எனக்கொரு கவலை இல்லே!

எனக்கொரு கவலை இல்லே!

ன்னுடைய சில நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மிக உயர்ந்த இடத்தில் வைத்திருப்பவர்களிடம் சில நேரங்களில் மரியாதை நிமித்தமாக காலில் விழுந்துவிடுவார்கள். இன்னும் சிலர் திட்டமிட்டே செய்வார்கள். இரண்டையும் நான் புரிந்து கொள்கிறேன். ஒன்று உளவியல் தேவை, இன்னொன்று பொருளியல் / அதிகாரத் தேவை. ஒரு பெட்டிக்கடைக்குப் போய் பத்து ரூபாய்க்கு வாழைப் பழம் வாங்கித் தின்பதைப் போன்றதுதான் இது. ஆகையால் ரஜினி யோகி காலில் விழுந்ததை வைத்து முற்போக்காளர்களும் ரசிகர்களும் கொந்தளித்து ஏன் நேரத்தை வீணடிக்கிறார்கள் எனப் புரியவில்லை. அவர் உடல், இன்னொருவர் கால், அவர் காலில் பணிகிறார். அதை ஏன் குறியீடாகப் பார்த்து அர்த்தப்படுத்தி மனம் நோக வேண்டும்? ஒருவேளை இந்த செயலை நீங்கள் பார்க்கும் விதமாக காணொளி, புகைப்படம் கிடைக்கவில்லை எனில் அது குறியீடாகாதா? இது பின்நவீன ஊடக கலாச்சாரத்தின் சாபக்கேடு.

யோகி அடுத்த பிரதமர் என அறியப்படுகிறவர். ரஜினிக்கும் அவரும், அவருக்கு ரஜினியும் தேவைப்படுகிறார்கள். கூடவே அதிகாரத்தின் முன் சட்டென பணிகிற சுபாவம். நாம் இதை மட்டமாக எடை போடுகிறோம். ரஜினியிடம் அதிகாரத்திடம் பணியும் இயல்பு ஆரம்பத்திலேயே உண்டு. அதை நான் ஒரு மோசமான குணமாக கருதவில்லை. அதுவே அவரது ‘நல்லியல்பு’. (ரஜினி எதிர்கொண்ட அதிகாரம் என்பதை முதலீட்டியம், ஊடகம், வெகுஜன மனநிலை, கடைசியாக வலதுசாரி அரசியல் எனப் புரிந்து கொள்ளலாம்.) இந்த நல்லியல்பைக் கொண்டே அவர் அவர் இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்து சேர்ந்து அதை தக்க வைத்துக் கொள்ளவும் செய்கிறார்.

ரஜினியின் ‘உறுதியற்ற அரசியல்’, ரஜினியின் ‘சந்தர்ப்பவாதம்’ நம்மை ஏன் எரிச்சல்படுத்துகிறதென்றால் அது நமது பலவீனத்தை அம்பலப் படுத்துகிறது என்பதால் தான். நம்மில் சித்தாந்த உறுதியுடன், கொள்கையுடன் இருப்பவர்களாக நினைப்பவர்கள் பலரும் சின்னச்சின்ன மத்திய வர்க்க வளைகளுக்குள் ஏகப்பட்ட சமரசங்கள், அவமானங்கள் மத்தியில் வாழ்பவர்கள். அந்த தாழ்வுணர்வை இம்மாதிரியான அரசியல் சரித்தன்மை, கொள்கைக் குன்று மனப்பான்மையைக் கொண்டு சரிசெய்ய நினைக்கிறோம்.

இன்னொரு பக்கம் நமது நம்பிக்கைகளும் விழுமியங்களும் வாழ்க்கையில் ‘எதிரொலிக்க’ வேண்டும் என ஆசைப்பட்டுக் கொண்டே அது நிகழாத போது முகத்தைத் திருப்பிக் கொண்டு நடக்கிறோம். ஊடகங்களில் நமது ஏமாற்றத்துக்கான வடிகாலாக இது போன்ற செய்திகளை பயன்படுத்திக் கொள்கிறோம். அதற்குப் பதிலாக இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கடந்து போவதோ அல்லது வெற்றி பெற்றவர்களின் இத்தகைய சாகசங்களின் நோக்கம், பலன் என்னவென கவனித்துப் புரிந்து கொள்வதோ, முடிந்தால் அதை வைத்து நம் வாழ்வில் முன்னேறுவதோ, நம் பிள்ளைகளுக்கு சொல்லித் தருவதுவோ தான் சாலச்சிறந்தது.

உலகின் தலைசிறந்த நலம் சுயநலம். உலகம் சுயநலவாதிகளையே நேசிக்கிறது. அவர்களையே சுற்றியே மக்கள் திரள்கிறார்கள். அது மட்டுமல்ல, நம்மைத் தாண்டி இந்த உலகில் நிகழும் எந்தவொரு பிரச்சினைக்கும் நம்மால் ஒன்றுமே செய்யவியலாது. நம்முடைய பிரச்சினைகளை கவனித்து சரிசெய்வது மட்டுமே நமது லட்சியமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அடுத்தவர்களைப் பற்றி நாம் கவலைப்படுவதால் அவர்களுக்கும் பிரயோஜனமில்லை. நம் பிரச்சினைகளை அடுத்தவர்கள் வந்து சரிசெய்யவும் போவதில்லை. சமூக ஊடகங்கள் வந்ததும் இந்த எளிய உண்மை,
தெருவில் வடை சுட்டு விற்கும் பாட்டிக்குத் தெரிந்த இந்த எளிய உண்மை பெரிய படிப்பு படித்தவர்களுக்கு தெரியாமல் போகிறது. இன்னொருவரின் சுயநலத்தை தர்மாவேசம் கொண்டு விமர்சிப்பதும் கிண்டலடிப்பதும் வெறும் சுயஏமாற்று மட்டுமே. நமது காலம் அப்படியான சுயஏமாற்றுதலின் பெரும் கேளிக்கையாக இருக்கிறது. ரஜினி யோகியின் காலில் விழுவதை விட இதுவே பெரிய அவலம். என் உலகில் ரஜினியோ, யோகியோ, காலில் விழும், காலைக் கழுவும், காலை சொறியும், காலால் மிதிக்கும், காலை மிதிக்கும், காலை முத்தமிடும் யாரும் இல்லை. எனக்கு யாரைப் பற்றியும் கவலையில்லை.

அபிலாஷ் சந்திரன்

Related Posts