அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை : முதல்வர் தொடங்கி வைத்தார்!

அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை : முதல்வர் தொடங்கி வைத்தார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (11–ந் தேதி) சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் ஒருகாலப் பூஜைத் திட்டத்தின்கீழ் உள்ள 12 ஆயிரத்து 959 கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அமைச்சர் பி.கே. சேகர்பாபு 24 மணி நேரமும் செயல்படக்கூடியவர். எள் என்பதற்கு முன் எண்ணையாக நிற்கக் கூடியவர். அவர் சேகர்பாபு அல்ல. ‘செயல்பாபு’ என்று அமைச்சர் சேகர்பாபுவின் விரைவான செயல்பாட்டுக்கு முதலமைச்சர் புகழாரம் சூட்டினார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் திருக்கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் சந்தித்த பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அதில் இருந்து அவர்களையும், அவர்கள் குடும்பத்தினரையும் மீட்டெடுக்கும் பொருட்டு துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருக்கோவில்களில் நிலையான மாத வருவாயின்றி பணியாற்றி வந்த அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருள்களுடன் ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டது, இதன்மூலம் சுமார் 11 ஆயிரத்து 65 திருக்கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்பெற்றுள்ளனர். மேலும், அர்ச்சகர்கள் மற்றும் கோவில் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் 6 இடங்களில் ரூபாய் 21 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

திருக்கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மாத வருவாயின்றி பணியாற்றி வந்தது தெரியவந்தது. அதன்படி கடந்த 4.9.2021 அன்று இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையின்போது ஒருகாலப் பூஜை திட்டத்தின்கீழ் உள்ள 12 ஆயிரத்து 959 திருக்கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூபாய் 1,000 – வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் இன்று மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, பேசியதாவது:–

நான் இங்கே பேருரையாற்ற வரவில்லை, சுருக்க உரையாற்ற வந்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு, மகாகவி பாரதியாருடைய நினைவு நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செய்ய, அவரது சிலைக்கு வணக்கம் செலுத்த நான் சென்றாக வேண்டும். எனவே, சுருக்கமாக எனது உரையை முடிக்க விரும்புகிறேன்.

நம்முடைய அறநிலையத் துறை அமைச்சராக இருக்கக் கூடிய சேகர்பாபு இந்த அறநிலையத்துறையினுடைய பொறுப்பை ஏற்றுக் கொண்டு அவர் எப்படி எல்லாம் பணியாற்றி கொண்டு இருக்கிறார் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். உள்ளபடியே அவரை சேகர்பாபு என்று அழைப்பதைவிட “செயல்பாபு” என்று தான் அழைக்க வேண்டும் என்று நான் கருதிக் கொண்டு இருக்கிறேன். அந்தப் பெயருக்கு முழுத் தகுதி படைத்தவராக அவர் விளங்கி கொண்டு இருக்கிறார். அதற்கு இந்த நிகழ்ச்சியே சான்றாக அமைந்து இருக்கிறது.

சட்டமன்றத்தில் திட்டத்தை அறிவித்து ஒரு வாரம் தான் ஆகிறது. இன்னும் சட்டமன்றமே முடியவில்லை, 13–ம் தேதி தான் முடிவடைகிறது. சட்டமன்றத்தில் அறிவித்து ஒரு வாரம் ஆவதற்கு முன்னாலேயே இந்தத் திட்டத்தை செயல்படுத்தியவர் சேகர்பாபு தான்.

நாம் அடிக்கடி சொல்வோம், ‘எள் என்றால், எண்ணெய் ஆக நிற்பார்’ என்று. சேகர்பாபுவைப் பொறுத்தவரையில் எள் என்று சொல்வதற்கு முன்னாலேயே எண்ணெய் ஆக நிற்கக் கூடியவர் நமது அருமை நண்பர் சேகர்பாபு.

இங்கே அமைச்சர்கள் வேலு இருக்கின்றார், மா.சுப்பிரமணியன் இருக்கின்றார். அவர்கள் தப்பாக நினைக்க மாட்டார்கள். நான் உரிமையோடு சொல்கிறேன். உண்மையில் சொல்ல வேண்டுமானால், இந்த, இந்து சமய அறநிலையத் துறை கொடுத்து வைத்த துறையாக சேகர்பாபுவால் மாற்றப்பட்டு இருக்கிறது. 24 மணி நேரமும் செயல்படக் கூடிய அமைச்சராக நம்முடைய அமைச்சர் சேகர்பாபு விளங்கி கொண்டு இருக்கிறார்.

தொலைகாட்சியில் பார்க்கிறீர்கள், பத்திரிகைகளில் நீங்கள் பார்க்கிறீர்கள். கோவில் நிலங்கள் மீட்கப்படுகின்றன. கோவில் சொத்துக்களும் மீட்கப்படுகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. தமிழில் வழிபாடு செய்யப்படக்கூடிய ஒரு அற்புதம் இந்த துறையின் மூலமாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

