மோடி பதவி ஏற்பு விழாவில் ராஜபக்சேவா?:வைகோ,அன்புமணி கடும் எதிர்ப்பு

மோடி பதவி ஏற்பு விழாவில் ராஜபக்சேவா?:வைகோ,அன்புமணி கடும் எதிர்ப்பு

”எங்கள் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழ் மக்களை ஈவு இரக்கம் இன்றி, வதை செய்து கொன்று குவித்த ராஜபக்சே, டெல்லி பதவி ஏற்பு விழாவுக்கு வர அனுமதிக்கப்பட்டால், அந்த நிகழ்ச்சி தமிழ் இன மக்களுக்கு துக்கத்திற்கும், வேதனைக்கும் உரிய நிகழ்ச்சியாகவே அமையும்.எனவே, தமிழகத்திலும், தரணியெங்கும் வாழும் தமிழ் இன மக்களின் மனதில் சோகத்தை மூட்டி விட்டு, ராஜபக்சே கூட்டம் கும்மாளம் போடுவதற்கு வாய்ப்பாக, இலங்கை அதிபரை பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க, அனுமதிக்க வேண்டாம்” என்று வைகோ கேட்டுக் கொண்டுள்ளார். இது போல் அன்புமணி ராமதாஸும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளராம்.
vaiko-
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றி பெற்று, நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பு ஏற்க இருக்கின்ற விழா, இந்திய அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாக, டெல்லியில் நடைபெற இருக்கிறது.தாய்த் தமிழகத்தின் வாழ்வாதாரங்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் மன்னிக்க முடியாத துரோகம் செய்த காங்கிரஸ் கட்சி மீள முடியாத படுதோல்வியைச் சந்தித்தது.தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை மக்கள் முற்றாக உதறி எறிந்து உள்ளனர். இலங்கை அரசு லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து இனப்படுகொலை நடத்த, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இந்தியாவின் முப்படைகளையும் பயன்படுத்தி, ஆயுதங்களைக் கொடுத்து, தமிழ் இனப்படுகொலைக்கு முழுக்காரணம் ஆயிற்று.

தமிழக மீனவர்கள் 578 பேருக்கு மேல் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டனர். எனவே, இலங்கை அரசுக்கு எதிராக, தாய்த் தமிழகத்திலும், உலகெங்கிலும் உள்ள கோடானுகோடித் தமிழர்கள் நெஞ்சில் ஆறாத ரணம் ஏற்பட்டு உள்ளது.இந்த சூழ்நிலையில், நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவி ஏற்கும் விழாவிற்கு, இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், ராஜபக்சே கலந்து கொள்ள இருப்பதாகவும் வந்த தகவல் பேரிடியாக தாக்குகிறது.

லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் ரத்தக்கறை படிந்த கரங்களோடு, இந்திய நாட்டுக்குள் ராஜபக்சே நுழைவதை எந்த விதத்திலும் தமிழர்களால் சகித்துக்கொள்ள இயலாது. ராஜீய சம்பிரதாயங்கள் என்பதெல்லாம் கவைக்கு உதவாதவை. தங்கள் நாட்டு குடிமக்கள், இன்னொரு நாட்டு ராணுவத்தால் கொல்லப்பட்டால், உடனே அந்த நாட்டுடன் ராஜீய உறவுகளை, பாதிக்கப்பட்ட நாடு துண்டித்துக்கொள்கிறது.எனவே, சார்க் நாடுகளுக்கு அழைப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. 1998&99ம் ஆண்டுகளில் வாஜ்பாய் அரசு பதவி பிரமாணம் செய்துகொண்டபோது, 2004, 09 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவி பிரமாணம் செய்துகொண்டபோதும் இலங்கை அதிபர் அழைக்கப்படவில்லை என்பதை, தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன்.

எங்கள் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழ் மக்களை ஈவு இரக்கம் இன்றி, வதை செய்து கொன்று குவித்த ராஜபக்சே, டெல்லி பதவி ஏற்பு விழாவுக்கு வர அனுமதிக்கப்பட்டால், அந்த நிகழ்ச்சி தமிழ் இன மக்களுக்கு துக்கத்திற்கும், வேதனைக்கும் உரிய நிகழ்ச்சியாகவே அமையும்.எனவே, தமிழகத்திலும், தரணியெங்கும் வாழும் தமிழ் இன மக்களின் மனதில் சோகத்தை மூட்டி விட்டு, ராஜபக்சே கூட்டம் கும்மாளம் போடுவதற்கு வாய்ப்பாக, இலங்கை அதிபரை பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க, அனுமதிக்க வேண்டாம் என்று, தாங்க இயலாத மனவேதனையுடன், பிரதமர் ஆகப்போகின்ற நரேந்திர மோடியிடமும், பாரதீய ஜனதா கட்சி தலைவர் ராஜ்நாத் சிங்கிடமும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களையும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Posts