நிலவை ஆய்வு செய்ய ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் நிலவில் மோதியது!.
ரஷ்யாவின் விண்வெளி முகமையான ராஸ்காமோஸ், லூனா-25 என்ற விண்கலத்தை சோயுஸ் 2.1பி ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது. இது இந்தியாவின் சந்திராயன்-3 விண்கலத்துக்கு முன்னதாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் என்று சொல்லப்பட்டது.ஆனால் லூனா-25 விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க இருந்த நிலையில், கடைசி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக ரஷ்யா அறிவித்தது. கோளாறை சரி செய்து வருவதாகவும் ரஷ்யா கூறியது.

இந்நிலையில், ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் நிலவில் மோதியது உறுதி செய்யப்பட்டுள்ளது. லூனா 25- விண்கலத்துடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த ரஷ்ய விஞ்ஞானிகள் முயற்சித்த நிலையில் திட்டம் தோல்வி அடைந்தது.
1976-ம் ஆண்டு ரஷ்யாவை உள்ளடக்கிய சோவியத் யூனியன் சார்பில் நிலவுக்கு விண்கலம் அனுப்பப்பட்டது. அதன் பிறகு 47 ஆண்டுகள் கழித்து ரஷ்யா சார்பில் முதல் முறையாக நிலவுக்கு விண்கலம் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.


