ஆம்வே நிறுவனத்தின் இந்தியத் தலைவர் ஆந்திராவில் கைது!
உலக அளவில் பல்வேறு பொருட்களை மணிச்செயின் திட்டம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் முறையில் ‘ஆம்வே’ நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் இந்தியாவிலும் பொருட்களை ஏஜெண்டுகள் மூலம் விற்பனை செய்து வருகிறது.இதனிடையே ஆம்வே நிறுவனத்தின் வர்த்தகத் தொடர்புகள் வாயிலாக, தவறான முறையில் பண சுழற்சி செய்து வந்ததையடுத்து, பரிசுத் தொகை சீட்டுகள் மற்றும் பண பரிவர்த்தனை (தடுப்பு) சட்டத்தின் கீழ் அந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான வில்லியம் எஸ் பிங்க்னி-யை ஆந்திர மாநில போலீசார் குர்கான் நகரில் நேற்று கைது செய்தனர்.இதேபோன்ற முறைகேடுகள் தொடர்பாக கடந்த ஆண்டு கேரள போலீசாரும் இவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆம்வே நிறுவனம் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் உணவு பொருள், மருந்துகள், வீட்டு உபயோக பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து, நேரடியாக மார்க்கெட்டிங் முறையில் விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் லாபத்தை சங்கிலி தொடர் என்ற முறையில் மோசடி செய்ததாக போலீசாருக்கு அவ்வப்போது ஏராளமான புகார்கள் வருகின்றன.இதனையடுத்து போன் ஆண்டு கோழிக்கோடு, கண்ணூர், திருச்சூர் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் உள்ள ஆம்வே இந்தியா நிறுவன அலுவலகங்களிலும், குடோன்களிலும் கேரள போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் செயின் லிங்க் முறையில் பலரை ஏமாற்றி மோசடி செய்தது தெரிய வந்தது. குடோன்களில் இருந்து ரூ.2.4 கோடி மதிப்புள்ள பொருட்களை கேரள குற்றப் பிரிவு போலீசார் கைப்பற்றி இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த ஆம்வே நிறுவன கேரள தலைவர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டதுடன் ஆம்வே இந்தியா நிறுவன நிர்வாக இயக்குனர் அமெரிக்காவை சேர்ந்த வில்லியம் ஸ்காட் பிங்னி, இயக்குனர்கள் சஞ்சய் மல்கோத்ரா, அன்சு புத்ராஜ் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
இதற்கிடையில், கேரள உயர் நீதிமன்றத்தில் 3 பேரும் முன்ஜாமீன் பெற்ற நிலையில் இந்நிறுவனத்தின் வர்த்தகத் தொடர்புகள் வாயிலாக, தவறான முறையில் பண சுழற்சி செய்து வந்ததையடுத்து, பரிசுத் தொகை சீட்டுகள் மற்றும் பண பரிவர்த்தனை (தடுப்பு) சட்டத்தின் கீழ் அந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான வில்லியம் எஸ் பிங்க்னி-யை ஆந்திர மாநில போலீசார் குர்கான் நகரில் நேற்று கைது செய்தனர்.ஆந்திராவின் கர்நூல் மாவட்டத்தில் இவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கர்நூல் மாவட்ட கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்படுகிறார்.


