June 1, 2023

இதெல்லாம் ரொம்ப தப்பு போக்குவரத்து ஊழியர்களே!

நாகர்கோவிலில் இருந்து நெல்லை வந்த அரசுப் பேருந்தில் இருந்து நரிக்குறவர் இனத்தைச் சார்ந்த மூன்று பேரை நடத்துனர் இறக்கிவிட்ட வீடியோவை வைத்து அந்தப் பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். உடனடி பணி நீக்கத்திற்குக் காரணம்… சில நாட்களுக்கு முன்பு அதே நாகர்கோவிலில் மீன் கூடையோடு ஏறிய ஒரு பாட்டியை அனுமதிக்க மறுத்தது வைரல் ஆகியிருந்தது. அதற்கு தமிழக முதல்வர் வருத்தம் தெரிவித்திருந்தார், போக்குவரத்துக் கழக உயரதிகாரி அந்தப் பெண்ணிடம் நேரிடையாகச் சென்று மன்னிப்பு கோரினார். குறிப்பிட்ட அந்தப் பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மீன் வியாபாரம் செய்த பெண்ணை ஏற்ற மறுத்தது மிகக் கடுமையான குற்றம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் நரிக்குறவர் குடும்பத்தை இறக்கிவிட்டத்தற்கான காரணமாக, அவர்கள் பேருந்துக்குள் தங்களுக்குள் சண்டையிட்டதுதான் காரணம் எனக் கூறப்பட்டுள்ளது. அப்படியான காட்சி எதும் வெளியானதா எனத் தெரியவில்லை. ஆனால் இறக்கிவிடப்பட்ட காட்சி மட்டும் வெளியாகியிருக்கின்றது. பொதுவாக பேருந்தில் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்பவர்களை, மதுபோதையில் தாறுமாறாக நடந்து கொள்கின்றவர்களை இறக்கிவிடுங்கள் என்று மற்ற பயணிகள் அழுத்தம் தருவது வாடிக்கை. பேருந்திற்குள் ஏதேனும் நடந்தால் அதற்கு நடத்துனர் மற்றும் ஓட்டுனரே முழுப்பொறுப்பேற்க வேண்டிய நிலை இங்குண்டு.

மேற்கூறியவர்களால் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தபிறகு, பொறுப்பாளியாக்கப்படும் நடத்துனர், ஓட்டுனரிடம் காவல்துறை முதற்கொண்டு போக்குவரத்துக் கழகம் மற்றும் பொதுமக்கள் வரை சொல்வது “முதல்லய எறக்கிவிட்டிருக்க வேண்டியதுதானே!” என்பதுதான். ஆக, இப்படியான சிக்கல்களுக்குத் தீர்வு இதுதான் என்று எந்த வழிகாட்டுதலும் இல்லை. அதையொட்டி இதுவரை கடைப்பிடித்து வந்த வழக்கமான முறையில் “மொதல்ல வண்டியிலிருந்து கீழ எறங்கு” என இறக்கிவிடப்பட்டிருக்கலாம். இது அனுமானம்தான். உண்மை என்னவென்று தெரியாத சூழலில் இது சரி தவறு என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

ஆகவே அவர்கள் உடனடியாக பணி இடை நீக்கம் செய்யப்பட்டதற்கு முன்பு தீர விசாரித்து, எச்சரிக்கை செய்யப் பட்டிருக்கலாம். ஒருவேளை நடத்துனரிடம் தவறு இருந்திருந்தால் தகுந்த நடவடிக்கை எடுத்திருக்கலாம். அத்தோடு, பயணிகளிடம் நிதானமாக நடந்துகொள்ளுமாறு ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு கூடுதல் அறிவுறுத்தல்கள், ஆலோசனைகள் வழங்க வேண்டும். குறிப்பாக கோவிட் காலத்தின் பின்பு இது மிக முக்கியத் தேவையாக மாறியுள்ளது. யாரும் கவனம் கொடுத்தபாடில்லை. சமீபத்தில் வெளியான, மாணவர்கள் படியில் தொங்கினால் ஓட்டுனர், நடத்துனர் மீது நடவடிக்கை என்பதுவும் சர்ச்சைக்குரிய எச்சரிக்கைதான்.

அடுத்து, பேருந்திற்குள் எது நடந்தாலும் அவர்களையே பொறுப்பாளிகள் ஆக்காத வண்ணம், சில நெறிமுறைகள் பொறுப்பாக வழங்கப்பட வேண்டும். முக்கியமாக அனைத்துப் பேருந்துகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். இது போன்ற பல்வேறு மாற்றங்கள், காலத்தின் தேவைக்கேற்ப உடனடியாகச் செய்யப்பட வேண்டும்.

இந்த நிலையில், நரிக்குறவர்களை இறக்கி விட்ட நடத்துனர், ஓட்டுனரை பணி இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டிக்கும் (அ) கிண்டல் செய்யும் வகையில், பெரம்பூர் பேருந்து பணிமனையில் ஒரு நரிக்குறவர் (அ) இருளர் தம்பதியினருக்கு… பாதங்களில் பால் அபிஷேகம் செய்து, பாதத்தில் மஞ்சள் பூசி, விபூதி சந்தனம் வைத்து, மாலையிட்டு, கற்பூரம் ஏற்றி ஆரத்தி எடுத்து பேருந்திற்குள் ஏற்றும் காட்சியைப் பார்த்தது பேரதிர்ச்சியாக இருந்தது.

”ஓ… அவங்கள எறக்கிவிட்டா சஸ்பெண்ட் செய்வியா… அப்ப இனிமே நாங்க நரிக்குறவர்களுக்கு பாலபிஷேசம் செய்து விபூதி குங்குமம் வைத்து, ஆரத்தி எடுக்கணுமோ!?” எனும் அறைகூவல், நக்கல் அது. அவர்களின் நோக்கம் போக்குவரத்துக் கழகத்தை, அரசாங்கத்தை எதிர்ப்பது – கவனம் ஈர்ப்பது – எரிச்சலூட்டுவது என்றிருந்தால், அவர்களில் சிலர் அப்படி வேடமிட்டு நடித்திருந்திருக்கலாம். அதைவிடுத்து அந்த நிலையில் இருக்கும் இரண்டு பேரை அழைத்து அவ்வாறு செய்திருப்பது மனிதத் தன்மையற்ற செயல். அந்தச் செயலைச் செய்தவர்கள் இளையவர்களோ, அனுபவம் இல்லாதவர்களோ கிடையாது. அனைவரும் நீல உடுப்பு அணிந்திருப்பவர்கள், அதாவது குறைந்தபட்சம் 15 ஆண்டுகாலம் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றியிருப்பவர்கள். இவர்கள் மீது போக்குவரத்துக் கழகம், மனித உரிமை ஆணையம், காவல்துறை முறையான பிரிவுகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யாருக்கோ எதிர்ப்புக் காட்ட, விளிம்பு நிலையில் இருப்பவர்களை பாத்திரங்களாக்கி அவர்களுக்கு ஒருபோதும் வழங்கிடாத, தேவையில்லாத மரியாதையை வழங்குவதாக பாசாங்கு செய்து இழிவு படுத்தக்கூடாது.

– ஈரோடு கதிர்