் என்பது ஒருவகையான வாழ்தல் முறை. அதனை குறைத்து மதிப்பிடுதலோ அல்லது, வியாபாரமே தேவையற்றதோ என்று யாருமே சொல்ல முடியாது. ஆனால் வியாபாரத்தில் கொஞ்சமாவது ஒரு நேர்த்தியும், நியாயமும் இருக்க வேண்டும் என்பதையே நான் தொடர்ந்து வலியுறுத்துகிறேன்.அதுவும் முதலீட்டைக் கோரும் கலை சினிமா என்பதால், இதில் கொஞ்சமாவது முதலீடு திரும்பி வர வேண்டிய அவசியம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. பிரச்சனையே, எல்லா கலைகளுமே முதலீட்டைக் கோரும் கலைதான். ஆனால் சினிமா மட்டுமே சீரழிந்துப் போனதற்கு காரணம், அதன் நேர்த்தியற்ற, நேர்மையற்ற வியாபார நோக்கம்தான். திறமையற்ற ஒருவரால், வேறெந்த துறையிலும், கோடிக்கணக்கில் சம்பாதிக்க முடியாது. சினிமாவில் அது சாத்தியப்படுகிறது.

கோச்சடையான் திரைப்படம் பார்த்துவிட்டு, அது சார்ந்த விமர்சனங்களை படித்துப் பார்த்தேன். எல்லா விமர்சனங்களும், தலைவரின் அருமை பெருமைகளையே பறைசாற்றுகிறது. தலைவரின் குரலுக்கு வயசாகவில்லை, தலைவரின் ஸ்டைல் அற்புதம், படம் பரபரப்பாக, விறுவிறுப்பாக நகர்கிறது. இதை தாண்டி, இந்த படத்தை வேறொரு கோணத்தில் அலசிய எழுத்துகளை பார்க்க முடியவில்லை. தோல்பாவை கூத்தில் வரும், பொம்மைகள் போலவே இந்த படத்தில் எல்லா கதாபாத்திரங்களும் அசைகிறது. தோல்பாவை கூத்தின் நவீன வடிவம்தான், இந்த படம் என்று நினைக்கிறேன். படம் பேண்டசி படமென்றாலும், குறைந்தபட்ச வரலாற்று அறிவையாவது இந்த படம் கோரி நிற்கிறது. ஆனால் கொடுக்கத்தான் யாருமில்லை. படம் எந்த காலக்கட்டத்தை பேசுகிறது? இட்லியும், நீள்வடிவ கண்ணாடி மேசையும், தோலினால் செய்யப்பட்ட செருப்புகளும், நவீன யுகத்தில் பெண்கள் அணியும் உடையும், இந்தியாவில், குறிப்பாக தமிழக நிலப்பரப்புகளில் தோன்றியது எப்போது?
இதையெல்லாம் கூட பேண்டசி என்று மன்னித்துவிட்டால் விடலாம், ஆனால் செண்டரிங் அமைத்து கட்டட வேலை மேற்கொள்ளும் வளர்ச்சி தமிழ்நாட்டில் எப்போது தோன்றியது? மலையில் இருந்து ஒரு அருவி உற்பத்தியாகவேண்டும் என்றால், அந்த மலையின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும்? இதையெல்லாம் படித்துவிட்டு, வெகுசாதாரண விஷயம் என்று நீங்கள் நகர்ந்துவிடலாம். ஆனால், மூன்றாம்தர, நான்காம்தர அமெரிக்க மசாலாப் படங்களில் கூட இப்படி தவறுகள் நடக்காது. அதன் பெயர்தான் நேர்த்தி. இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பேண்டசி படமாகத்தான் அவதார் வெளிவந்தது. அந்தப் படம் இதை விட பெரிய வியாபார கேந்திரத்தை நிறுவியது. ஆனால் அவதார் படம் கொடுத்த, ஒரு சின்ன உள்ளார்ந்த உணர்வையாவது இந்த படம் கொடுத்ததா? அவதார் படத்தில் இது மாதிரி ஒரு சின்ன வரலாற்று, அல்லது நிலவியல் தவறை சுட்டிக்காட்ட முடியுமா?
