பிருந்தாவனமும் பொது சிவில் சட்டமும்..!
பிருந்தாவன் என்றதும் கூடவே நந்தகுமாரா எனச் சொல்லும் அளவு அது ஒரு மதம் சார்ந்த இடம். இதுதான் பொதுவாக எல்லோருக்கும் தெரியும். அங்கே பல்லாயிரக்கணக்கான கைம்பெண்கள் ஒரு வேளைச் சோற்றுக்காகக் கோவில் வாசலில் காத்துக் கிடப்பதை அறிவீர்களா ? உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இருந்து இங்கு கட்டாயமாகக் கொண்டு போய் விடப்பட்ட இளம் கைம்பெண்களும் முதிய பெண்களும் இதில் அடக்கம். விதவை மறுமணச் சட்டம் அமலாகி மாமாங்கம் ஆனாலும், இந்து மேல் சாதியார் மத்தியில் இன்னமும் மனம் விசாலமாகவில்லை. அது குறுகிப் போய்க் கிடப்பதன் சாட்சியே இது .
திமுக வைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா ஒரு முறை இந்தக் கைம்பெண்களுக்கு மறு வாழ்வளிக்க ஒரு தனிநபர் சட்ட முன் வடிவை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்து கல்லும் உருக உரையாற்றினார் . கல்லை விடக் கடினமான டிமோ கூட்டம் மவுனமாய் இருந்து அதை முற்றிலும் நிராகரித்தது. அதுவும் பாருங்கள், தமிழ் நாட்டில் இருந்துதான் இப்படியான குரல் எழ வேண்டியிருக்கிறது. வடக்கு மடமையிலும் சனாதன இருட்டிலும் மூழ்கிக் கிடக்கிறது.
பொது சிவில் சட்டம் பேசும் புண்ணியவான்கள் ! இந்தக் கைம்பெண்கள் மறுவாழ்வு குறித்து ஏதேனும் பேசுவார்களா ? ஹரே கிருஷ்ணா மடம் கொஞ்சம் சோறு போடுகிறது, புடவை வாங்கிக் கொடுக்கிறது என்பதல்ல மறு வாழ்வு என்பது. அவர்களைச் சக மனுஷியாய் சகல உரிமையோடும் வாழ வைப்பதுதான் மெய்யான மறு வாழ்வு ? அது எப்போது ? குழந்தைத் திருமணச் சட்டம், வரதட்சணை ஒழிப்புச் சட்டம் எல்லாம் இருக்கிறது. ஆயின் வரதட்சணை வாங்காத திருமணங்கள் எத்தனை நடக்கிறது என்று மனதை விட்டுச் சொல்லுங்கள் பார்க்கலாம் ! வரதட்சணைக் கொலைகள் இன்னமும் குறையவில்லையே !
இன்னும் குழந்தைத் திருமணங்கள் சிதம்பரத்தில் தீட்சிதர்களால் நடத்தப்படுகின்றனவே ! ஆளுநர் ரவி அதனை உச்சி முகர்ந்து புளகாங்கிதம் அடைகிறாரே ! இப்படி திருமணம் செய்யும் அயோக்கியர்களுக்குச் சங்கிகள் வக்காலத்து வேறு வாங்குகிறார்களே ! அட்சய திரிதியை எனும் தங்கம் வாங்கும் நாள் வடக்கில் குழந்தைத் திருமணத்திற்கு உரிய நாளாகக் கொண்டாடப்படுவதல்லவா ?
கணவன் இறந்ததும் மனைவியை உடன் கட்டை ஏற்றும் சதி மாதா இன்னும் வடக்கில் கொண்டாடப்படுவதேன் ?
ஓர் இந்து இன்னொரு இந்துவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டாலே, சாதியக் கொடுவாளைச் சுழற்றும் கொடுமையும் தொடர்கிறதே !
சாதி, மதம், இனம் பாராமல் அன்பு மனங்கள் இணைந்து அச்சமின்றித் திருமணம் புரியும் நாள் எந்நாள் ?
பாலினச் சமத்துவத்திற்கும் மனித உரிமைக்கும் இன்னும் செய்ய வேண்டியவை ஆயிரம் இருக்கின்றன ; அதை எல்லாம் விடுத்துப் பொது சிவில் சட்டம் என டிமோ கூட்டத்தார் குதிப்பது ஏன் ? மோதலையும் வெறுப்பையும் விதைத்து வாக்குகளை அறுவடை செய்யவும் ; பார்ப்பனிய மேலாண்மையும் வர்ணாஸ்ரம ஒடுக்கு முறையும் மேலோங்கிய சனாதன இந்துராஷ்டிரம் நோக்கிய நகர்வே இது .
வேறென்ன சொல்ல….?


