மகாராஷ்ட்ராவில் திடீர் திருப்பம் : அஜித் பவார் துணை முதல்வரானார்!
மகாராஷ்ட்ரா மாநில அரசியலில் திடீர் திருப்பமாக அஜித் பவார் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சிவசேனா- பாஜக கூட்டணியில் இன்று இணைந்து கொண்டார். மேலும் அம்மாநில கவர்னர் மாளிகையில் நடைபெற்ற திடீர் பதவியேற்பு விழாவில் அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அம்மாநில கவர்னர் ரமேஷ் இவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அஜித் பவாருடன் சேர்த்து 9 தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டனர். இந்த விழாவில் மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சரான பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் உடன் இருந்தனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உள்ள நிலையில், கட்சி தலைமையின் நடவடிக்கையின் மீது அஜித் பவாருக்கும் சமீப காலமாக அதிருப்தி நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது. இந்த சூழலில் மூத்த அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, தனக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏக்களை, தன் பக்கம் இழுத்து, பாஜகவுடன் இணைந்து மாநிலத்தின் முதலமைச்சரானார். அதேபோல் மகாராஷ்டிராவின் பலம் வாய்ந்த கட்சிகளில் ஒன்றான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாருக்கும், அவரது கட்சியின் முக்கியத் தலைவர்களின் ஒருவருமான அஜித் பவாருக்கும் இடையே பூசல் நிலவி வந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் சரத் பவாரின் NCP கட்சி உடைந்தது. அந்த கட்சியின் கிட்டத்தட்ட 3/4 பங்கு சட்டமன்ற உறுப்பினர்களுடன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார் அஜித் பவார். சரத் பவருக்கு மிக நெருக்கமான ப்ராஃபுல் பட்டேல் போன்றோரும் பிரிந்து வந்தனர். பட்னாவில் நடந்த கூட்டத்தில் சரத் பவார் ராகுல் காந்தியுடன் இணைந்து பிரதமர் மோடியை வீழ்த்த பேச்சுவார்த்தை நடத்தியது அக்கட்சியின் உறுப்பினர்களுக்கு அதிருப்தி ஏற்படுத்தியுள்ளதாம்
இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சரத்பவார் அக்கட்சியில் இருந்து தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 29 பேருடன் ஷிண்டே அரசுக்கு அஜித் பவார் ஆதரவு தெரிவித்துள்ளார். ஏற்கனவே பட்னாவிஸ் துணை முதல்வராக உள்ள நிலையில் அஜித் பவாரும் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 8 பேருக்கு கவர்னர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். பதவியேற்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார், “மகாராஷ்டிராவின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடுவோம். அதனால்தான் இந்த முடிவை எடுத்துள்ளோம். அனைத்து தேர்தல்களிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி பெயரிலேயே போட்டியிடுவோம்” எனக் கூறினார்.
அதே சமயம் இந்த பதவியேற்புக் குறித்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், “மகாராஷ்டிராவில் இரட்டை இன்ஜின் ஆட்சி பிரதமர் மோடி தலைமையில் நடந்துவரும் நிலையில் அஜித் பவார் வருகையால் இந்த ஆட்சிக்கு மூன்றாவது இன்ஜின் கிடைத்துள்ளது. மாநிலத்தின் வளர்ச்சிக்காக இந்த ஆட்சியில் இணைந்த அஜித் பவார் மற்றும் பிற தலைவர்களையும் வரவேற்கிறோம். தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் அனுபவம் மாநிலத்தை மேலும் வலிமையாக்க உதவும்” என்றார்.
ஆக மஹாராஷ்டிராவில் கடந்த இரண்டு வருடத்தில் சிவசேனா,தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பாஜக பிளவை ஏற்படுத்தி இருக்கிறது. 2019 ஆம் ஆண்டு பாஜக – சிவசேனா ஆட்சியை தேசிய வாத காங்கிரஸ் , காங்கிரஸ் கூட்டணி உடைத்த நிலையில் மீண்டும் பாஜக பழிதீர்த்து இருக்கிறது என்பதும் கடந்த 4 ஆண்டுகளில் இதே அஜித் பவார் மூன்று அரசில் துணை முதல்வராக இருந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


