உ.பி. வன்முறைகள்: பொதுநல வழக்காக சுப்ரீம் கோர்ட் விசாரணை!

உ.பி ஸ்டேட்டில் உள்ள லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் டிக்கூனியா கிராமத்தில் இடம்பெற்ற வன்முறைகள் மீதான விசாரணையில் சுப்ரீம் கோர்ட் மாநில அரசையும் மாநில போலீசாரையும் கட்டுப்படுத்தும் உத்தரவுகளை வழங்க வேண்டும் அங்கு சட்டத்தின் ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறி இரண்டு வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த கடிதத்தை பொதுநல மனுவாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு செய்துள்ளது.
லக்கிம்பூர் கேரியில் இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக 8 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 4 பேர் விவசாயிகள். இந்த வன்முறைகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி வழக்கறிஞர்கள் சிவக்குமார் திரிபாதி மற்றும் சி எஸ் பண்டா சுப்ரீம் கோர்ட்டிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்கள். அந்த கடிதத்தை பொது நல மனுவாக பதிவுசெய்து விசாரணை துவக்கும் படி பதிவாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தகவல் தொடர்பில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக லக்கிம்பூர் கேரி சம்பவங்கள் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட் தானாக மேற்கொள்ளும் வழக்கு என செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தவறு. வழக்கறிஞர்கள் கடிதத்தை பொது நல மனுவாக பதிவு செய்து, வழக்கு விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் பொதுநல மனு அடிப்படையிலான வழக்கு என்று துவக்கத்திலேயே சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என் .வி.ரமணா தெளிவுபடுத்தினார். இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையில் நீதிபதிகள் சூரியகாந்த், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை விசாரணை செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
வழக்கறிஞர்கள் இருவரும் தங்களுடைய கடிதத்தில் கூறியுள்ள விவரங்கள் வருமாறு:
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து எல்லா பத்திரிக்கைகளிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. சமீப காலத்தில் இந்தியாவில் வன்முறை என்பது அரசியல் கலாசாரமாக மாறிவிட்டது. வன்முறைகள் மலிந்துவிட்ட உத்தரபிரதேசத்தில் சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பது மிகவும் அவசியமான நடவடிக்கையாகும். உத்தரபிரதேச அரசுக்கும் அதன் அதிகாரிகளுக்கும் அவர்களது செயல்களை கட்டுப்படுத்த உத்தரவுகளை சுப்ரீம் கோர்ட் பிறப்பிப்பது அவசியம்.
அதே சமயம் சட்டத்தை உடைக்கும் போலீசாரையும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். அதன் மூலம் உடனடியாக உத்தரப்பிரதேச போலீசாரின் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இயலும் என்று வழக்கறிஞர்கள் இருவரும் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்கள்.
இந்த வழக்கு விசாரணையில் உத்தரப்பிரதேச மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் லக்கிம்பூர் கேரி வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? அதில் யார் யாருடைய பெயர்கள் இடம்பெறுகின்றன?
அவர்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் என்னென்ன? அவர்களில் யார் யார் கைது செய்யப்பட்டுள்ளனர்?
ஆகிய விவரங்கள் அனைத்தும் அடங்கிய வழக்கு விசாரணை நிலவர அறிக்கையை நாளை விசாரணைக்கு முன்பாக தாக்கல் செய்ய வேண்டும்.
நாளை உச்சநீதிமன்றம் மீண்டும் விசாரணையை துவக்கும் என்று தலைமை நீதிபதி ரமணா தெரிவித்தார்.