மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் வாகை சூடிய 60 வயது பெண் அழகி! -முழு விபரம்!
அர்ஜென்டினாவில் உள்ள பியூனஸ் அயர்ஸில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டியில், 18 வயதிலிருந்து 73 வயது வரை உள்ள பெண்கள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில், Alejandra Marisa Rodriguez என்ற 60 வயதான வழக்கறிஞர் வெற்றி வாகை சூடினார். அழகிப்போட்டி என்பது இளம்பெண்களுக்காக மட்டுமே என்ற கருத்தை மாற்றி, 60 வயது பெண் வெற்றி பெற்றுள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சர்வதேச அளவில் ஆண் அழகன் போட்டிகள், அழகிப் போட்டிகள் ஏகப்பட்ட பட்டங்களின் பெயரில் நடைபெற்று வருகிறது. இதில் பல லட்சக்கணக்கில் பரிசுகள் வழங்கப்படுவதன் மாடல் உலகில் பெரும் கவனமும் பெறுவார்கள் எனலாம். உதாரணத்திற்கு இந்தியாவில் இருந்து ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வாகி பாலிவுட்டிலும் சரி, உலகம் முழுவதும் சரி தற்போது வரை ஒரு பெரிய நட்சத்திரமாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அதே சமயம் பெரும்பாலும் இதுபோன்ற போட்டிகளில் இளைஞர்களைதான் முன்னிலைப்படுத்தும். அதிலும் அழகிப் போட்டிகள் என்றாலே இளம்பெண்கள்தான் இடம்பெறுவார்கள் என கண்ணை மூடிக்கொண்டு பலரும் சொல்லிவிடுவார்கள். அழகிப் போட்டிகளில் 30 வயதை தாண்டியவர்களுக்கு இடமே இல்லை என்பதுதான் பொதுப்புத்தியில் பதிவாகி உள்ளது. இதை மறுக்கவும் முடியாது.
இந்நிலையில் அர்ஜென்டினாவைச் சேர்ந்த அலெஜான்ட்ரா மரிசா ரோட்ரிக்ஸ் என்ற பெண் தனது 60-வது வயதில் ‘மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ்’ பட்டம் வென்றுள்ளார். அர்ஜென்டினாவில் உள்ள ஒரு மாகாணம்தான் பியூனஸ் அயர்ஸ். இந்த மாகாணத்துக்கான ‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டியில்தான் அதிக வயதில் வென்றுள்ளார் இவர்.

பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தின் தலைநகரான லா பிளாட்டா நகரைச் சேர்ந்தவர் அலெஜான்ட்ரா மரிசா ரோட்ரிக்ஸ். தற்போது 60 வயதாகும் இவர், வழக்கறிஞராகவும், பத்திரிகையாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நடந்த பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தில் நடந்த ‘மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ்’ போட்டியில் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
இதன் மூலம் அதிக வயதில் அழகி பட்டம் வென்ற முதல் பெண்மணி என்ற சாதனையை படைத்து வெற்றி என்பது பொதுவெளியில் வயது, அழகு குறித்து நிலவும் அத்தனை கோட்பாடுகளையும் சுக்குநூறாக உடைத்தெறிந்துள்ளது எனலாம். பட்டம் வென்றது குறித்து அலெஜாண்ட் கூறுகையில்,”அழகுப் போட்டிகளில் வயது முக்கியத்துவம் பெறாத இந்த புதிய முன்னுதாரணத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில் எனக்கு பெரு மகிழ்ச்சி, ஏனென்றால் பெண்கள் உடல் சார்ந்த அழகு மட்டுமல்ல, மதிப்புகளின் முக்கியத்துவம் பெற வேண்டும் என்பதை நாங்கள் உரக்கக் கூறுகிறோம்” என்றார்.