இறைவனைப் போற்றும் போற்றிப் பாடல் புத்தகங்கள் வெளியாகி உள்ளது. அர்ச்சகர்களுக்கு நான்காயிரம் ரூபாய் நிதி தரப்பட்டுள்ளது. பதினைந்து வகையான பொருட்கள் தரப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு அற்புதத்தை நான் சொல்லியாக வேண்டும். இந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, ஒவ்வொரு துறையினுடைய மானியக் கோரிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, விவாதம் நடந்து, அவைகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டு கொண்டு இருக்கிறது, தாக்கல் செய்யப்பட்டு கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு துறையின் சார்பில் ஒவ்வொரு அமைச்சர்களும், அவரவர்களுடைய துறையின் சார்பில் என்ன செய்யப் போகிறோம் என்பதை அறிவிப்புகளாக வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் அறநிலையத் துறையின் சார்பில் நம்முடைய சேகர்பாபு இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பதிலளித்து பேசி அதற்கு பிறகு அறிவிப்புகளை வெளியிட்டார். எவ்வளவு அறிவிப்புகள் என்று கேட்டீர்களானால், இதுவரை யாரும் செய்யாத, சட்டமன்றத்திலே இதுவரை இல்லாத வகையில், 120 அறிவிப்புகளை நம்முடைய சேகர்பாபு சட்டமன்றத்தில் அறிவித்தார். இது ஒரு பெரிய சாதனை. ஏராளமான கோயில் திருப்பணிகள் நடக்க இருக்கிறது. புதிய தேர்கள் வலம் வரப் போகின்றன. அதுமட்டுமல்ல, இதுவரைக்கும் இல்லாத வகையிலே, திருக்கோவில் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன. அதுதான் மிகமிக முக்கியமான ஒன்று.

அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டித் தரப்பட உள்ளன. இவை அனைத்தும் செய்து முடிக்கப்பட்டால் அறநிலையத் துறையின் பொற்காலம் இன்னும் சில மாதங்களில் உருவாகப் போகிறது, அந்தக் காட்சியை நாம் பார்க்கத்தான் போகிறோம்.

அந்த வரிசையில் இன்றைய நாள், ஒருகால பூஜை திட்டத்தின்கீழ் உள்ள 12 ஆயிரத்து 959 கோவில்களைச் சேர்ந்த அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை நான் தொடங்கி வைத்துள்ளேன். இதன்மூலமாக அரசுக்கு ஆண்டு தோறும் 13 கோடி ரூபாய் கூடுதலாகச் செலவாகும். இதை செலவு என்று நான் சொல்ல விரும்பவில்லை. இதன்மூலமாக ஏறத்தாழ 13 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வு பெறுகிறார்கள் என்பதை நினைத்து பெருமைப்படுகிறோம்.

ஒருகால பூஜை நடக்கும் கோயில்களுக்கான வைப்பு நிதி 2 லட்சம் ரூபாயாக அதிகரித்தும் தரப்பட்டுள்ளது. இதன்மூலமாக ஒருகால பூஜை நடக்கும் கோயில்களில் வழிபாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குப் பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளின் வாழ்க்கைக்கும் உத்தரவாதம் தரப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நான் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறேன்.

‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்றார் பேரறிஞர் அண்ணா. இன்றைக்கு மகாகவி பாரதியாரின் நினைவு நாள் ஆகும்.

‘சிறியரை மேம்படச் செய்தால் – பின்பு

எல்லோரையும் தெய்வம் வாழ்த்தும்’ என்று மகாகவி பாரதி எழுதினார்.

அமைச்சர்கள், அதிகாரிகள் கண்காணிப்பு

அந்த அடிப்படையில் தமிழ்நாடு அரசு ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளது. சட்டமன்றக் கூட்டத் தொடர் வருகிற 13–ம் தேதி முடிய இருக்கிறது. அதன்பிறகு சட்டமன்றத்தில் என்னென்ன அறிவிப்புகளை செய்திருக்கிறோமோ, அவற்றை எல்லாம் படிப்படியாக ஒவ்வொன்றாக நிறைவேற்ற அதற்கான திட்டங்களை நாங்கள் வகுத்து இருக்கிறோம். வெறும் அறிவிப்போடு எந்த திட்டமும் நின்றுவிடாது, அதனை மாதந்தோறும், ஆய்வுக் கூட்டங்களை அவ்வப்போது நடத்தி அமைச்சர்களையும் அதிகாரிகளையும் நான் கண்காணிக்க போகிறேன். ஒவ்வொரு திட்டங்களுக்கும் நான் முன்னுரிமை கொடுத்து, அதையெல்லாம் நிறைவேற்றுகின்ற முயற்சியிலே ஈடுபட போகிறேன். அனைத்து அறிவிப்புகளையும் நிறைவேற்றுவேன்

அனைத்துத் துறைகளையும் முந்திக்கொண்டு இப்போது நம்முடைய அமைச்சர் ‘செயல்பாபு’ அவரது துறை சார்பில் திட்டத்தை தொடங்கிவிட்டார். இன்னும் சட்டமன்றம் முடிந்து, ஆய்வுக் கூட்டம் நடத்தப்படவில்லை, அதற்கு முன்பே ஒரு வார காலத்தில் இந்த திட்டத்தை தொடங்கி இருக்கிறார் என்றால் அவர் சேகர்பாபு அல்ல, செயல்பாபு என்பதை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொண்டு, அனைத்து அறிவிப்புகளையும் நிச்சயமாக நான் நிறைவேற்றுவேன் என்ற உறுதியை தந்து, உங்கள் அனைவருக்கும் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்.:இவ்வாறு மு.க. ஸ்டாலின் கூறினார்.

error: Content is protected !!