ஒரு நாட்டின் தளபதி, எப்போதும் பரட்டை தலையுடன் திரிகிறார். தலைக்கு மேல் பாகை அணிவதோ, அல்லது வீரவாகை சூட்டிக்கொண்டிருப்பதோ, அரச தளபதிகளுக்கு உரியது அல்லவா? சிற்றரசு காலத்தில், படத்தில் கிறித்தவர்களும், இஸ்லாமியர்களும் வருகிறார்கள். இந்தியாவில், இவர்களின் வருகை எப்போது நடந்தது? படத்தின் திரைக்கதை ரவிக்குமாருடயது என்பதை தெளிவாக ஒரு காட்சியில் தெரிந்துக் கொள்ளலாம். கோச்சடையான் ரஜினி, தேசவிரோத குற்றம் சுமத்தப்பட்டு, மரணதண்டனை நிறைவேற்றுவதற்காக கொண்டு செல்லப்படும்போது, பின்னனியில் ஒருப்பாடல் வருகிறது, தவிர ரஜினி சுயகழிவிரக்கத்தை ஏகத்துக்கும் தூண்டுவிதமாக வசனம் பேசிக்கொண்டு செல்கிறார். முத்துப் படத்தில், வேலைக்கார ரஜினியை, அவரது எஜமானர் சரத்பாபு வெளியேற்றும்போது, பின்னணியில் ஒலிக்கும் அதே வகையிலான பாடல் இது. அரசக் காலத்து நாயகன், போர் புரிந்து எதிரிகளை துவம்சம் செய்யும் வீரன் என்றாலும், சுயக்கழிவிரக்கத்தை எதிர்நோக்கும் கோழைதான் தமிழர்களுக்கு நினைவில் வருவார்கள் போல.
ரஜினி வாழும்போது அவரது மார்க்கெட்டிங் எப்படி வீழ்ந்துவிடாமல் பார்த்துக்கொள்கிரார்களோ, அப்படியே இன்னமும் நூறு ஆண்டுகள் கழித்து, அவர் இல்லாத சூழலிலும், ரஜினியின் பெயர் சொல்லி சம்பாதிக்க மட்டுமே இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பார்வையாளனுக்கு ஒரு பரவச நிலையை ஏற்படுத்துவதை காட்டிலும், கதைக்கு தேவையான நியாத்தை செய்வதைக் காட்டிலும், தந்தையை வைத்து அவரது கோடிக்கணக்கான வணிக கேந்திரத்தை பயன்படுத்துவதில்தான் அக்கறை செலுத்தியிருக்கிறார்கள்.
இது எல்லாவற்றையும் விட கொடுமையான விஷயம், படத்தில் ரகுமான் இசை அத்தனை சிறப்பாக இருக்கிறது, அவர்தான் படத்தின் இரண்டாவது ஹீரோ என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பது. படத்தில் மிஞ்சி இருப்பது வெறும் இரைச்சல் மட்டுமே, இடைவேளைக்கு முன்னர் ரஜினி பேசும் முக்கியமான வசனத்தை கேட்கவிடாமல், இசை திமிறி நிற்கிறது. கோச்சடையான் ஆடும் ருத்ரதாண்டவத்தில் இசைக்கப்பட்டிருக்கும் பின்னணி இசை, அந்த நடனத்தின் மீதான மதிப்பையே குறைத்துவிடுகிறது. ரகுமான் உடனடியாக, இளையராஜாவிடம், பின்னணி இசைப் பற்றி ஒரு வகுப்பெடுக்க சொல்லி கேட்டுக்கொண்டு, தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையேல் காலத்திற்கும் தமிழ்சினிமா ரகுமானை மன்னிக்காது.
விறுவிறுப்பாக, பரபரப்பாக இருக்கிறது என்பதற்காக மட்டும் ஒரு படைப்பைக் கொண்டாடுவது, எந்த அடிப்படையும் இல்லாமல், தலைவர் என்கிற ஒற்றை சொல்லைப் பிடித்துக்கொண்டு, அவரது குரலுக்காகவும், ஸ்டைலுக்காகவும் படத்தை கொண்டாடுவது, இதெல்லாம் நல்ல ஆரோக்கியமான சமூகத்திற்கு அடையாளமல்ல. இதற்கு பெயர் சினிமாவே அல்ல. ஒரு கலைவடிவத்தை அதன் வணிகத் தன்மைக்காக இத்தனை மோசமாக சிதைக்கும் ஒரு சமூகம், அதற்கான எதிர்விளைவுகளை சந்தித்தே தீரும்.
தமிழ் ஸ்டுடியோ அருண்


